No products in the cart.
மார்ச் 17 – வழியைக் காட்டுவார்!
“நான் உனக்குப் போதித்து, நீ நடக்கவேண்டிய வழியை உனக்குக் காட்டுவேன்; உன் மேல் என் கண்ணை வைத்து, உனக்கு ஆலோசனை சொல்லுவேன்” (சங் 32:8).
கர்த்தருடைய வாக்குத்தத்தங்கள் எத்தனை அருமையாய் ஆத்துமாவை ஆறுதல்படுத்துகின்றன! “நீ நடக்க வேண்டிய வழியை உனக்குக் காட்டுவேன்” என்று அவர் அன்போடு சொல்லுகிறார்.
கர்த்தருடைய ஐந்து விதமான பெயர்களை தீர்க்கதரிசனமாக ஏசாயா கூறி மகிழ்ந்தார். அவர் அதிசயமானவர் என்றும், ஆலோசனைக்கர்த்தர் என்றும் சொன்னார். ஆலோசனைக்கர்த்தர்தாமே வல்லமையுள்ள தேவனாகவும், நித்திய பிதாவாகவும், சமாதானப் பிரபுவாகவும் விளங்குகிறார். அவர் கொடுக்கிற ஆலோசனைகள் ஏதோ ஒருசில ஆண்டுகள் கல்லூரியிலே படித்துப் பெறுகிற, ஞானத்தினால் வருகிற ஆலோசனைகள் போன்றவை அல்ல. அது நித்திய நித்திய காலமான அனுபவத்திலிருந்து வருகிற பூரணமான ஆலோசனைகள். “உம்மை உயர்த்தி, உமது நாமத்தைத் துதிப்பேன்; நீர் அதிசயமானவைகளைச் செய்தீர்; உமது பூர்வ ஆலோசனைகள் சத்தியமும் உறுதியுமானவைகள் (ஏசா. 25: 1).
யுத்தகாலங்களில் சேனைத் தளபதிகள் அவசரமாக ஆலோசனை நடத்துகிறார்கள். தேசத்தில் நெருக்கடிகள் வரும்போது அரசியல் தலைவர்கள் ஆலோசனை நடத்துகிறார்கள். ஆனால் நீங்களோ, ஒவ்வொருநாளும் அதிகாலை வேளையில் கர்த்தருடைய பாதத்தில் அமர்ந்து, வேதத்தை வாசித்து, கர்த்தர் கொடுக்கிற ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளவேண்டும். சங்கீதக்காரன் சொல்லுகிறான்: “தேவனே உமது ஆலோசனைகள் எனக்கு எத்தனை அருமையானவைகள்; அவைகளின் தொகை எவ்வளவு அதிகம்” (சங்.139 :17).
கர்த்தருடைய ஆலோசனைகளை எவ்விதமாய்ப் பெறுவது? நீங்கள் ஜெப நேரத்தில் கர்த்தருடைய மெல்லிய சத்தத்தினால் அதை அறியலாம். வேத வசனங்கள் மூலமாக அறியலாம். சொப்பனங்கள் மூலமாகவும், தரிசனங்கள் மூலமாகவும் கர்த்தர் உங்களுக்கு ஆலோசனைகளைத் தருகிறார்.
ஒரு மனுஷன் தன்னிடம் நிலம் இருக்கிறது, வீடு இருக்கிறது என்று சொன்ன பொய்யை நம்பி, அதற்குரிய பணத்தை ஒரு சகோதரி அவருக்குக் கொடுத்துவிட்டார்கள். பணம் கொடுத்ததற்கான எந்த ரசீதையும் அவரிடத்திலிருந்து அந்த சகோதரி பெற்றுக்கொள்ளவில்லை. ஆனால், அந்த மனுஷனோ அவரை ஏமாற்றி விட்டார்.
முடிவாக, இந்த சகோதரி மனம் நொந்து, கர்த்தரிடத்தில் ஜெபித்தபோது கர்த்தர் “மகளே, நீ அந்த பணத்தை அவனிடம் கொடுப்பதற்கு முன்பாக ஏன் என்னிடம் ஆலோசனை கேட்கவில்லை? எனினும் அந்தப் பணம் உனக்கு கிடைக்க வழி செய்வேன்” என்று சொல்லி திடீரென்று அவர்கள் மனக்கண்களுக்கு முன்பாக ஒரு நீதிபதியின் முகத்தைக் காண்பித்து அவரை அணுகு” என்றார். கர்த்தரின் ஆலோசனையின்படியே அந்த நீதிபதியிடம் சென்றபோது, அவர் போலீஸ் அதிகாரிகளை அனுப்பி அவர்கள் பெற வேண்டிய பணத்தைப் திரும்பப் பெற்றுத் தந்தார். தேவபிள்ளைகளே, கர்த்தரை முன்நிறுத்தி உங்கள் காரியங்களைச் செய்யுங்கள். அவரே உங்களைச் சரியான பாதையில் வழிநடத்த வல்லவர்.
நினைவிற்கு:- “கர்த்தருடைய ஆலோசனை நித்தியகாலமாகவும், அவருடைய இருதயத்தின் நினைவுகள் தலைமுறை தலைமுறையாகவும் நிற்கும்” (சங். 33:11).