No products in the cart.
ஜூன் 22 – அழகில் சிறந்தவர்!
“என் நேசர் வெண்மையும் சிவப்புமானவர்; பதினாயிரம்பேர்களில் சிறந்தவர்” (உன். 5:10).
இயேசுவைக் காணவேண்டும், இயேசுவைக் காண விரும்புகிறோம் என்று அநேகர் விரும்பி இயேசுவண்டை வருகிறார்கள். அவரைக் காணும்போது, அவரைக் குறித்து சாட்சி கொடுக்கிறார்கள். அவருடைய தோற்றம் எப்படியிருக்கிறது என வர்ணிக்கிறார்கள். “என் நேசர் வெண்மையும் சிவப்புமானவர். பதினாயிரம் பேரிலும் சிறந்தவர்” என்று சொல்லி போற்றுகிறார்கள்.
அவர் வெண்மையானவர் என்பதினாலே, வேதம் அவரை வெண்மையான லீலி புஷ்பத்திற்கு ஒப்பிட்டுச் சொல்லுகிறது. வெண்மையான லீலி புஷ்பம் பள்ளத்தாக்குகளில் மலர்ந்து, வாசனையை பரிமளிக்கிறதைப் போலவே, கிறிஸ்து தாழ்மையிலே அவதரித்து, தமது பரிசுத்தத்தைப் பரிமளிக்கிறவராக இருக்கிறார்.
அவர் சிவப்பானவரும்கூட. சிவப்பு என்பது, கர்த்தருடைய தியாகத்துக்கும், கல்வாரியின் இரத்தத்துக்கும் அடையாளமாய் இருக்கிறது. முற்றிலும் அழகுள்ள அவர், நமக்காக கல்வாரி சிலுவையில் இரத்தம் சிந்தி சிவப்பாக மாறினார். அழகுமில்லாமல் சௌந்திரியமுமில்லாமல் அந்தக்கேடு அடைந்தார். அந்த சிவப்பு நிறத்தை நோக்கிப் பார்க்கும்போதெல்லாம் கிறிஸ்து நமக்காக பட்டபாடுகளும், நமக்காக அவர் செய்த தியாகங்களும், நம் உள்ளத்தைப் பரவசப்படுத்திக்கொண்டே இருக்கின்றன.
தேவனின் வெண்மை நிறத்தை வேதம் லீலி புஷ்பத்துக்கும், அவரது சிவப்பு நிறத்தை கல்வாரி இரத்தத்திற்கும் ஒப்பிடுவதைக் கண்டோம். வேதம் அவரது சிவப்பு நிறத்தை சாரோனின் ரோஜாவிற்கும் ஒப்பிட்டுச் சொல்லுகிறது. சாரோனின் ரோஜாவைப் பார்க்கும் போதெல்லாம் கல்வாரியின் பெருந்துளிகளின் செந்நிறம் நம் உள்ளத்தை அசைக்கிறதாயிருக்கிறது. அவரே தேவகுமாரன். அவரே மனுஷக் குமாரன். அவரே நமக்காக பிதாவினுடைய வலது பாரிசத்திலே பரிந்து பேசுகிறவர்.
அந்த அருமை இரட்சகரை நோக்கிப் பாருங்கள். அவர் வெண்மையானவர், சிவப்பானவர், பதினாயிரம் பேரிலும் சிறந்தவர். மட்டுமல்ல, அவர் உங்களுடையவர். நீங்கள் எப்போது, உங்களை அவருடையவராக அவருடைய கரத்தில் அர்ப்பணித்தீர்களோ, அப்பொழுதே அவர் உங்களுடையவராகவுமிருக்கிறார். வானம் எனக்கு சிங்காசனம். பூமி எனக்குப் பாதபடி (ஏசா. 66:1) என்று சொன்ன அவ்வளவு பெரிய தேவன். உங்களுடையவராய், உங்களோடுகூட இருந்து உங்களை அவர் வழிநடத்துவது எத்தனை பெரிய பாக்கியமானது!
தேவபிள்ளைகளே, இந்த அருமையான இரட்சகரை உங்களுடைய ஆத்தும நேசராய் ஏற்றுக்கொள்வீர்களென்றால், அவர் உங்கள் உள்ளத்தையெல்லாம் நிரப்புவார்; பரலோக மகிமையை உங்களுக்குள் கொண்டு வருவார். பரலோகத்தின் பரிசுத்தத்தை, பரலோகத்தின் தெய்வீக அன்பை உங்களுக்குள் அவர் ஸ்தாபிப்பார். பதினாயிரம் பேரிலும் விசேஷித்த அவர், நிச்சயமாகவே உங்களையும் விசேஷமுள்ளவர்களாக்குவார்.
நினைவிற்கு:- “மாம்சத்திலே வெளிப்பட்டார், ஆவியிலே நீதியுள்ளவரென்று விளங்கப்பட்டார், தேவதூதர்களால் காணப்பட்டார், புறஜாதிகளிடத்தில் பிரசங்கிக்கப்பட்டார், உலகத்திலே விசுவாசிக்கப்பட்டார், மகிமையிலே ஏறெடுத்துக் கொள்ளப்பட்டார்” (1 தீமோ. 3:16).