AppamAppam - Tamil

ஜூன் 25 – அழைப்பைப் பாருங்கள்!

“சகோதரரே, நீங்கள் அழைக்கப்பட்ட அழைப்பைப் பாருங்கள்; மாம்சத்தின்படி ஞானிகள் அநேகரில்லை, வல்லவர்கள் அநேகரில்லை, பிரபுக்கள் அநேகரில்லை. ஞானிகளை வெட்கப்படுத்தும்படி தேவன் உலகத்தில் பைத்தியமானவைகளைத் தெரிந்துகொண்டார்” (1 கொரி. 1:26,27).

கர்த்தர் எவ்வளவு அன்போடு உங்களைத் தெரிந்துகொண்டார் என்பதையும், உங்கள் மேல் அவர் எவ்வளவு கிருபை பாராட்டினார் என்பதையும், எவ்வளவு மேன்மையாய் அழைத்தார் என்பதையும் சிந்தித்துப் பாருங்கள்.  உங்களுடைய மேன்மையெல்லாம் கர்த்தர் உங்களோடு இருப்பதுதான். இயேசுகிறிஸ்து உங்களோடு இருக்கிறதினாலே, நீங்கள் அரிய பெரிய காரியங்களைச் செய்ய முடியும்.  கர்த்தர் உங்களோடிருக்கும்போது- உங்களைவிட ஞானி யார் உண்டு? உங்களைவிட பலவான் யார் உண்டு? உங்களைவிட வல்லவர்கள் யார் உண்டு? வேதம் சொல்லுகிறது, “அவரே தேவனால் நமக்கு ஞானமும் நீதியும் பரிசுத்தமும் மீட்புமானார்” (1 கொரி. 1:31).

கர்த்தர் மோசேயைத் தெரிந்து கொண்டபோது, மோசே தன்னுடைய இயலாமையை ஆண்டவரிடத்தில் விவரித்து, “நான் வாக்குவல்லவன் அல்ல. நான் திக்குவாயும் மந்த நாவும் உள்ளவன்” என்றார். ஆனால் கர்த்தர் மோசேயைக் கொண்டு முழு இஸ்ரவேல் ஜனங்களையும் நாற்பது ஆண்டுகள் வனாந்தரத்தில் வழிநடத்த வல்லவராயிருந்தார்.

கர்த்தர் எரேமியா தீர்க்கதரிசியை அழைத்தபோது, எரேமியா தன்னைத் தாழ்த்தி சொன்னது என்ன தெரியுமா? ‘ஆ, கர்த்தராகிய ஆண்டவரே, இதோ நான் பேச அறியேன். சிறுபிள்ளையாய் இருக்கிறேன்’ என்றார். எனினும் கர்த்தர் தம் வார்த்தைகளை எரேமியாவின் வாயில் தந்து, தீர்க்கதரிசியாக்கி, வல்லமையாகப் பயன்படுத்தினார்.

கர்த்தர் மீன் பிடித்துக் கொண்டிருந்த, படிப்பறிவு இல்லாத பேதுருவை அழைத்தபோது, ‘ஆண்டவரே நான் பாவியான மனுஷன். என்னைவிட்டு போய்விடும்’ என்றார். ஆனால் கர்த்தரோ, பேதுருவை சீஷனாக்கி, ஆவிக்குரிய வரங்களைத் தந்து மாபெரும் அப்போஸ்தலனாக்கினார். மெதடிஸ்ட் ஆலயங்களை நிறுவின ஜாண்வெஸ்லி மிகவும் குள்ளமாய் மற்றவர்களால் பரியாசம் பண்ணக்கூடிய நிலைமையில் இருந்தவர்தான். ஆனால் கர்த்தரோ, அவரை அக்கினிஜுவாலையாய், வல்லமையாய் பயன்படுத்தினார்.

உலகத்தை அசைத்த டி.எல். மூடி என்ற பக்தன் படிப்பறிவு இல்லாதவர். அவர் பேசுகிற ஆங்கிலத்தை அநேகர் கேலி செய்ததுண்டு. என்றாலும், அவருடைய ஊழியத்தினால் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் லட்சக்கணக்கான பேர். இன்றைக்கும் கிறிஸ்தவ சரித்திரத்தில் அவருக்கு நீங்காத இடமுண்டு.

தேவபிள்ளைகளே, தேவனால் அழைக்கப்பட்ட பெரிய பரிசுத்தவான்களுக்கு சரீரத்தில் பல குறைபாடுகள் இருந்ததுபோல, உங்களுக்கும் இருக்கக்கூடும். ஆவிக்குரிய ஜீவியத்தில் முன்னேற முடியாதபடி பல தடைகள் வரக்கூடும். மனம் சோர்ந்துபோகாதேயுங்கள். ஞானிகளை வெட்கப்படுத்தும்படி தேவன் உங்களைத்தான் தெரிந்து கொண்டிருக்கிறார். பெலன் கொண்டு, திடன் கொண்டு, எழும்பிப் பிரகாசியுங்கள்.

நினைவிற்கு:- “கர்த்தர் உன்னை வாலாக்காமல் தலையாக்குவார், நீ கீழாகாமல் மேலாவாய்” (உபா. 28:14).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.