No products in the cart.
மே 27 – ஆளுவார்கள்!
“கிருபையின் பரிபூரணத்தையும் நீதியாகிய ஈவின் பரிபூரணத்தையும் பெறுகிறவர்கள் இயேசு கிறிஸ்து என்னும் ஒருவராலே ஜீவனை அடைந்து ஆளுவார்களென்பது அதிக நிச்சயமாமே” (ரோமர் 5:17).
ஆதாம் என்கிற ஒருவனாலே மனுக்குலம் ஆளுகையை இழந்து போனது. ஆதாமினுடைய மீறுதலினால் பாவமும், மரணமும் பிரவேசித்தன. ஆனால் இயேசு கிறிஸ்துவினாலே கிருபையும், சத்தியமும் உண்டாயின. பாவத்தையும், மரணத்தையும் வெல்ல அவரே வழியானார்.
ஒரு முறை மலையின் உச்சியிலே வாழ்ந்து கொண்டிருந்த மலைவாசி சிறுவன் ஒருவன் முதல் முறையாக, கஷ்டப்பட்டு மலையிலிருந்து இறங்கி, ஆற்றிலே பயணம் செய்து, அக்கரையிலுள்ள ஒரு பட்டணத்திற்கு வந்தான். பட்டணத்திலுள்ள ஒவ்வொரு பொருளும் அவனுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. ஒரு கடையிலிருந்த பிரகாசமான மின்சார பல்பைப் பார்த்ததும் அவனுக்கு ஒரே ஆச்சரியம். இந்த ஒரு பல்பு மட்டும் எனக்கு கிடைக்குமென்றால் நான் வாழுகிற மலைப் பகுதியை வெளிச்சமாக்கிவிடுவேன் என்று சொல்லி தன்னிடமிருந்த எல்லா பணத்தையும் கொடுத்து அதை வாங்கினான்.
அந்த மலைவாசி சிறுவனுக்கு மிகுந்த எதிர்பார்ப்பு இருந்தது. தன்னுடைய இருப்பிடத்திற்கு சென்று மலைவாசி ஜனங்களைப் பார்த்து, ‘நான் ஒரு விசேஷமான பொருளை வாங்கிக் கொண்டு வந்திருக்கிறேன். அது இருளை வெளிச்சமாக்கும்’ என்று சொல்லி அதைக் காண்பித்தான். அவன் என்னென்னமோ செய்து பார்த்தும்கூட அதை எரிய வைக்க முடியுவில்லை. காரணம், அங்கே மின்சாரம் இல்லை. அதை விற்ற கடைக்காரன் அதைக் குறித்து அவனுக்கு ஒன்றும் சொல்லிக் கொடுக்கவுமில்லை.
நீங்களும்கூட எரிந்து பிரகாசிக்க வேண்டுமென்றால் மின்சாரமாகிய இயேசு கிறிஸ்துவோடுகூட இணைக்கப்பட்டிருக்க வேண்டும். அவர்தான் வல்லமையையும், சத்துவத்தையும் கொடுக்கிறவர். ஒருவன் கிறிஸ்துவுக்குள் இருந்தால் அவனுக்கு ஆளுகையும் அதிகாரமுமுண்டு.
கிறிஸ்து என்னும் ஒருவராலே ஜீவனை அடைந்து ஆளுவார்கள் (ரோமர் 5:17) என்று வேதம் சொல்லுகிறது. சில மொழிபெயர்ப்புகளில், கிறிஸ்து என்னும் ஒருவராலே ஜீவனை அடைந்து ராஜாக்களைப்போல ஆளுவார்கள் என்று சொல்லப்படுகிறது. ஆம், நீங்கள் ராஜாக்களைப் போல ஆளுகை செய்வீர்கள்.
ஒருவேளை இதுவரையிலும் நீங்கள் ராஜாதி ராஜாவின் குடும்பத்திலே இல்லாமலிருந்தால், கிறிஸ்துவோடுகூட அவருக்கென்று இப்பொழுதே அர்ப்பணியுங்கள். அவர்தான் எல்லா ஆசீர்வாதங்களுக்கும் ஊற்றுக்காரணர். அவரிடத்திலிருந்துதான் எல்லா நன்மைகளும் இறங்கி வருகின்றன. அவர்தான் உங்களுக்கு ஒத்தாசை வரும் பர்வதம்.
தேவபிள்ளைகளே, கர்த்தர் உங்களுக்கு ஆளுகையைக் தரும்போது, சரீரத்திற்கு சுகத்தை தருவதுடன் ஆத்துமாவிலும் விடுதலையைத் தந்து இரட்சிப்பின் சந்தோஷத்தினாலும், தமது பரிசுத்த ஆவியின் வல்லமையினாலும் உங்களை நிரப்புவார்.
நினைவிற்கு:- “நான் தேவனுடைய ஆவியினாலே பிசாசுகளைத் துரத்துகிறபடியால், தேவனுடைய ராஜ்யம் உங்களிடத்தில் வந்திருக்கிறதே” (மத். 12:28).