No products in the cart.
மார்ச் 15 – நிலைநிறுத்துவார்!
“அவன் நிலைநிறுத்தப்படுவான்; தேவன் அவனை நிலைநிறுத்த வல்லவராயிருக்கிறாரே” (ரோமர் 14:4).
கர்த்தர் உங்களுக்கு ஒரு எச்சரிப்பைக் கொடுக்கிறார். அது என்ன எச்சரிப்பு? வழிவிலகிப்போகிற சகோதரர்களை குற்றவாளிகளாக தீர்க்கக்கூடாது என்பதே அந்த எச்சரிப்பு. காரணம், அவர்களையும் கர்த்தர் நேசித்துத் திரும்பக் கொண்டுவருவதற்கு வல்லமையுள்ளவராக இருக்கிறார்.
ஒருமுறை, ஒரு குருவானவர் எப்பொழுதோ செய்த ஒரு தவறை, ஒரு சகோதரன் தனது புத்தகத்தில் வெளியிட்டு அவமானப்படுத்தினார். அந்த குருவானவர் ஓய்வு நாளை சரியாக ஆசரிக்கவில்லை என்று அவரைப் பயங்கரமாகத் தாக்கி எழுதியிருந்தார். அந்த குருவானவர் பல ஆண்டுகளுக்குப் பிறகுதான் அந்த புத்தகத்தைப் படிக்க நேர்ந்தது. அவர் கர்த்தருடைய பாதத்தில் கண்ணீர் சிந்தி தன்னுடைய குறையை அறிக்கையிட்டு எப்பொழுதோ பாவமன்னிப்பு பெற்றிருக்கக்கூடும். கர்த்தர் அவரை நீதிமானாக ஆக்கியிருக்கவும் கூடும்.
ஆனால் எழுதப்பட்ட அந்த புத்தகமோ, அந்த குருவானவரை குற்றவாளியாகத் தொடர்ந்து தீர்த்துக்கொண்டே இருந்தது. அந்த புத்தகத்தை எழுதிய சகோதரனைக் குறித்து விசாரித்தபோது அவனுக்கு பைத்தியம் பிடித்துவிட்டது என்றும், அவன் தற்பொழுது தன் சுயநினைவின்றி அலைந்துகொண்டிருக்கிறான் என்றும் தெரியவந்தது. எத்தனை வேதனையான காரியம்!
வேதம் சொல்லுகிறது: “மற்றவர்களுடைய வேலைக்காரனை குற்றவாளியாக தீர்ப்பதற்கு நீ யார்? அவன் நின்றாலும் விழுந்தாலும் அவனுடைய எஜமானுக்கே அவன் உத்தரவாதி. அவன் நிலைநிறுத்தப்படுவான். தேவன் அவனை நிலைநிறுத்த வல்லவராயிருக்கிறாரே” (ரோமர் 14:4). பழைய ஏற்பாட்டில், நீதிமான் ஏழுதரம் விழுந்தாலும் அவன் எழுந்திருப்பான் என்று வேதம் சொல்லுகிறது. புதிய ஏற்பாட்டில் உள்ள விசுவாசிகளுக்கு கர்த்தர் எத்தனை அதிகமாக கிருபையைத் தருகிறவராயிருக்கிறார்! நீங்கள் எப்படி மற்றவர்களை நியாயம் தீர்க்க முடியும்?
அப்.பவுல் சொல்லுகிறார், “ஆனதால், கர்த்தர் வருமளவும் நீங்கள் காலத்துக்கு முன்னே யாதொன்றைக் குறித்தும் தீர்ப்புச் சொல்லாதிருங்கள்; இருளில் மறைந்திருக்கிறவைகளை அவர் வெளியரங்கமாக்கி, இருதயங்களின் யோசனைகளையும் வெளிப்படுத்துவார்; அப்பொழுது அவனவனுக்குரிய புகழ்ச்சி தேவனால் உண்டாகும்” (1 கொரி. 4:5)
கிறிஸ்து உங்களை விடாமல் கவனித்துக்கொண்டேயிருக்கிறார். அவருடைய இரத்தத்தால் கழுவப்பட்ட நீங்கள் முற்றிலும் அவருடையவர்களே. அவரே உங்களைத் தம்முடைய பாதையில் நடத்துகிறார், சிட்சிக்கிறார், கண்டிக்கிறார், சரிப்படுத்துகிறார்.
தேவபிள்ளைகளே, அடிக்கடி சோர்வு உங்களை மேற்கொள்ளலாம். கலங்காதேயுங்கள். பெலன் இல்லாதவர்களுக்கு பெலத்தை அருளி, சத்துவம் இல்லாதவர்களுக்கு சத்துவத்தை பெருகப் பண்ணுகிற தேவன் உங்களை நிலை நிறுத்த வல்லமையுள்ளவராயிருக்கிறார்.
நினைவிற்கு:- “….விசுவாசத்தைக் கொண்டு தேவனுடைய பலத்தினாலே காக்கப்பட்டிருக்கிற உங்களுக்கு அந்தச் சுதந்தரம் பரலோகத்தில் வைக்கப்பட்டிருக்கிறது” (1 பேதுரு 1:5).