No products in the cart.
மார்ச் 28 – விசாரிக்கிறார்!
“அவர் உங்களை விசாரிக்கிறவரானபடியால், உங்கள் கவலைகளையெல்லாம் அவர்மேல் வைத்துவிடுங்கள்” (1 பேது.5:7).
கர்த்தர் நம்மை அன்போடு விசாரிக்கிறவர். நமது சுக நலனையும், ஆத்துமாவின் நிலைமையையும், நமது பிள்ளைகளைப்பற்றியும் விசாரிக்கிறவர். அவர் உங்களை விசாரிக்கிறபடியால் உங்கள் உள்ளத்திலே தெய்வீக ஆறுதல் பெருகுகிறது.
ஒருமுறை, திருப்பத்தூர் உபவாசக் கூட்டங்கள் முடிந்து சென்னை திரும்பிக் கொண்டிருந்தபோது எங்களுடைய கார் பயங்கரமான விபத்துக்குள்ளானது. நான்தான் காரை செலுத்திக்கொண்டு வந்தேன். எனக்கும், என் தகப்பனாருக்கும், தாயாருக்கும் பலத்த அடி. மூன்று பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தோம்.
ஒவ்வொரு நாளும் அன்புள்ள தேவனுடைய பிள்ளைகள் எங்கள் நலம் பற்றி விசாரிக்க வந்தார்கள். அநேக தேவனுடைய ஊழியர்கள் டெலிபோன் செய்து பயப்படாதிருங்கள் என்று சொல்லி ஆற்றித் தேற்றினார்கள். நேரில் வந்து எங்களுக்காக கண்ணீரோடு ஜெபித்த தேவனுடைய பிள்ளைகளின் அன்பை எண்ணிப் பூரிப்படைந்து போனோம். கர்த்தருடைய குடும்பம் எவ்வளவு அருமையானது!
நாம் துக்கமாய் இருக்கும்போது மற்றவர்கள் நம்மை அன்போடு விசாரிக்க வேண்டுமென்று நம்மை அறியாமலேயே ஒரு எண்ணம் ஏற்படுகிறது. ஆனால் யார் வந்தாலும் வராவிட்டாலும் இயேசுகிறிஸ்து எப்பொழுதுமே அன்பாய் விசாரிக்க நம் அருகிலேயே இருக்கிறார். ஏசாயா சொல்லுகிறார், “இனி நீ அழுது கொண்டிராய்; உன் கூப்பிடுதலின் சத்தத்துக்கு அவர் உருக்கமாய் இரங்கி, அதைக் கேட்டவுடனே உனக்கு மறுஉத்தரவு அருளுவார்” (ஏசா.30:19).
ஆகாரின் வாழ்க்கையிலே புயல் வீசியபோது, அவள் குழந்தையைத் தூக்கிக்கொண்டு ஆபிரகாமின் வீட்டைவிட்டு வெளியேற வேண்டியதாயிற்று. செல்வந்தனாகிய ஆபிரகாம் அவளுக்குக் கொடுத்ததெல்லாம் கொஞ்சம் அப்பங்களும், ஒரு துருத்தி தண்ணீருமே. அவளை வனாந்தரத்திலே விசாரிக்க ஒருவரும் இல்லை. ஆனால் ஆண்டவர் அன்போடு விசாரித்தார். “ஆகாரே உனக்கு என்ன சம்பவித்தது, பயப்படாதே” என்று சொல்லித் தேற்றினார். பிள்ளையின் சத்தத்தைக் கர்த்தர் கேட்டார் (ஆதி. 21:17).
உங்களை உலகத்திலே ஒருவருமே புரிந்துகொள்ளாமல் இருந்தாலும், கர்த்தர் நன்கு புரிந்துகொண்டவராய் அன்புடன் அருகில் வந்து உங்களை விசாரிக்கிறார். மட்டுமல்ல, ஒரு தாய் தேற்றுவதுபோல தேற்றுகிறார். வேதம் சொல்லுகிறது, “அவர் உங்களை விசாரிக்கிறவரானபடியால், உங்கள் கவலைகளையெல்லாம் அவர்மேல் வைத்துவிடுங்கள்” (1 பேது. 5:7).
கவலைகளைத் தங்கள்மேலே ஏற்றுக்கொண்டிருக்கிறவர்கள் முறுமுறுப்பார்கள், கர்த்தரைக் குறை சொல்லுவார்கள். கர்த்தர் சொன்னார், “நீ என்னை நோக்கிக் கூப்பிடவில்லை; இஸ்ரவேலே, நீ என்னைக்குறித்து மனஞ்சலித்துப்போனாய்” (ஏசா.43:22). தேவபிள்ளைகளே, கர்த்தர் உங்களுடைய கவலைகளை விசாரிக்கிறவரானபடியால் எப்பொழுதும் மனமகிழ்ச்சியாயிருங்கள்.
நினைவிற்கு:- “கர்த்தர்மேல் உன் பாரத்தை வைத்துவிடு, அவர் உன்னை ஆதரிப்பார்; நீதிமானை ஒருபோதும் தள்ளாடவொட்டார்” (சங். 55:22).