AppamAppam - Tamil

ஜூன் 21 – அறிவும், புத்தியுமுள்ள மனுஷன்!

“தேசத்தின் பாவத்தினிமித்தம் அதின் அதிகாரிகள் அநேகராயிருக்கிறார்கள்; புத்தியும் அறிவுமுள்ள மனுஷனாலோ அதின் நற்சீர் நீடித்திருக்கும்” (நீதி. 28:2).

நீதிமொழிகள் புத்தகத்தை விரும்பி வாசிக்கிறவர்களுடைய வாழ்க்கை சிறப்பான வளமுடையதாய் இருக்கும். பரிசுத்த வாழ்க்கை வாழுவதற்கும், வெற்றியுள்ள வாழ்க்கை வாழுவதற்கும், ஊழியத்திற்கும் இந்த ஞான இலக்கியம் மிகவும் பயனுள்ளதாய் அமையும்.

உலகத்தில் தங்களுடைய திருமண வாழ்க்கையை ஆரம்பிப்பதற்கு முன்பாக ஒவ்வொரு வாலிப ஆணும், பெண்ணும் இந்த ஞான இலக்கியத்தின் ஆழத்திற்குள் சென்று, விலையேறப்பெற்ற முத்துக்களாயிருக்கிற தேவ ஆலோசனைகளை வாஞ்சையோடு பெற்று செயல்படுத்த வேண்டும்.

தலைசிறந்த பிரசங்கியாராகிய அலெக்ஸாண்டர் மெக்ளின் என்பவர், “நீதிமொழியானது உங்களோடு எடுத்து சென்று எப்போதும் வைத்துக்கொள்ளக்கூடிய மாமருந்தாகவும், தலைசிறந்த ஔஷதமாகவும் இருக்கிறது. வாலிபத்தின் ஜுரங்களை அது நீக்கி ஆரோக்கியத்தைக் கொண்டு வருகிறது” என்று சொன்னார். எத்தனை உண்மையான வார்த்தைகள்!

நீதிமொழிகளின் புஸ்தகத்தை படிப்பதின் மூலமாக அநேக வாலிப ஆண்களும், வாலிப பெண்களும் கிறிஸ்துவைப் பற்றிய விசுவாசத்திற்குள் வந்திருக்கிறார்கள். உலக ஞானத்தை பெறும்படி வாசிக்க ஆரம்பித்த அவர்கள் கர்த்தருடைய ஞானத்தினால் ஈர்க்கப்பட்டு இழுக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களது சாட்சி என்ன? ‘உலக அறிவுக்காக இந்த புஸ்தகத்தை வாசிக்க ஆரம்பித்தோம். ஆனால் இந்த புஸ்தகத்திலுள்ள ஞானமோ, இதை அருளிச் செய்த தேவனை நோக்கி எங்களை வழி நடத்தினது. எழுத்துக்களை வாசிப்பதின் மூலம் எழுத்துக்களின் ஆக்கியோனாகிய கர்த்தரைத் தெரிந்து கொண்டோம்’ என்கிறார்கள்.

சுவிசேஷத்தை அறிவிப்பதற்கு அருமையான வார்த்தைகள் உள்ள ஒரு வேத பகுதி நீதிமொழிகள் புத்தகமாகும். நீதிமொழிகளை வாசித்தால், கிறிஸ்துவை அறிகிற அறிவை அறிந்து கொள்ளலாம். இந்த ஞான வார்த்தைகளே உங்கள் வாழ்க்கைக்குத் தேவையான பூரண தூண்களாக நிற்கின்றன.

உங்களுடைய குடும்பத்திலுள்ள குழந்தைகளையும், வாலிபர்களையும் நீதிமொழிகளின் புஸ்தகத்தை வாசிக்கும்படி உற்சாகப்படுத்துங்கள். அப்பொழுது தேவ ஞானம் சிறு வயதிலிருந்தே அவர்களுக்குள் நிரம்பியிருக்கும். எவ்வளவுக்கெவ்வளவு அதை வாசித்து சிந்திக்கிறார்களோ, அவ்வளவுக்கவ்வளவு தேவ வார்த்தைகள் அவர்களுடைய உள்ளத்தின் ஆழத்தில் வேர் கொள்ளும். அவர்கள் சொல்லிலும், செயலிலும் ஞானமுள்ளவர்களாய் திகழுவார்கள்.

யார் யார் கர்த்தர் தருகிற உன்னத ஞானத்தை அசட்டை பண்ணுகிறார்களோ, அவர்கள் தங்களுடைய வாழ்க்கையை தங்களை அறியாமலே கறைப்படுத்திக் கொள்ளுகிறார்கள். தேவனுடைய வார்த்தைகள் ஆவியாயும், ஜீவனாயும் மட்டுமல்ல, பேதையை ஞானியாக்குகிற ஞான ஆயுதமாகவும் இருக்கிறது. ஆத்துமாவின் பெலனாயிருக்கிறது. அது உங்களை அருமையாய் வழி நடத்திச் செல்லுகிறது.

நினைவிற்கு:- “அவரிடத்தில் ஞானமும் வல்லமையும் எத்தனை அதிகமாய் இருக்கும்? அவருக்குத்தான் ஆலோசனையும் புத்தியும் உண்டு” (யோபு 12:13).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.