No products in the cart.
ஜூன் 15 – அற்புதங்களை பெறுவதற்கு!
“உங்களைப் பரிசுத்தம் பண்ணிக்கொள்ளுங்கள்; நாளைக்குக் கர்த்தர் உங்கள் நடுவிலே அற்புதங்களைச் செய்வார்” (யோசுவா 3:5).
நீங்கள் ஏன் பரிசுத்தமாய் ஜீவிக்க வேண்டும்? ஆம், உங்கள் வாழ்க்கையில் பரிசுத்தம் இருந்தால்தான் நீங்கள் கர்த்தரிடத்திலிருந்து அற்புதங்களை எதிர்பார்க்க முடியும். மனிதன் தேவனிடத்தில் நெருங்க முற்படும் போதெல்லாம், அவன் பரிசுத்தமாய் வாழ மாட்டானா என்று கர்த்தர் ஆவலுடன் எதிர்பார்க்கிறார்.
அநேகர் சொல்லுகிறது என்ன? ‘கர்த்தர் என் குடும்பத்தில் இந்த அற்புதத்தைச் செய்தால், நான் அவரை ஏற்றுக் கொள்ளுவேன். எனக்கு நல்ல வேலைக் கிடைத்தால், கிறிஸ்துவை சேவிப்பேன். எனக்கு ஆண் பிள்ளை பிறந்தால், குடும்பமாக அவரை ஏற்றுக் கொள்வோம்’ என்றெல்லாம் சொல்லுகிறார்கள், தீர்மானிக்கிறார்கள்.
ஆனால் கர்த்தருடைய வசனம் என்ன சொல்லுகிறது? நீங்கள் முதலாவது உங்களை பரிசுத்தம் பண்ணிக் கொள்ளுங்கள். பிறகு கர்த்தரிடத்திலிருந்து அற்புதத்தை எதிர்பாருங்கள். இயேசு சொன்னார்: “முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள், அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக்கூடக் கொடுக்கப்படும்” (மத். 6:33). தேவனுடைய நீதிதான் அவருடைய பரிசுத்தமாகும்.
ஒரு போதகர் ஒரு எழுப்புதல் பெருவிழாவிற்கு செல்ல ஆயத்தமானபோது, அதை ஒழுங்கு செய்திருந்த சகோதரர்கள், “ஜனங்கள் அற்புதங்களை எதிர்பார்க்கிறார்கள். அநேகர் தெய்வீக சுகத்தையும், வல்லமையையும், விடுதலையையும், தீர்க்கதரினங்களையும் எதிர்பார்க்கிறார்கள். ஆகவே ஆயத்தத்தோடு வாருங்கள்” என்று சொன்னார்கள். போதகரும் அதற்காக கர்த்தரிடம் ஜெபிக்க முற்பட்டார்.
அந்த போதகர், கர்த்தரிடத்தில் முழங்காற்படியிட்டு, ஆண்டவரே, ஜனங்கள் அற்புதத்தை எதிர்பார்க்கிறார்கள். நீர் அற்புதத்தை கண்டிப்பாய் செய்தே தீர வேண்டுமென்று கேட்கும்போது கர்த்தர், “நான் அற்புதங்களைச் செய்ய ஆயத்தமாயிருக்கிறேன்; என் ஜனங்கள் பாவ வழியைவிட்டு பரிசுத்தமாய் ஜீவிக்க ஆயத்தமாய் இருக்கிறார்களா?” என்று கேட்டார்.
யோசுவா ஜனங்களை நோக்கி, “உங்களைப் பரிசுத்தப்படுத்திக் கொள்ளுங்கள். நாளைக்கு கர்த்தர் உங்கள் நடுவே அற்புதங்களைச் செய்வார்” (யோசுவா 3:5) என்றார். மோசேயைப் பார்த்து இன்றைக்கும் நாளைக்கும் அவர்களைப் பரிசுத்தப்படுத்து. மூன்றாம் நாளில் நான் சகல ஜனங்களுக்கும் பிரத்தியட்சமாய் சீனாய் மலையின் மேல் இறங்குவேன் என்றார் (யாத். 19:10,11). கர்த்தருக்காக நீங்கள் செய்ய வேண்டியதைச் செய்து பரிசுத்தத்தில் முன்னேறும்போது, அவர் உங்களுக்காகச் செய்ய வேண்டியதை நிச்சயமாகவே செய்வார்.
தேவபிள்ளைகளே, உங்களுடைய பிரச்சனைகளும் போராட்டங்களும் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே வருகிறதா? உடனே கிறிஸ்துவின் பாதத்தில் அமர்ந்து உங்களைப் பரிசுத்தப்படுத்திக்கொள்ளுங்கள். யோர்தானை பின்னிட்டு திரும்பப்பண்ணி இஸ்ரவேலரை கடந்து போகும்படிச் செய்து, அற்புதத்தை நிகழ்த்தினவர், நிச்சயமாகவே உங்கள் வாழ்க்கையிலும் அற்புதங்களைச் செய்தருளுவார்.
நினைவிற்கு:- “ஆராய்ந்து முடியாத பெரிய காரியங்களையும், எண்ணி முடியாத அதிசயங்களையும் அவர் செய்கிறார்” (யோபு 9:10).