No products in the cart.
மார்ச் 16 – முன்னே போவார்!
“கர்த்தர் உங்கள் முன்னே போவார்; இஸ்ரவேலின் தேவன் உங்கள் பிறகே உங்களைக் காக்கிறவராயிருப்பார்” (ஏசாயா 52:12).
கர்த்தர் உங்களுக்கு முன்னே செல்லுகிறவர். ராஜாதி ராஜாவாய், கெம்பீரமாய் உங்களை வழிநடத்திக்கொண்டு செல்லுகிறவர். கோணலான பாதைகளை செம்மையாக்கிக்கொண்டு போகிறவர். தடைகளையெல்லாம் தகர்த்து உங்களை நடத்திக்கொண்டு போகிறவர்.
அநேகர் தூர இடங்களுக்கு புதிதாகப் போகும்போது பயப்படுவார்கள். முன்பின் அறியாத இடத்திற்கு செல்லும்போது ஆபத்து ஏதாகிலும் வந்து விடுமோ, பிரச்சனைகள் ஏதாவது நேர்ந்து விடுமோ என்று எண்ணித் தயங்குவார்கள்.
ஆனால் ஆண்டவர் அன்போடு சொல்லுகிறார், நான் உங்களுக்கு முன்பாகப் போவேன். பின்பாகவும் காத்துக்கொள்ளுவேன். ஆகவே நீங்கள் பயப்பட்டு கலங்கவேண்டியதில்லை. கர்த்தர் சொல்லுகிறார், “இதோ, உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன்” (மத். 28:20).
அநேகர் வெளிநாடுகளுக்குச் செல்லும்போது, நண்பர்களோ, உறவினர்களோ அவர்களை வழியனுப்ப வரக்கூடும். அவர்கள் உள்ளத்திலுள்ள அன்பினிமித்தம் பகலானாலும், இரவானாலும், பனியானாலும், மழையானாலும் அவர்களை வழியனுப்பப் போவார்கள். அத்தகையவர்களின் அன்பு, பயணம் செய்பவர்களின் உள்ளத்தைப் பூரிப்பாக்கிவிடும்.
பாருங்கள்! உலகப்பிரகாரமான நண்பர்களும், உறவினர்களுமே அத்தனை அக்கறை எடுத்து அவர்களோடு கூடவந்து அவர்கள் புறப்படுகிற வரையிலும் காத்து நிற்கிறார்களென்றால், சிநேகிதத்தின் உச்சிதமான கர்த்தர் எத்தனை மேன்மையாய் உங்களோடுகூட இருப்பார் என்பதை எண்ணிப்பாருங்கள். நிச்சயமாகவே கர்த்தர் எப்போதும் உங்களோடுகூட இருக்கிறவர். ஆகவே நீங்கள் கலங்கவேண்டிய அவசியமில்லை.
மோசே அந்த பாதுகாப்பான கர்த்தரையே இஸ்ரவேல் ஜனங்களுக்கு அடைக்கலமாய்க் கொடுக்கத் தீர்மானித்தார். “அநாதி தேவனே உனக்கு அடைக்கலம்; அவருடைய நித்திய புயங்கள் உனக்கு ஆதாரம்” (உபா. 33:27) என்று சொல்லி மோசே ஆசீர்வதிப்பதைப் பாருங்கள்.
கர்த்தருடைய பிள்ளைகள் என்று அழைக்கப்படுவது ஒரு மிகப்பெரிய பாக்கியம். கர்த்தரைத் துணையாகக் கொண்டிருப்பது அதைப் பார்க்கிலும் பெரிய பாக்கியம். அவர் முன்னே செல்ல, அவருக்குப் பின்னே நீங்கள் நடப்பது எத்தனை மேன்மையான பாக்கியம்! உங்களைக் காக்கும்படி, அவர் தம்முடைய தூதர்களையெல்லாம் உங்களோடுகூட அனுப்புகிறார்.
நீங்கள் கர்த்தருடைய பிரசன்னத்தை உணருகிறபடியினால் எப்போதும் அவரைத் துதித்து, மகிமைப்படுத்தி, அவருடைய பிரசன்னத்திலே நிலைத்திருங்கள். தேவபிள்ளைகளே, உங்களுடைய வாழ்க்கை அவரைப் பிரியப்படுத்தும் வகையில் அமையும்பட்சத்தில் அவர் உங்களை வழிநடத்திக்கொண்டு உங்கள் முன்னே செல்லுவது நிச்சயம்.
நினைவிற்கு:- “என் சமுகம் உனக்கு முன்பாகச் செல்லும், நான் உனக்கு இளைப்பாறுதல் தருவேன்” (யாத். 33:14).