No products in the cart.
ஜூன் 26 – அவர் பெருக வேண்டும்!
“உன்னதத்திலிருந்து வருகிறவர் எல்லாரிலும் மேலானவர்; அவர் பெருகவும் நான் சிறுகவும் வேண்டும்” (யோவான் 3:31,30).
ஸ்திரீகளிடத்திலே பிறந்தவர்களில் யோவானைப் பார்க்கிலும் பெரியவன் ஒருவனும் இல்லை என்று இயேசு சாட்சி கொடுத்தார். ஆனால், அந்த யோவானைப் பாருங்கள். தேவனால் சாட்சி பெற்ற பெரியவராக இருந்தாலும், தேவாதி தேவனுக்கு முன்பாக தன்னைத் தாழ்த்தி, அவர் பெருகவும் நான் சிறுகவும் வேண்டும் என்கிறார்.
யோவான் ஸ்நானகன் அப்படி சொல்லக் காரணம் என்ன? வேதம் சொல்லுகிறது, “உன்னதத்திலிருந்து வருகிறவர் எல்லாரிலும் மேலானவர்; பூமியிலிருந்துண்டானவன் பூமியின் தன்மையுள்ளவனாயிருந்து, பூமிக்கடுத்தவைகளைப் பேசுகிறான்; பரலோகத்திலிருந்து வருகிறவர் எல்லாரிலும் மேலானவர்” (யோவான் 3:31).
ஒரு முறை சாது சுந்தர் சிங் திருவனந்தபுரத்திற்கு ஊழியத்திற்காக சென்றிருந்த போது, அங்கே ஒரு ஏழை சகோதரி மரித்துப் போன தன்னுடைய மகனை தோளில் சுமந்து கொண்டு கதறி அழுதுகொண்டே அவரிடம் வந்தாள். அவளுடைய கண்ணீர் சாது சுந்தர் சிங்கை உருகப் பண்ணிற்று. சாது சுந்தர் சிங் அந்தக் குழந்தையை வாங்கி, தேவனுக்கு நேராக தன்னுடைய கண்களை ஏறெடுத்து, கண்ணீரோடு ஊக்கமாக ஜெபித்தார். அந்த ஜெபத்தைக் கேட்ட கர்த்தர், அற்புதத்தை செய்து குழந்தைக்கு ஜீவனைக் கொடுத்தார். அந்தக் குழந்தையின் கண் திறந்தது. அது தாயின் முகத்தைப் பார்த்து சிரித்தது. தாய்க்கு ஏற்பட்ட சந்தோஷம் சொல்லி முடியாதது.
உடனே அவள் சாது சந்தர் சிங்கின் கால்களில் விழுந்து ‘ஐயா, நீங்களே கண் கண்ட தெய்வம். நீங்கள்தான் உண்மையான கடவுளின் அவதாரம், நீங்கள் என் பிள்ளையை உயிர்ப்பித்து கொடுத்தீர்கள்’ என்று சொல்லி அவருடைய பாதங்களைப் பிடித்துக் கொண்டு வணங்கினாள். அதைக் கண்ட சாதுவின் உள்ளம் குத்துண்டது. ‘அம்மா, நான் ஒரு மனுஷன்தான். என்னை நீங்கள் வணங்கக் கூடாது’ என்று எவ்வளவோ சொல்லியும் அவள் கேட்பதாக இல்லை.
மனம் உடைந்த போது சுந்தர் சிங் ஆண்டவரை நோக்கி, ‘ஆண்டவரே, நீரே ஜீவனுள்ள தேவன். நீரே இந்தக் குழந்தைக்கு ஜீவன் கொடுத்தீர். உம்முடைய நாமத்தினால் தான் இந்தக் குழந்தை உயிரடைந்தது. இப்படியிருக்க, இந்த சகோதரி என்னை வணங்குகிறாளே, என்னை மன்னியும் இந்த சகோதரியையும் மன்னியும்’ என்று கதறினார். மாத்திரமல்ல, ‘ஆண்டவரே இப்படி ஜனங்கள் என்னை வணங்குவார்களென்றால், இனி அற்புதங்களைச் செய்கிற வரங்கள் எனக்கு வேண்டாம்’ என்று சொல்லிவிட்டார்.
நீங்கள் எப்பொழுதும் உங்களைத் தாழ்த்தி, கர்த்தரையே உயர்த்துவீர்களாக. உங்களுடைய வாழ்க்கையிலும், ஊழியத்திலும் கர்த்தரே பெரியவராயிருக்கட்டும். ஒருபோதும் மக்களை உங்கள் பக்கம் இழுக்க முயற்சிக்காதேயுங்கள். அவர்களை கர்த்தருடைய பாதத்தண்டை கிட்டிச் சேர்ப்பீர்களாக. அப்பொழுது கர்த்தர் உங்களை ஆசீர்வதித்து மகிமைப்படுத்துவார். நான் சிறுகவும், அவர் பெருகவும் வேண்டும் என்ற ஜெபம் உங்களுடைய உள்ளத்தில் எப்பொழுதும் இருக்கட்டும்.
நினைவிற்கு:- “உங்களில் எவனாகிலும் பெரியவனாயிருக்க விரும்பினால், அவன் உங்களுக்குப் பணிவிடைக்காரனாயிருக்கக்கடவன்” (மத். 20:26).