AppamAppam - Tamil

ஜூன் 10 – அடையாளங்கள்!

“அவைகள் அடையாளங்களுக்காகவும், காலங்களையும் நாட்களையும் வருஷங்களையும் குறிக்கிறதற்காகவும் இருக்கக்கடவது என்றார்” (ஆதி. 1:14).

அடையாளங்கள் அவசியம். காலங்களையும், நாட்களையும், வருஷங்களையும் சுட்டிக் காண்பிப்பதற்கு அடையாளங்கள் நிச்சயமாகவே அவசியம். ஆகவே கர்த்தர் சிறிய மற்றும் பெரிய சுடர்களாக நட்சத்திரங்கள், சந்திரன், சூரியன் ஆகியவற்றை சிருஷ்டித்தார். நோவாவுக்கு கர்த்தர் வானவில்லை அடையாளமாக்கி, ஜலப் பிரளயத்தினால் உலகத்தை அழிப்பதில்லை என்று வாக்குப் பண்ணினார். மோசேயின் கோலை சர்ப்பமாக்கி, பார்வோனுக்கு முன் அதை அடையாளமாக்கினார். இஸ்ரவேல் ஜனங்களின் பாதுகாப்பிற்காக பஸ்கா ஆட்டுக்குட்டியின் இரத்தத்தை அடையாளமாக்கினார்.

ராகாப் என்னும் வேசி சிகப்பு நூலை தன் ஜன்னலில் கட்டி, அடையாளமாக்கி, தன் குடும்பத்தை அழிவுக்கு விலக்கி மீட்டாள். இம்மானுவேலருக்கு அடையாளமாக கன்னி கர்ப்பவதியாகப் போவதை கர்த்தர் முன்னறிவித்தார். எசேக்கியா ராஜாவின் நாட்களை கர்த்தர் கூட்டிக் கொடுப்பதற்கு அடையாளமாக, சூரியக் கடிகாரத்தில் சாயையை பத்து பாகைக்கு பின்னிட்டு திரும்பச் செய்தார்.

சூரியனையும், சந்திரனையும், நட்சத்திரங்களையும் எதற்காக அடையாளமாக்கினார்? ஆம், வருகைக்கு ஆயத்தப்படவே அவைகளை அடையாளமாக்கினார். ஒரு நாள் கடந்தது என்பதற்கு பூமி ஒரு முறை தன்னைத்தானே சுற்றிக் கொண்டது அடையாளம். ஒரு வருடம் கடந்தது என்றால் பூமி தன்னைத் தானே சுற்றிக் கொண்டது மாத்திரமல்ல, சூரியனையும் ஒரு முறை சுற்றி வந்து விட்டது என்பது அடையாளம். இதன் மூலம்  நீங்கள் நாட்களை கூறுகிறீர்கள். வாரங்களை நிர்ணயிக்கிறீர்கள். வருஷங்களை கணிக்கிறீர்கள். அவை உங்களுக்கு அடையாளங்களாய் அமைந்திருக்கின்றன.

இன்று காலங்களெல்லாம் உருண்டோடி கடைசி காலத்திற்கு வந்திருக்கிறீர்கள். கிறிஸ்துவின் வருகையை குறித்த எல்லா அடையாளங்களும் நிறைவேறிவிட்டன. எல்லா தீர்க்கதரிசனங்களும் ஆம் என்றும், ஆமென் என்றும் நிறைவாக இருக்கின்றன. எங்கு திரும்பினாலும் கர்த்தர் வரப்போகிறார் என்பதை சரித்திர சான்றுகள் சுட்டிக் காண்பிக்கின்றன. இன்னும் கொஞ்சக் காலத்தில் கி.மு, கி.பி, என்பதுபோல், இயேசு வரும்போது அது வருகைக்கு முன், வருகைக்கு பின் என்று பிரிக்கப்படும்.

ஒரு முறை இயேசு ஒலிவமலையில் தனித்திருக்கும் போது, சீஷர்கள் அவரிடத்தில் வந்து உம்முடைய வருகைக்கும், உலகத்தின் முடிவுக்கும் அடையாளம் என்ன? அதை எங்களுக்கு சொல்ல வேண்டும் என்று கேட்டார்கள். இயேசு பல அடையாளங்களை அவர்களுக்கு விவரித்தார். அதில் ஒன்று: “சூரியனிலும் சந்திரனிலும் நட்சத்திரங்களிலும் அடையாளங்கள் தோன்றும்; பூமியின் மேலுள்ள ஜனங்களுக்குத் தத்தளிப்பும் இடுக்கணும் உண்டாகும்; சமுத்திரமும் அலைகளும் முழக்கமாயிருக்கும். வானத்தின் சத்துவங்கள் அசைக்கப்படும் என்றார்” (லூக். 21:25,26).

தேவபிள்ளைகளே, கர்த்தருடைய வருகை சமீபமாக இருக்கிறபடியினாலே நீங்கள் மிகுந்த பயபக்தியோடு அவருடைய வருகைக்கு ஆயத்தப்படுவீர்களாக.

நினைவிற்கு:- “வானத்தின் தோற்றத்தை நிதானிக்க உங்களுக்குத் தெரியுமே, காலங்களின் அடையாளங்களை நிதானிக்க உங்களால் கூடாதா?” (மத். 16:3).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.