No products in the cart.
மார்ச் 10 – நேசித்தார்!
“தம்முடையவர்களிடத்தில் அன்புவைத்தபடியே, முடிவுபரியந்தமும் அவர்களிடத்தில் அன்பு வைத்தார்” (யோவான் 13:1).
நம்முடைய தேவன் அன்பும், இரக்கமும், தயையுமுள்ளவர். மட்டுமல்ல, முடிவுபரியந்தம் நம்மை நேசிக்கிறவரும்கூட.
ஒரு காட்டில், ஒரு ஆண் மானும், ஒரு பெண் மானும் தாகத்தோடு தண்ணீருக்காக அலைந்து திரிந்துகொண்டிருந்தன. கடைசியில் ஒரு இடத்தில் மிகக்கொஞ்சமான தண்ணீரைக் கண்டன. அப்போது அந்த தண்ணீரை ஆண் மான் குடிக்கட்டும் என்று பெண் மான் காத்திருக்க, பெண்மான் குடிக்கட்டும் என்று ஆண் மான் காத்திருந்தது.
கடைசியில் ஒன்று குடிக்காமல் மற்றொன்று குடிக்காது என்பதை அறிந்த அவை இரண்டுமே ஒன்றாக அந்த தண்ணீரில் வாய் வைத்தன. ஆனால் அந்த தண்ணீரோ கொஞ்சமும் குறையவில்லை. இரண்டுமே பாசாங்கு செய்து, மற்றது குடிக்கட்டும் என்று காத்திருந்ததே அதன் காரணம். இது எவ்வளவு பெரிய அன்பு! இங்கே அன்பு, தியாகம் செய்கிறது.
ஒரு கணவனும், மனைவியும் ரயில் பாதையிலுள்ள கட்டைகளின்மேல் நடந்து செல்லும்போது மனைவியின் கால் தண்டவாளத்திற்கும் மரக்கட்டைக்கும் இடையில் நன்றாக சிக்கிக்கொண்டது. மனைவியின் காலை விடுவிக்க கணவன் எவ்வளவோ முயற்சித்தும் முடியவில்லை.
அந்தோ, ஒரு துரித இரயில் வண்டி வேகமாக இவர்களை நோக்கி வந்து கொண்டிருந்தது. நகர முடியாத மனைவி, “ஐயோ, அத்தான் நீங்கள் தப்பித்துகொள்ளுங்கள்” என்று வேண்டினாள். ஆனால் அவனோ அவளைக் காப்பதுபோல் அவளை அணைத்துக்கொண்டு அசையாமல் நின்று, “அன்பே, இறப்பிலும் நான் உன்னுடனேயே இருக்க விரும்புகிறேன்” என்று உறுதியோடு சொன்னான். இருவரும் ஒன்றாகவே மரித்தார்கள்.
நம் அருமை ஆண்டவர், சிலுவையில் மரிக்கும்போதுகூட, பாடுகளைக் கண்டு பயப்படவில்லை. போர்ச் சேவகர்களைக் கண்டு பயப்படவில்லை. விசாரணையைக் கண்டு பயப்படவில்லை. அவர் சிலுவையைக் கண்டு பயந்து ஓடவில்லை.
அவர் நம்மேல் வைத்த அன்பினால், சிலுவையைக் கண்டு பயந்து ஓடிவிடாமல், நமக்காகப் பாடுகளையும், மரணத்தையும் மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொண்டார். வேதம் சொல்லுகிறது, “நம்மிடத்தில் அன்புகூர்ந்து, தமது இரத்தத்தினாலே நம்முடைய பாவங்களற நம்மைக் கழுவி, தம்முடைய பிதாவாகிய தேவனுக்கு முன்பாக நம்மை ராஜாக்களும், ஆசாரியர்களுமாக்கின அவருக்கு மகிமையும் வல்லமையும் என்றென்றைக்கும் உண்டாயிருப்பதாக” (வெளி. 1:6).
தேவபிள்ளைகளே, உங்கள்மேல் வைத்த அன்பினால், கர்த்தர் தம்மையே ஜீவபலியாக ஒப்புக்கொடுத்து, தமது இரத்தத்தினாலே உங்களைப் பாவங்களறக் கழுவியிருக்கிறார். உங்களை ராஜாக்களும் ஆசாரியர்களுமாக்கியிருக்கிறார். அவர் உங்கள்மேல் வைத்திருக்கும் நேசத்துக்கு அளவேயில்லை.
நினைவிற்கு:- “ஒருவன் தன் சிநேகிதருக்காகத் தன் ஜீவனைக் கொடுக்கிற அன்பிலும் அதிகமான அன்பு ஒருவரிடத்திலுமில்லை” (யோவான் 15:13).