No products in the cart.
ஜூன் 28 – அறிவிக்கிறவர்!
“கர்த்தராகிய ஆண்டவர் தீர்க்கதரிசிகளாகிய தம்முடைய ஊழியக்காரருக்குத் தமது இரகசியத்தை வெளிப்படுத்தாமல் ஒரு காரியத்தையும் செய்யார்” (ஆமோஸ் 3:7).
நீங்கள் கர்த்தருக்கு ஊழியம் செய்ய ஒப்புக்கொடுத்து, உங்களால் இயன்ற மட்டும் கர்த்தருடைய பணியை செய்யும்போது, கர்த்தர் உங்களுக்குக் கொடுக்கும் ஆசீர்வாதங்கள் மேன்மையானவை. விசேஷமானவை. அவர் தம்முடைய ஊழியக்காரர்களுக்கு தம் இரகசியங்களை மனம் திறந்து அறிவிக்கிறார்.
வேதத்தில் அநேக ரகசியங்களும், மறைபொருட்களுமுண்டு. கர்த்தர் தமது ரகசியங்களை அப். பவுலுக்கு அறிவித்தபடியினாலே, அவர் தன்னை “தேவ ரகசியங்களின் உக்கிராணக்காரன்” என்று அறிவிக்கிறார். ஆம், தேவனுடைய ரகசியங்களெல்லாம் அவருடைய ஊழியக்காரர்கள் மூலமாகவே வெளிப்படுகின்றன.
சோதோம் கொமோரா பட்டணம் அழிக்கப்படப்போவது அந்த பட்டணத்திலே ஒருவருக்கும் தெரியாமலிருந்தது. ஆனால் கர்த்தரால் அந்த ரகசியத்தை ஆபிரகாமுக்கு மறைத்து வைக்க முடியவில்லை. சோதோம் கொமோராவை நோக்கி வந்தவர் இடையிலே ஆபிரகாமை சந்தித்து, “நான் செய்யப்போகிறதை ஆபிரகாமுக்கு மறைப்பேனோ?” (ஆதி. 18:18) என்று சொல்லி, ஆபிரகாமுக்கு இந்த இரகசியத்தை அறிவிக்கிறதை பார்க்கிறோம்.
நீங்கள் ஜெபத்திலே கர்த்தரோடு மனந்திறந்து பேசும்போது, கர்த்தரும் உங்களிடத்தில் மனந்திறந்து பேசுவார். மட்டுமல்லாமல், ஒளிப்பிடத்திலுள்ள பொக்கிஷங்களையும், மறைக்கப்பட்ட ரகசியங்களையும் உங்களுக்குத் தெரிவிப்பார். பார்வோன் கண்ட சொப்பனம் மறைபொருளாயிருந்தது. பசுக்களைப் பற்றியும், ஏழு கதிர்களைப் பற்றியும் அவர் கண்ட சொப்பனத்திற்கு யாராலும் அர்த்தம் கூற முடியாத சூழ்நிலையிலே, கர்த்தர் அந்த மறைபொருட்களின் ரகசியத்தை தமது ஊழியக்காரனான யோசேப்புக்கு வெளிப்படுத்திக் காண்பித்தார்.
அதுபோலவே, நேபுகாத்நேச்சார் ஒரு நாளில் ஒரு பெரிய சிலையை சொப்பனத்தில் கண்டு கலங்கினபோது, பாபிலோனிலுள்ள எந்த ஞானியாலும்-, குறிசொல்லுகிறவர்களாலும் சொப்பனத்தின் அர்த்தத்தை வெளிப்படுத்த முடியவில்லை. அதே நேரத்தில், கர்த்தர் தானியேலுக்கு இராக்காலத்திலே அந்த சொப்பனத்தின் அர்த்தத்தை வெளிப்படுத்த சித்தமானார். நீங்கள் கர்த்தரில் அன்புகூர்ந்து, அவருடைய ஊழியத்தைச் செய்யும்போது, நிச்சயமாகவே உங்களுக்கு தேவரகசியங்களை வெளிப்படுத்திக் கொடுப்பார்.
அப். யோவானின் வாழ்க்கையைப் பாருங்கள்! கர்த்தர் அவர்மேல் அளவில்லாமல் அன்புகூர்ந்து தம்முடைய ரகசியங்களையெல்லாம் அறிவித்துக் கொடுத்தார். தனியாக பத்மு தீவுக்கு கொண்டு சென்று பரலோகத்தை திறந்து, நிகழ்காலம், வருங்காலம், வரப்போகிற நித்தியம், ஆகியவற்றின் வெளிப்பாடுகளையெல்லாம் கொடுத்தார். தேவபிள்ளைகளே, அந்த தேவன் உங்களுக்கும் மறைபொருட்களை வெளிப்படுத்தித் தருவார். நீங்கள் கர்த்தருடைய மகிமையான ஊழியத்தைச் செய்வதன் மூலம் அப்படிப்பட்ட ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்ள முடியும்.
நினைவிற்கு:- “நான் உங்களைச் சிநேகிதர் என்றேன், ஏனெனில் என் பிதாவினிடத்தில் நான் கேள்விப்பட்ட எல்லாவற்றையும் உங்களுக்கு அறிவித்தேன்” (யோவான் 15:15).