No products in the cart.
ஜூன் 17 – அமர்ந்திருங்கள்!
“நீங்கள் அமர்ந்திருந்து, நானே தேவனென்று அறிந்துகொள்ளுங்கள்” (சங். 46:10).
கர்த்தருடைய பாதத்தில் அமர்ந்திருக்கும் அனுபவம் ஒரு ஆசீர்வாதமான அனுபவம். கர்த்தருடைய பிரசன்னத்தில் அமைதியாய் அமர்ந்திருப்பது, உங்களுடைய விசுவாசத்தை காண்பிக்கிறது. அவரை நம்பி, உங்களுடைய பாரத்தையெல்லாம் அவர்மேல் வைத்துவிட்டு, ஸ்தோத்திரத்தோடு இளைப்பாறுவது, நீங்கள் அவரை எவ்வளவாய் நேசிக்கிறீர்கள் என்பதை வெளிப்படுத்துகிறது.
மனித வாழ்க்கையில், தேவ சமுகத்தில் அமர்ந்திருக்கிற அனுபவம் மிகவும் அவசியம். நம் அருமை ஆண்டவரும்கூட உங்களை அமர்ந்த தண்ணீர்களண்டையில் நடத்துகிறவர் அல்லவா? அவசரமான இந்த உலகத்தில் அமர்ந்திருக்க மனுஷன் விரும்புவதில்லை. எல்லா பாரங்களையும் தன்னுடைய தலையில் தூக்கிப் போட்டுக் கொண்டு, கவலைகளை சுமக்கிறான்.
புதிதாக ஊழியத்திற்கு வந்த ஒருவர், தான் செய்யவேண்டிய கடமைகளையெல்லாம் விவரித்துக்கொண்டு வந்தார். ‘இந்த வாரம் நான் ஐந்து பிரசங்கங்களை ஆயத்தம் பண்ணவேண்டும். மூன்று திருமணங்களை நடத்திக் கொடுக்க வேண்டும். அங்கே தேவ செய்தி கொடுக்கவேண்டும். இங்கே பிறந்தநாள் விழாவில் பிரசங்கிக்க வேண்டும். நிறைய வியாதியஸ்தரை சந்திக்க வேண்டும். மேலிடத்தில் ஒழுங்கு செய்யப்பட்டிருக்கிற பல முகாம்களில் பிரசங்கிக்கவேண்டும்’ என்றெல்லாம் வரிசையாக சொல்லிக்கொண்டே போனார்.
அங்கே இருந்த ஒருவர் அவரைப் பார்த்து, “ஐயா, நீங்கள் இவ்வளவு கூட்டங்களில் பேசிக்கொண்டிருந்தால், கர்ததர் உங்களிடத்தில் பேசுவதைக் கேட்க உங்களுக்கு நேரம் இருக்காதே” என்று கேட்டார். இது அந்த இளம் ஊழியரை நோக்கிக் கேட்ட கேள்வி அல்ல; நம் ஒவ்வொருவரையும் பார்த்து கேட்கப்படுகிற கேள்வியும் இதுதான். நீங்கள் என்ன பதில் சொல்லுவீர்கள்?
இயேசுவை நோக்கிப் பாருங்கள்! அவர் இரவும் பகலும் இடைவிடாமல் ஊழியம் செய்தார். என்றாலும்கூட, அவ்வப்போது ஜனங்கள் மத்தியிலிருந்து வேறுபட்டு, பிதாவோடுகூட தனியே உறவாடுவதற்காக நேரங்களை அவர் வைத்திருந்தார். பிதாவை சந்திக்க தனியாக மலையின் மேல் ஏறி, இராமுழுவதும் தனித்து ஜெபிக்கிற அந்த பழக்கமானது, அவருடைய உள்ளான மனுஷனில் வல்லமையையும், பெலனையும், புத்துணர்ச்சியையும், வேகத்தையும் தந்தது. வனாந்திரத்துக்குச் சென்று பிதாவின் சமுகத்தில் அமர்ந்திருந்தார். கெத்சமெனே தோட்டத்திற்குச் சென்று ஊக்கமாக ஜெபித்தார்.
அன்றைக்கு தேவசமுகத்தில் அமர்ந்திருக்க நேரமில்லாதிருந்த மார்த்தாளைப் பார்த்து இயேசு “மார்த்தாளே, மார்த்தாளே, நீ அநேக காரியங்களை குறித்துக் கவலைப்பட்டு கலங்குகிறாய்; தேவையானது ஒன்றே; மரியாள் தன்னைவிட்டு எடுபடாத நல்ல பங்கைத் தெரிந்துகொண்டாள்” (லூக். 10:41,42) என்றார்.
தேவபிள்ளைகளே, கர்த்தருடைய பாதத்தில் அமர்ந்திருக்கக்கூடிய நேரங்களை உருவாக்கிக்கொள்ளுங்கள். காலையில் எழுந்ததும் கர்த்தருடைய சமுகத்திற்குச் சென்று அமர்ந்துவிடுங்கள்.
நினைவிற்கு:- “யோபே, இதற்குச் செவிகொடும்; தரித்துநின்று தேவனுடைய ஆச்சரியமான கிரியைகளைத் தியானித்துப்பாரும்” (யோபு 37:14).