AppamAppam - Tamil

மார்ச் 19 – அபிஷேகம் பண்ணினார்!

“கர்த்தருடைய ஆவியானவர் என் மேலிருக்கிறார்; தரித்திரருக்குச் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கும்படி என்னை அபிஷேகம் பண்ணினார்” (லூக். 4:18).

அபிஷேகம் பண்ணப்பட்டவர்களுக்குக் கர்த்தர் ஊழியத்தை வைத்திருக்கிறார். அந்த ஊழியத்தை நிறைவேற்ற அவர்களுக்கு ஞானத்தையும், பெலத்தையும், வல்லமையையும் தந்தருளுகிறார்.

பழைய ஏற்பாட்டில் ஆசாரியர்களை அபிஷேகம் பண்ணும்போது “….எனக்கு ஆசாரிய ஊழியம் செய்யும்படிக்கு….. அவர்களைப் பிரதிஷ்டைபண்ணி, அவர்களைப் பரிசுத்தப்படுத்துவாயாக” (யாத். 28:41) என்று கர்த்தர் சொன்னார். கர்த்தரால் மீட்கப்பட்டவர்கள் புதிய ஏற்பாட்டில் தேவனுக்கு முன்பாக ஆசாரியர்களாகவே இருக்கிறார்கள். சபையின் பிரசங்க பீடத்திலே நிற்க நியமிக்கப்பட்ட ஊழியர்கள் மட்டுமே ஊழியக்காரர்கள் என்று எண்ணிவிடக்கூடாது. ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு ஊழியமுண்டு.

ஒவ்வொரு கிறிஸ்தவனும் கர்த்தருக்கு ஊழியம் செய்தேயாக வேண்டும். தேவனுக்கு ஆராதனைச் செய்யும் ஊழியமும் உண்டு (மத். 4:10). சுத்த மனசாட்சியோடே அவருடைய சமுகத்தில் வரவேண்டிய ஊழியமும் உண்டு (2 தீமோ. 1:4). பயத்தோடும் நடுக்கத்தோடும் அவரைச் சேவிக்க வேண்டிய ஊழியமும் உண்டு (எபி. 12:28). நம்முடைய சரீரங்களை ஜீவபலியாய் அவருக்கு ஒப்புக்கொடுத்து புத்தியுள்ள ஆராதனை செய்யவேண்டிய ஊழியமும் உண்டு. (ரோமர் 12:1).

அபிஷேகம் பண்ணப்பட்ட ஒவ்வொருவருக்கும் கர்த்தர் வைத்திருக்கிற ஊழியத்தை ஏசா.61-ம் அதிகாரத்தில் தெளிவாக காணலாம். சிறுமைப்பட்டவர்களுக்கு சுவிசேஷத்தை அறிவிக்கும் ஊழியம், இருதயம் நொறுங்குண்டவர்களுக்கு காயங்கட்டும் ஊழியம், சிறைப்பட்டவர்களுக்கு விடுதலையளிக்கும் ஊழியம், கட்டுண்டவர்களுக்கு கட்டவிழ்க்கும் ஊழியம், கர்த்தருடைய அநுக்கிரக வருஷத்தையும், நம்முடைய தேவன் நீதியை சரிப்படுத்தும் நாளையும் கூறும் ஊழியம், துயரப்பட்டவர்களுக்கு ஆறுதல் செய்யும் ஊழியம், சீயோனிலே துயரப்பட்டவர்களைச் சீர்ப்படுத்தும் ஊழியம், அவர்களுக்கு சாம்பலுக்குப் பதிலாகச் சிங்காரத்தைக் கொடுக்கும் ஊழியம் என்று பல்வேறு வகையான ஊழியங்களைக் குறித்து வாசிக்கலாம்.

இயேசு கிறிஸ்து அபிஷேகம் பெற்றவராய், இந்த ஊழியங்களை எல்லாம் தன்னுடைய வாழ்நாளிலே நிறைவேற்றினார். வேதம் சொல்லுகிறது: “நசரேயனாகிய இயேசுவைத் தேவன் பரிசுத்த ஆவியினாலும் வல்லமையினாலும் அபிஷேகம் பண்ணினார்; தேவன் அவருடைனேகூட இருந்தபடியினாலே அவர் நன்மை செய்கிறவராயும் பிசாசின் வல்லமையில் அகப்பட்ட யாவரையும் குணமாக்குகிறவராயும் சுற்றித் திரிந்தார்” (அப். 10:38).

இயேசுவைப் பரிசுத்த ஆவியினாலும், வல்லமையினாலும் அபிஷேகித்த அதே ஆவியானவர் உங்களையும் அவற்றால் நிரப்பியிருக்கிறார். அவரே உங்களை ஊழியத்திற்கு ஆயத்தப்படுத்துகிறவர். அவரே உங்களை வல்லமையான சாட்சிகளாக நிலைநிறுத்துகிறவர். தேவபிள்ளைகளே, எப்பொழுதும் ஆவியானவருடைய அபிஷேக எண்ணெயினால் நிரம்பியிருங்கள்.

நினைவிற்கு:- “எழும்பிப் பிரகாசி; உன் ஒளி வந்தது, கர்த்தருடைய மகிமை உன்மேல் உதித்தது” (ஏசா. 60: 1).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.