No products in the cart.
மார்ச் 12 – உயர்த்துவார்!
மார்ச் 12 – உயர்த்துவார்
“ஏற்ற காலத்திலே தேவன் உங்களை உயர்த்தும்படிக்கு, அவருடைய பலத்த கைக்குள் அடங்கியிருங்கள்” (1 பேது. 5:6).
நீங்கள் தாழ்மையுள்ளவர்களாய் நடந்து, அவருடைய பலத்த கரத்தில் அடங்கியிருக்கும்போது அவர் உங்களை உயர்த்துவார். உங்களை உயர்த்துகிற காலம் நிச்சயமாகவே உண்டு. அதே நேரத்தில் நீங்கள் அவருடைய பலத்த கரத்தில் அடங்கியிருக்கவேண்டும் என்பதையும் அவர் எதிர்பார்க்கிறார். கர்த்தர் உங்களை உயர்த்தும் வரையிலும், எல்லா தாழ்மையின் பாதைகளிலும் முறுமுறுக்காமல் மகிழ்ச்சியோடு முன்னேறிச் செல்வீர்களாக.
யோசேப்பை கர்த்தர் உயர்த்துமுன்பு, அவர் போத்திபாரின் வீட்டிலும் சிறைச்சாலையிலும் எவ்வளவு பொறுமையாகக் காத்திருந்தார் என்பதைச் சிந்தித்துப் பாருங்கள். “ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு காலம் உண்டு” என்று பிரசங்கி 3:1-ல் நாம் வாசிக்கிறோம். ஆம், கர்த்தருக்கு ஏற்ற காலமுமுண்டு. ஏற்ற வேளையுமுண்டு. அற்புதங்களைச் செய்யக்கூட கர்த்தர் தம்முடைய ஏற்ற வேளைக்காய் காத்திருந்தார் அல்லவா? நீங்கள் அவரால் உயர்த்தப்படுவதற்கு அவருடைய காலத்திற்கு உங்களை ஒப்புக்கொடுத்து அடங்கியிருங்கள்.
ஒரு கிணற்றுக்குள் இருக்கும் துவாரத்தில் சிட்டுக்குருவி ஒன்று வந்து கூடு கட்டி குஞ்சு பொரித்ததாம். அந்த குஞ்சுகளுக்கு ஒரே அவசரம். முழுவதுமாக இறகு முளைக்கும் முன்பாகவே அவைகள் பறக்க முயற்சித்ததினால் கிணற்றுக்குள் தவறி விழுந்து மடிந்தன. இன்னும் ஒன்று இரண்டு நாட்கள் கூட்டுக்குள் இருந்திருந்தால் அவை பெலன் கொண்டிருக்கும். அழகாய் உயரத்திலே பறந்து சென்றிருக்கும். ஆகவே ஏற்ற காலத்தில் உயர்த்தப்படும்படி நீங்கள் பொறுமையாய் இருக்க வேண்டியது எவ்வளவு அவசியம் என்பதை இது காட்டுகிறது.
இயேசுகிறிஸ்து தனது முப்பதாவது வயதுவரையிலும் அறியப்படாதவராய் வாழ்ந்தார். தேவகுமாரனாய் பூமிக்கு வந்த அவருடைய மொத்த வாழ்க்கையே முப்பத்து மூன்றரை வருஷங்கள்தான். அதில் முப்பது வருஷங்கள் அறியப்படாதவராய் வாழ்ந்தார் என்பது எத்தனை ஆச்சரியமானது! எனினும் கர்த்தருடைய வேளைக்காய் அவர் காத்திருந்தார். கர்த்தருடைய வேளையின்படி அவர் செய்த மூன்றரை ஆண்டுகால ஊழியமும், அவர் பேசிய வார்த்தையும் அதிக மேன்மையுடையதாயிருக்கின்றன.
கிறிஸ்து ஒன்றைக்குறித்தும் அவசரப்படவில்லை. நிதானமாய், ஒவ்வொன்றையும் அதனதன் நேரத்திலே செம்மையாயும், நேர்த்தியாயும் செய்தார். கானாவூரில் திராட்சரசம் குறைவுபட்ட வேளையிலும் அவர் தேவனுடைய சித்தத்திற்கும், வேளைக்குமே காத்திருந்தார். இயேசுகிறிஸ்து வெளிப்படையாக தன்னைக் காண்பித்துக்கொள்ள வேண்டும் என்றும் பிரபலமாக வேண்டும் என்றும் சீஷர்கள் விரும்பினார்கள். “பிரபலமாயிருக்க விரும்புகிற எவனும் அந்தரங்கத்தில் ஒன்றும் செய்யமாட்டான். நீர் இப்படிப்பட்டவைகளைச் செய்தால் உலகத்திற்கு உம்மை வெளிப்படுத்தும்” என்றார்கள். “இயேசு அவர்களை நோக்கி: “என் வேளை இன்னும் வரவில்லை” (யோவா. 7:6) என்றார். தேவபிள்ளைகளே, கர்த்தருடைய பலத்த கரத்தில் அடங்கியிருங்கள். நிச்சயமாகவே அவர் உங்களை உயர்த்துவார்.
நினைவிற்கு:- “இளைஞரே, மூப்பருக்குக் கீழ்ப்படியுங்கள். நீங்களெல்லாரும் ஒருவருக்கொருவர் கீழ்ப்படிந்து, மனத்தாழ்மையை அணிந்து கொள்ளுங்கள்” (1 பேது. 5:5).