No products in the cart.
ஏப்ரல் 10 – துதிக்குப் பாத்திரர்!
“கர்த்தரைத் துதியுங்கள்; அவர் நல்லவர்; அவர் கிருபை என்றுமுள்ளது” (சங். 136:1).
கர்த்தர் நல்லவர் என்பதை ருசிக்கிறதோடு நீங்கள் நின்றுவிடக்கூடாது. ஒவ்வொருநாளும் அவரது கிருபையை எண்ணித் துதித்து அவரைப் போற்ற வேண்டும். கர்த்தருடைய கிருபை என்பது என்றென்றும் உள்ள ஒன்று.
ஒருநாளும் அவருடைய கிருபை உங்களை விட்டு விலகுவதுமில்லை. உங்களைக் கைவிடுவதுமில்லை. என்றென்றைக்கும் அவரே துதிக்கும், ஸ்தோத்திரத்துக்கும், கனத்துக்கும், மகிமைக்கும் பாத்திரராக இருக்கிறார்.
சாலொமோன் ராஜா தேவனுடைய ஆலயத்தைப் பிரதிஷ்டை செய்தபோது, அங்கிருந்த ஆசாரியர்களும், லேவியர்களும் கர்த்தரை ஏக சத்தமாய் துதித்துப் பாடத் தீர்மானித்தார்கள். என்ன சொல்லி அவரைத் துதிப்பது? ஆயிரமாயிரமான நன்மைகளை செய்திருக்கிறார். அன்புடன் வழி நடத்தியிருக்கிறார். தேவ ஜனங்களை நிலைப்படுத்தி கானானைச் சுதந்தரமாய் தந்திருக்கிறார்.
ஆகவே தேவனுடைய எல்லா நன்மைகளையும் நினைவுகூர்ந்து ஒரே வரியைத் திரும்பத் திரும்பச் சொல்லி அவர்கள் துதித்தார்கள். அது என்ன வரி தெரியுமா? “கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றுமுள்ளது” என்பதே அது.
வேதம் சொல்லுகிறது: “கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றுமுள்ளது” என்று அவரை ஸ்தோத்திரிக்கையில் கர்த்தருடைய வீடாகிய தேவாலயம் மேகத்தினால் நிறையப்பட்டது. கர்த்தருடைய மகிமை தேவனுடைய ஆலயத்தை நிரப்பிற்று (2 நாளா. 5:13).
நீங்கள் கர்த்தர் நல்லவர் என்று சொல்லிப் போற்றிப் புகழ்ந்து அவருடைய கிருபையைத் துதிக்கும்போது கர்த்தருடைய உள்ளம் மகிழ்ந்து குளிர்கிறது. அன்றைக்கு கர்த்தருடைய வீடாகிய தேவாலயத்தை மேகத்தினால் நிரப்பினவர், இன்று உங்களுடைய உள்ளமாகிய தேவனுடைய ஆலயத்தையும் தம்முடைய மகிமையினால் மூடியருள்வார். நீங்களே அவருடைய வாசஸ்தலங்களாய் இருக்கிறீர்கள்.
ஆகவே, முழு இருதயத்தோடும் மிகுந்த சந்தோஷத்தோடும் ‘கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றுமுள்ளது’ என்று துதியுங்கள். சங்கீதம் 136 ஒரு ஆச்சரியமான சங்கீதமாய் இருக்கிறது. அதில் ஒவ்வொரு வசனமும் “அவர் கிருபை என்றுமுள்ளது” என்ற வார்த்தைகளுடன் முடிவடைகிறது. இந்த சங்கீதத்தில் முதல் வசனமானது அவர் நல்லவர் என்பதையும், பின்வரும் வசனங்கள் அவர் ஏன் துதிக்கப்படத்தக்கவர் என்பதையும் வலியுறுத்துகின்றன.
அவர்தான் இன்று உங்களுக்கு ஒரு வாக்குத்தத்தத்தைக் கொடுக்கிறார். “மலைகள் விலகினாலும், பர்வதங்கள் நிலை பெயர்ந்தாலும், என் கிருபை உன்னைவிட்டு விலகாமலும், என் சமாதானத்தின் உடன்படிக்கை நிலைபெயராலும் இருக்கும் என்று, உன் மேல் மனதுருகுகிற கர்த்தர் சொல்லுகிறார்” (ஏசா. 54:10).
தேவபிள்ளைகளே, “கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றுமுள்ளது” என்று மீண்டும் மீண்டும் சொல்லி அவரைத் துதிப்பீர்களா? அப்போது மகிமையின் மேகங்கள் உங்களை அரவணைத்துக் கொள்ளும். கர்த்தர் நல்லவர், நன்மையினால் உங்களை அவர் நிரப்பியருளுவார். அவரே துதிக்குப் பாத்திரர்.
நினைவிற்கு:- “நம்முடைய தாழ்வில் நம்மை நினைத்தவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது” (சங். 136:23).