AppamAppam - Tamil

மார்ச் 20 – விசாலத்திலே வைப்பார்!

“அப்படியே அவர் உம்மையும் நெருக்கத்தினின்று விலக்கி, ஒடுக்கமில்லாத விசாலத்திலே வைப்பார்; உம்முடைய போஜனபந்தி கொழுமையான பதார்த்தங்களால் நிறைந்திருக்கும்” (யோபு 36:16).

நெருக்கங்களிலே இருக்க யாரும் விரும்புவதில்லை. வேலையில் நெருக்கம், குடும்பத்தில் நெருக்கம், பணப் பற்றாக்குறையால் நெருக்கம் என்று நெருக்கங்களிலேயே வாழ்ந்து கொண்டிருந்தால் உள்ளம் நொந்துபோய்விடும். கர்த்தர் உங்களை விசாலத்தில் வைக்கவே விரும்புகிறார்.

நீங்கள் பல ஆண்டுகளாக வாடகை வீடுகளிலே வாழ்ந்து கொண்டிருக்கலாம். வாடகை வீட்டின் சொந்தக்காரர்களுடைய நெருக்கத்தின் மத்தியிலே வாழுவது எவ்வளவு கஷ்டமான காரியம்! அவர்கள் சிறிய தவறுக்கும் கடுமையாய்க் கடிந்துகொள்ளுவார்கள். இரவில் சீக்கிரம் விளக்கை அணைக்கச் சொல்லுவார்கள். தண்ணீர் கிடைக்கிறதும் கடினமாயிருக்கும். வருடா வருடம் வாடகையை உயர்த்துவார்கள். இப்படிப்பட்ட நெருக்கடிகளின் மத்தியிலே நீங்கள் வாழ்ந்துகொண்டிருக்கலாம்.

ஆனால் கர்த்தர் உங்களுடைய நெருக்கத்தைக் காண்கிறவர். இஸ்ரவேல் ஜனங்கள் எகிப்தின் அடிமைத்தனத்திலே அதிகமாய் நெருக்கப்பட்டு ஒடுக்கப்பட்டார்கள். எகிப்தியர்கள் அவர்களைக் கடுமையாய் வேலை வாங்கினார்கள். அதிகாலையிலிருந்து இரவு வரையிலும் மண் சுமந்து, செங்கல் அறுத்து தொய்ந்து போனார்கள்.

அவர்கள் அந்த நெருக்கத்திலிருந்து கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டார்கள். அவர்களுடைய கூப்பிடுதலைக் கர்த்தர் கேட்டார். கர்த்தர் சொன்னார். “எகிப்திலிருக்கிற என் ஜனத்தின் உபத்திரவத்தை நான் பார்க்கவே பார்த்து ஆளோட்டிகளினிமித்தம் அவர்கள் இடுகிற கூக்கூரலைக் கேட்டேன்” (யாத். 3:8). கர்த்தர் அவர்களுடைய கூக்குரலைக் கேட்டு, அவர்களைப் பாலும் தேனும் ஓடுகிற விசாலமுள்ள தேசத்திற்கு கொண்டுவந்தார். அது மலைகளும் பள்ளத்தாக்குகளுமுள்ள தேசம். முன்மாரியும் பின்மாரியும் பெய்கிற தேசம்.

இன்றைக்கு உங்களை அவதிக்குள்ளாக்கும் நெருக்கம் மிக விரைவிலே முற்றிலுமாய் மாறிப்போய்விடும். உங்களுடைய பிரச்சனைகளின்போதும், பற்றாக்குறையின்போதும், மற்றவர்களால் நெருக்கப்பட்டு ஒடுக்கப்படும்போதும் சோர்ந்துபோகாதிருங்கள். உங்களுடைய நெருக்கத்தின் மத்தியிலே கர்த்தரை நோக்கிக்கூப்பிடுங்கள்.

சங்கீதக்காரன் சொல்லுகிறான், “என் நீதியின் தேவனே, நான் கூப்பிடுகையில் எனக்குச் செவிகொடும்; நெருக்கத்தில் இருந்த எனக்கு விசாலமுண்டாக்கினீர்; எனக்கு இரங்கி, என் விண்ணப்பத்தைக் கேட்டருளும்” (சங். 4:1). கர்த்தர் உங்களுடைய விண்ணப்பத்தையும் கேட்டருளுவார்.

தேவபிள்ளைகளே, நீங்கள் அநேகம்பேருக்கு ஆசீர்வாதமாய் விளங்கும்படி கர்த்தர் உங்களை விசாலத்திலே வைத்து ஆசீர்வதிப்பார். உங்களை மேன்மைப்படுத்துவார். “நீங்கள் இப்பொழுது இருக்கிறதைப் பார்க்கிலும் ஆயிரமடங்கு அதிகமாகும்படி உங்கள் பிதாக்களின் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குச் சொல்லியபடியே உங்களை ஆசீர்வதிப்பாராக” (உபா. 1:11).

நினைவிற்கு:- “தேவரீர் எங்களைச் சிறுமைப்படுத்தின நாட்களுக்கும், நாங்கள் துன்பத்தைக் கண்ட வருஷங்களுக்கும் சரியாய் எங்களை மகிழ்ச்சியாக்கும்” (சங். 90:15).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.