No products in the cart.
மார்ச் 11 – வருவார்!
மார்ச் 11 – வருவார்
“இயேசுவானவர் எப்படி உங்கள் கண்களுக்கு முன்பாக வானத்துக்கு எழுந்தருளிப் போனாரோ, அப்படியே மறுபடியும் வருவார்” (அப். 1:11).
இயேசுகிறிஸ்து வரும் நாளை நாம் ஆவலோடு எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறோம். வருகிறவர் இன்னும் கொஞ்சக்காலத்தில் வருவார், தாமதம் பண்ணார். அமெரிக்கா முதன்முதலாக சந்திரனுக்கு தன் விண்கலமாகிய அப்பல்லோவை அனுப்பியபோது திரளான மக்கள் அதைப் பார்த்துக்கொண்டே இருந்தார்கள். கென்னடி ராக்கெட் தளத்திலிருந்து இந்த ராக்கெட் அனுப்பப்பட்டது. ராக்கெட் மேலே செல்லும்போது அமெரிக்க அரசாங்கம் உலகமெங்கும் இருக்கிற மக்கள் டெலிவிஷன் மூலம் அதைப் பார்க்கும்படி ஏற்பாடுகளைச் செய்துகொடுத்தது.
அந்த ராக்கெட் மேலே செல்லுவதைப் பார்த்துக் கொண்டிருந்த லட்சக்கணக்கான மக்களில், அதில் பயணம் செய்த விண்வெளி வீரரான ஆம்ஸ்ட்ராங்கின் மனைவியும் ஒருவர். தன் கணவன் விண்வெளிக்கு செல்லுவதைப் பார்த்தபோது அவருக்கு ஒரு பக்கம் சந்தோஷம், அதே நேரம் மறுபக்கம் பயம். பலவிதமான உணர்ச்சிகளினால் அந்த விண்வெளி வீரரின் மனைவி கலங்கிப் போயிருந்தார்கள்.
முடிவில் ஒரு பத்திரிக்கை நிருபர் அந்தப் பெண்ணிடம் வந்து, “உங்களுடைய கணவனார் விண்வெளியில் செல்லுகிறாரே, இதைக்குறித்து என்ன நினைக்கிறீர்கள்?” என்று கேட்டார். அதற்கு அந்த பெண், “இந்த விண்வெளிக் கப்பல் மேலே செல்லுவதைக் காணுவதைப் பார்க்கிலும், அது பத்திரமாக கீழே இறங்குவதைக் காணவே பெரிதும் ஆவலோடு இருக்கிறேன்” என்றார். தன் கணவன் பத்திரமாக கீழே இறங்கவேண்டும் என்பதே தனது வாஞ்சையும், விருப்பமுமாக இருப்பதாக அந்தப் பெண் தெரிவித்தார்.
இயேசுகிறிஸ்து பரமேறிச் சென்றதை சீஷர்கள் மட்டுமே ஒலிவமலைச் சாரலிலே நின்று பார்க்க முடிந்தது. ஆனால் உங்களுக்கோ ஆண்டவர் திரும்பி வரப்போகிறதைப் பார்க்கும் பாக்கியம் கிடைக்கப்போகிறது. அவர் எப்படி எடுத்துக்கொள்ளப்பட்டாரோ அப்படியே மறுபடியும் வருவார்.
‘அப்படியே வருவார்’ என்ற பதத்தைச் சிந்தித்துப் பாருங்கள். அநேகர் வெளிதேசம் செல்லுகிறார்கள். வெளிதேசத்திலுள்ள பணம், செல்வாக்கு, நாகரீகம் ஆகியவை அவர்களை முற்றிலும் மாற்றுகிறது. அவர்களுடைய அன்பு உள்ளம் மாறுகிறது; நட்புறவு சீர்குலைகிறது; தேவபக்தி அவர்களைவிட்டு ஓடிப்போய்விடுகிறது. ஆனால், இயேசு திரும்பி வரும்போது மாறாதவராய் அப்படியே வருவார். அவருடைய அன்புள்ளம் மாறாததாகவே இருக்கும். பூமியில் முன்பு அவர் மனுஷரோடு சரிசமமாய் நடந்தது போலவே இனியும் மனிதனோடு அன்பாய்ப் பேசி நடந்து வருவார். அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர் என்பதே அதன் காரணம்.
இதுவரையில் அவர் பரலோகத்திலிருந்து நம்முடைய நன்மைக்காக பிதாவினுடைய வலது பாரிசத்தில் நின்று பரிந்து பேசினார். நமக்காக வாசஸ்தலங்களை எல்லாம் ஆயத்தப்படுத்தினார். பரிசுத்த ஆவியானவரை பூமிக்கு அனுப்பிக்கொடுத்தார். விரைவில் நமக்காக அவர் வரப்போகிறார். தேவபிள்ளைகளே, அவரைச் சந்திக்க ஆயத்தப்படுங்கள். காலத்தைப் பிரயோஜனப்படுத்திக் கொள்ளுங்கள்.
நினைவிற்கு:- “அவரை நானே பார்ப்பேன்; அந்நிய கண்கள் அல்ல, என் கண்களே அவரைக் காணும்” (யோபு 19:27).