No products in the cart.
ஆகஸ்ட் 07 – வேலையில் பரிசுத்தம்!
“நீங்கள் புசித்தாலும், குடித்தாலும், எதைச் செய்தாலும் எல்லாவற்றையும் தேவனுடைய மகிமைக்கென்று செய்யுங்கள்” (1 கொரி. 10:31).
நீங்கள் எதைச் செய்தாலும் அதைப் பரிசுத்தமாய்ச் செய்ய முற்படுங்கள். ஏனென்றால், அந்த வேலையைக் கொடுத்தவர் நம் அருமை ஆண்டவர். அந்த வேலையிலே நீங்கள் உண்மையும், உத்தமமுமாய் இருங்கள். பழைய ஏற்பாட்டிலே, “அந்நாளிலே குதிரைகளின் மணிகளிலே கர்த்தருக்குப் பரிசுத்தம் என்னும் விலாசம் எழுதியிருக்கும்; கர்த்தருடைய ஆலயத்திலுள்ள பானைகள் பலிபீடத்துக்கு முன்பாக இருக்கிற பாத்திரங்களைப் போலிருக்கும்” (சகரியா 14:20) என்று ஒரு வசனம் இருக்கிறது.
குதிரைகளின் மணிகளிலே கர்த்தருடைய பரிசுத்தம் என்று எழுதி இருக்குமாம். குதிரைகள் பொதுவாக யுத்தத்திற்கு பயன்படுத்தப்படுகிற ஒரு மிருகம். மட்டுமல்ல, வண்டி இழுக்கவும், வயல்வெளிகளிலும்கூட அதை பயன்படுத்துகிறார்கள். இது வெளி இடத்தில் நீங்கள் செய்கிற வேலையைக் காண்பிக்கிறது. எருசலேம் ஆலயத்தின் பானைகள் எல்லாம் சேனைகளின் கர்த்தருக்குப் பரிசுத்தமாய் இருக்க வேண்டுமாம். வெளியே மட்டுமல்லாமல் வீட்டுக்குள்ளே இருக்கக்கூடிய வேலைகளிலும்கூட பரிசுத்தம் பிரதிபலிக்க வேண்டும் என்பதை இது காண்பிக்கிறது. உலகப்பிரகாரமான வேலை, கர்த்தருடைய வேலை என எதைச் செய்தாலும் அதை கர்த்தருக்கென்று பரிசுத்தமாய் செய்ய வேண்டும்.
வீடு கழுவிக்கொண்டிருக்கும்போதே உங்கள் உள்ளம் ‘ஆண்டவரே, என் உள்ளத்தைக் கழுவி பரிசுத்தமாக்கும்’ என்று சொல்லட்டும். தோட்டத்தில் செடிகளை பராமரிக்கும்போதே ‘ஆண்டவரே, என்னைக் கனிதரும் செடியாக வழிநடத்தும்’ என்று கேளுங்கள். நீங்கள் மருத்துவராகவோ, இஞ்சினியராகவோ பணியாற்றலாம் அல்லது வியாபாரத்தில் ஈடுபடலாம். எதைச் செய்தாலும் சரி, நீங்கள் ஜீவனுள்ள தேவனை சேவிக்கிறவர்கள் என்பதை உங்களது பரிசுத்தத்தின் மூலம் உலகம் காணட்டும்.
நமது தேசத்திலே, லட்சக்கணக்கான மக்கள் வேலையில்லாமல் வறுமையில் இருக்கிறார்கள். ஆனால் கர்த்தரோ, கிருபையாக உங்களுக்கு எல்லாவற்றையும் தந்து அருமையாய் போஷித்து வருகிறார். அப்படிப்பட்ட ஆண்டவருக்கு நீங்கள் வேலை ஸ்தலத்திலே சாட்சியுள்ளவர்களாய் விளங்க வேண்டும் அல்லவா?
இயேசு இந்த பூமியிலிருந்தபோதும், இடைவிடாமல் வேலை செய்துகொண்டேயிருந்தார். வாலிப வயதுவரையிலும் தச்சனாக கடினமாய் உழைத்தார். அவர் ஊழியம் செய்ய வந்தபோதும் அதை உற்சாகத்துடன் செய்தார். “பகற்காலமிருக்குமட்டும் நான் என்னை அனுப்பினவருடைய கிரியைகளைச் செய்யவேண்டும்; ஒருவனும் கிரியை செய்யக்கூடாத இராக்காலம் வருகிறது” (யோவான் 9:4) என்பதே அவருடைய இருதயத்தை ஏவி எழுப்பிக்கொண்டிருந்தது. இயேசு களைப்பாகவுமிருந்தார், பசியும், தாகமுமுள்ளவராயுமிருந்தார். ஆனாலும் இரவு என்றும், பகல் என்றும் பாராமல், பரிசுத்த ஊழியத்தை அவர் நிறைவேற்றினார். தேவபிள்ளைகளே, நீங்கள் எதைச் செய்தாலும் அதைப் பரிசுத்தத்துடன் செய்யத் தீர்மானித்து செயல்படுங்கள்.
நினைவிற்கு:- “தன் வேலையில் ஜாக்கிரதையாயிருக்கிறவனை நீ கண்டால், அவன் நீசருக்கு முன்பாக நில்லாமல், ராஜாக்களுக்கு முன்பாக நிற்பான்” (நீதி. 22:29).