Appam, Appam - Tamil

ஏப்ரல் 02 – எப்பொழுதும் துதியுங்கள்!

“கர்த்தரை நான் எக்காலத்திலும் ஸ்தோத்திரிப்பேன்; அவர் துதி எப்போதும் என் வாயிலிருக்கும்” (சங். 34:1).

கர்த்தரைத் துதிப்பதில் இரண்டு விதங்கள் இருக்கின்றன. ஒன்று, சாதாரண துதி. அடுத்தது, கர்த்தரை உயர்த்தி மகிமைப்படுத்தும் துதி. சாதாரண துதி என்பது எது? கர்த்தர் உங்களுக்கு நன்மை செய்யும்போது துதிக்கிற துதியே சாதாரண துதி. அதாவது புதிதாக வேலை கிடைக்கும்போது, அல்லது ஏதாவது சந்தோஷமான காரியங்கள் நடக்கும்போது தேவனைத் துதிப்பீர்கள். இது இயற்கையான, சாதாரணமான துதி. எல்லாம் நன்மையும், ஆசீர்வாதமுமாக இருக்கும்போது, கர்த்தரைத் துதிப்பது பெரிய காரியமல்ல.

கலக்கம், துயரம் ஏற்படும் நேரங்களிலும், இருளின் அந்தகார வேளைகளிலும், எல்லாமே உங்களுக்கு எதிரிடையாக நடக்கிறதுபோல உள்ள சூழ்நிலையிலும், கர்த்தரைத் துதிக்கிற துதிதான் மகிமையான துதி. அப்பொழுது கர்த்தர் உங்களுடைய கைகளில் இருபுறமும் கருக்குள்ள பட்டயத்தைத் தந்தருளுவார் (சங். 149:8). கர்த்தருடைய வார்த்தையே அந்த பட்டயம். இதனால் இருளின் அந்தகாரத்தை வெளிச்சமாக்கிக்கொண்டு, சத்துருக்களைச் சங்கரிப்பீர்கள். இது ஒரு பெரிய இரகசியமாகும்.

உதாரணமாக, பக்தனாகிய யோபுவை எடுத்துக்கொள்ளுங்கள். எதிர்பாராத சோதனைகள், அவர்மேல் வந்துகொண்டேயிருந்தன. என்ன செய்வது என்று தெரியாமல் கலங்குகிற வேளை. ஒரே நாளில் வீடு இடிந்து அவருடைய பத்து பிள்ளைகளும் அகோரமாய் மரித்துப்போனார்கள். ஆசைக்கு, ஒரு பிள்ளைகூட மீதியாயிருக்கவில்லை.

அவருடைய வேலைக்காரர்கள், ஒரே நாளில் சிறைப்பிடிக்கப்பட்டும், வெட்டுண்டும் போனார்கள். வானத்திலிருந்து அக்கினி விழுந்து, மிருக ஜீவன்களை அழித்தது. பகைவர்கள் கால்நடைகளை மொத்தமாய் கவர்ந்துகொண்டுச் சென்றார்கள். எல்லாமே அவருக்கு விரோதமாய் நடந்தன. மனைவிகூட அவருக்கு சத்துருவாய் மாறி, ‘நீர் இன்னும் உம்முடைய உத்தமத்தில் உறுதியாய் நிற்கிறீரோ? தேவனை தூஷித்து ஜீவனை விடும்’ என்றாள்.

ஆனாலும் யோபு பக்தன் துதியின் வல்லமையை அறிந்திருந்தார். “கர்த்தர் கொடுத்தார். கர்த்தர் எடுத்தார். கர்த்தருடைய நாமத்துக்கு ஸ்தோத்திரம் என்றார்” (யோபு 1:21). அவர் கர்த்தர் பேரிலுள்ள நம்பிக்கையை இழக்கவில்லை. முடிவு என்ன? துயர நேரத்திலும் யோபு பக்தன் துதித்ததினால், இழந்துபோன எல்லாவற்றையும் இரண்டு மடங்காகப் பெற்றுக்கொண்டார்.

இன்றைக்கு நடப்பவையெல்லாம் உங்களுக்கு விரோதமாயிருக்கின்றனவோ? வீட்டில் சுகவீனங்களும், வேலை இல்லா திண்டாட்டங்களும், பற்றாக்குறைகளும், கடன் பிரச்சனைகளும், ஆகாரத்துக்குக்கூட வழி இல்லாத நிலையும் உங்களை வாட்டுகின்றனவா? எல்லாச் சூழ்நிலையிலும் கர்த்தரைத் துதிக்கவேண்டும் என்று யோபு பக்தனைப் போல உறுதியாய் தீர்மானம் செய்யுங்கள்.

தேவபிள்ளைகளே, நீங்கள் எதை இழந்தாலும் நம்பிக்கையை மட்டும் இழந்துபோகாதிருங்கள். கர்த்தரைத் துதிக்கிற துதியின் முக்கியத்துவத்தை உணர்ந்து, எப்பொழுதும் அவரைத் துதியுங்கள். அதுவே ஆசீர்வாதங்களுக்கான வழி.

நினைவிற்கு:- “சோதனையைச் சகிக்கிற மனுஷன் பாக்கியவான்; அவன் உத்தமனென்று விளங்கின பின்பு கர்த்தர் தம்மிடத்தில் அன்புகூருகிறவர்களுக்கு வாக்குத்தத்தம்பண்ணின ஜீவகிரீடத்தைப் பெறுவான்” (யாக். 1:12).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.