AppamAppam - Tamil

மார்ச் 22 – அண்ணாந்துபார்!

“நீ வானத்தை அண்ணாந்துபார், நட்சத்திரங்களை எண்ண உன்னாலே கூடுமானால், அவைகளை எண்ணு என்று சொல்லி; பின்பு அவனை நோக்கி: உன் சந்ததி இவ்வண்ணமாய் இருக்கும் என்றார்” (ஆதி. 15:5).

பரிசுத்தவான்கள் வானத்தை அண்ணாந்துபார்த்து, வானாதி வானங்களுக்கு அப்பால் உள்ள தேவனை, நித்திய ராஜ்யத்தை, பரலோக மேன்மையைக் காண்கிறார்கள். அவர்களுடைய பெயர்கள் பரலோகத்தில் ஜீவ புத்தகத்திலே எழுதப்பட்டிருக்கின்றன. அங்கே பிதா இருக்கிறார். அவருடைய வலதுபாரிசத்தில் இயேசுகிறிஸ்து வீற்றிருக்கிறார். பரலோகத்தில் நித்திய சுதந்திரங்கள் உண்டு. ஆனால் உலகத்தாரோ இம்மைக்காகவே வாழ்ந்து மடிகிறார்கள்.

ஒரு வீட்டின் மொட்டைமாடியில் ஒரு சிறுவன் நின்று காற்றாடியை பறக்க விட்டுக்கொண்டிருந்தான். அந்த மாடிக்கு கைப்பிடிச் சுவர் இல்லை. அந்த சிறுவன் காற்றாடியைப் பறக்கவிடும்போது முழு கவனத்தையும் காற்றாடி மேலேயே பதித்திருக்கிறானேதவிர கீழே பயங்கரமான கிணறு ஒன்று இருக்கிறது என்பதை மறந்து போகிறான். அதைப்போலவே, மக்கள் உலகத்திலும், உலகத்திலுள்ளவைகளிலும் முழு கவனத்தையும் செலுத்தி முக்கியமானவைகளை மறந்து போகிறார்கள். கர்த்தர் தருகிற தேவ சமாதானத்தையும், ஆசீர்வாதத்தையும், நித்திய ஜீவனையும் இழந்து, முடிவிலே பாதாளத்தில் விழுகிறார்கள்.

ஆபிரகாம் வானத்தை அண்ணாந்து பார்த்தபோது, தன்னுடைய மாம்ச கண்களால் கோடிக்கணக்கான நட்சத்திரங்களைக் கண்டார். பின்பு உன்னுடைய சந்ததி அவ்வண்ணமாய் இருக்கும் என்று கர்த்தர் கொடுத்த வாக்குத்தத்தத்தை விசுவாசித்து, விசுவாசக் கண்களால் வானத்தைப் பார்த்தபோது அங்கே ஆயிரக்கணக்கான குழந்தைகளைக் கண்டார். பல கோத்திரங்களிலிருந்தும், ஜாதிகளிலிருந்தும், ஜனங்களிலிருந்தும் கர்த்தர் தனக்குத் தரப்போகிற விசுவாச சந்ததியைக் கண்டுப் பரவசமடைந்தார்.

பல நட்சத்திரங்களின் மத்தியிலே, பிரகாசமான விடிவெள்ளி நட்சத்திரமான இயேசுவோடு தன் சந்ததியார் மகிமையின் ராஜ்யத்தை சுதந்தரித்துக்கொள்ளப் போகிறதைக் கண்டார். நித்திய ராஜ்யத்திலே இயேசுவோடுகூட தானும் தன் சந்ததியுமாக கர்த்தரை சேவிக்கப்போகிறதைக் கண்டார். வேதம் சொல்லுகிறது, “ஒரு சந்ததி அவரைச் சேவிக்கும்; தலைமுறை தலைமுறையாக அது ஆண்டவருடைய சந்ததி என்னப்படும்” (சங். 22:30).

தேவபிள்ளைகளே, நீங்கள் ஆபிரகாமின் பிள்ளைகளாகவும், விசுவாசத்தின் சந்ததியாகவும், கர்த்தரை சேவிக்கிறவர்களாகவும் இருக்கிறீர்கள். ஆபிரகாமின் மூலமாக உங்களுக்கும் அந்த பெரிய ஆசீர்வாதமுண்டு. ஆகவே, உங்களுடைய கண்கள் தாவீதைப்போல விசுவாசத்தோடு வானத்தை நோக்கிப் பார்க்கட்டும். தாவீது சொல்லுகிறார், “எனக்கு ஒத்தாசை வரும் பர்வதங்களுக்கு நேராக என் கண்களை ஏறெடுக்கிறேன். வானத்தையும் பூமியையும் உண்டாக்கின கர்த்தரிடத்திலிருந்து எனக்கு ஒத்தாசை வரும்” (சங். 121:1,2).

நினைவிற்கு:- “இயேசு …..தம்முடைய கண்களை வானத்துக்கு ஏறெடுத்து: பிதாவே, வேளை வந்தது, நீர் உம்முடைய குமாரனுக்குத் தந்தருளின யாவருக்கும் அவர் நித்தியஜீவனைக் கொடுக்கும்பொருட்டு மாம்சமான யாவர்மேலும் நீர் அவருக்கு அதிகாரங்கொடுத்தபடியே, உம்முடைய குமாரன் உம்மை மகிமைப்படுத்தும்படிக்கு நீர் உம்முடைய குமாரனை மகிமைப்படுத்தும்” (யோவான் 17:1,2).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.