No products in the cart.
ஏப்ரல் 11 – துதியும், தேவபிரசன்னமும்!
“இஸ்ரவேலின் துதிகளுக்குள் வாசமாயிருக்கிற தேவரீரே பரிசுத்தர்” (சங். 22:3).
துதியும், ஆராதனையும் உங்களை கர்த்தருடைய அருகிலே மட்டுமல்ல, தேவனுடைய பிரசன்னத்தின் மையத்திலே கொண்டுவந்து நிறுத்திவிடுகிறது. ஆகவே, யார் யார் கர்த்தருடைய பிரசன்னத்தை உணர விரும்புகிறார்களோ அவர்கள் துதிக்கப் பழகிக்கொள்ள வேண்டும். நன்றியறிதலுள்ள உள்ளத்திலிருந்து துதி தானாகவே பொங்கி வருகிறது.
வேதம் சொல்லுகிறது, “நம்முடைய பிதாவாகிய கர்த்தரை நாம் தொழுதுகொள்ளும்போதெல்லாம் அவர் நமக்கு சமீபமாய் இருக்கிறதுபோல தேவனை இவ்வளவு சமீபமாய் பெற்ற வேறே ஜாதி எது?” (உபா. 4:7).
கர்த்தருடைய பிரசன்னத்திலே எப்பொழுதும் நிலைத்திருக்க விரும்பிய தாவீது ஒரு தீர்மானம் செய்தார். “கர்த்தரை நான் எக்காலத்திலும் ஸ்தோத்திரிப்பேன்; அவர் துதி எப்போதும் என் வாயில் இருக்கும்” (சங். 34:1) என்பதே அந்த தீர்மானம்.
ஒருமுறை ஒரு தத்துவ ஞானி சொன்னார், “யார் யார் மற்றவர்களுடைய நன்மைகளைப் பார்த்து அவர்களை மனதார பாராட்டுகிறார்களோ அவர்களே மகிழ்ச்சியுள்ளவர்களாகவும் நல்ல ஆரோக்கியமுள்ளவர்களாகவும் இருக்கிறார்கள்”. அதிலே ஓரளவு உண்மை இருக்கிறது.
ஆனால், எப்பொழுதும் கர்த்தர் செய்த நன்மைகளை நினைவுகூர்ந்து அவருடைய மகிமையையும், மகத்துவத்தையும் உணர்ந்து யார் யார் துதிக்கிறார்களோ, அவர்கள் மற்ற எல்லாரைப்பார்க்கிலும் மிகுந்த மகிழ்ச்சியுடையவர்களாகவும், பெலன் உள்ளவர்களாகவும், வல்லமையுள்ளவர்களாகவும் இருக்கிறார்கள்.
தாவீதுராஜா சொல்லுகிறார்: “கர்த்தரைத் துதிப்பதும் உன்னதமானவரே உமது நாமத்தைக் கீர்த்தனம் பண்ணுவதும் நலமாயிருக்கும்” (சங். 92:1). ஆம், கர்த்தரைத் துதிப்பது நல்லது. அது ஆவி, ஆத்துமா, சரீரத்துக்கு நல்லது. வாழ்க்கை முழுவதற்கும் நல்லது.
கர்த்தரைத் துதிப்பதற்கு ஒரு திட்டத்தை உண்டாக்கிக்கொள்ளுங்கள். ஒரு நண்பர் தன் கடிகாரமானது ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை அலாரம் அடிக்கும்படி ஏற்பாடு செய்திருந்தார். ஒவ்வொருமுறை அந்த அலாரம் அடிக்கும்போதும் அவர் அப்படியே கண்களை மூடி, இரண்டு மூன்று நிமிடங்கள் கர்த்தரை ஸ்தோத்திரிப்பார்.
“அப்படிச் செய்யும்போது அடுத்த மணிநேரம் முழுவதும் கர்த்தருடைய பிரசன்னம் என்னை சூழ்ந்திருக்கிறதை உணர்வேன்” என்று சொல்லி அவர் தன் அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டார்.
இன்னொரு இரட்சிக்கப்பட்ட ஒரு பஸ் ஓட்டுநர் சொன்னார், “நான் பஸ்ஸை இயக்கும்போது சிக்னலில் சிகப்பு விளக்கு எரிந்தால் மற்றவர்களைப்போல எரிச்சல் அடைவதில்லை. அது எனக்கு துதியின் நேரமாகவும், கர்த்தருடைய பிரசன்னத்தை உணருகிற நேரமாகவும் இருக்கிறது” என்றார்.
தேவபிள்ளைகளே, நீங்களும் கர்த்தரைத் துதிப்பதை ஒரு பழக்கமாக்கிக்கொள்ளுவீர்களா? பழக்கப்படுத்திக்கொண்டால் நீங்கள் எல்லா நேரத்திலும் கர்த்தரின் பிரசன்னத்தை உணருவீர்கள்.
நினைவிற்கு:- “கர்த்தரைத் துதியுங்கள்; அவர் நாமத்தைத் தொழுதுகொள்ளுங்கள்; அவருடைய செய்கைகளை ஜனங்களுக்குள்ளே அறிவியுங்கள்” (ஏசா. 12:4).