AppamAppam - Tamil

மார்ச் 08 – கொடுப்பார்!

“….பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதா தம்மிடத்தில் வேண்டிக்கொள்ளுகிறவர்களுக்கு நன்மையானவைகளைக் கொடுப்பது அதிக நிச்சயம் அல்லவா?” (மத். 7:11).

நன்மையானவைகளைக் கொடுக்கிற பரமபிதா பெரிய ஐஸ்வரிய சம்பன்னராயிருக்கிறார். வெள்ளியும், பொன்னும் அவருடையது. பூமியும், அதின் நிறைவும், உலகமும் அதிலுள்ள குடிகளும் அவருடையது. அவர் தம்முடைய பிள்ளைகளுக்கு நன்மையான ஈவுகளைக் கொடுக்கிறார். சிலர் கர்த்தர் ஆவிக்குரிய காரியங்களை மட்டுமே கொடுக்கிறார் என்று எண்ணுகிறார்கள். இரட்சிப்பு, தேவ சமாதானம், பரிசுத்த ஆவியின் அபிஷேகம், நித்திய ஜீவன் இவைகளெல்லாம் கர்த்தரால் கொடுக்கப்படுகிற ஈவுகள். இத்தகைய ஆவிக்குரிய காரியங்களில் நம்மை ஆசீர்வதிக்கும் கர்த்தர், இம்மைக்குரிய காரியங்களிலும் நம்மை ஆசீர்வதிக்கிறார்.

ஒருமுறை இயேசு மலையின் மேல் ஏறி பிரசங்கித்தபோது திரளான ஜனங்கள் அவருடைய வார்த்தையைக் கேட்க வந்தார்கள். பரலோக மன்னாவாகிய தேவனுடைய வார்த்தையை இயேசு பிரசங்கித்தார். ஆவிக்குரிய ஆசீர்வாதங்கள் பொழியப்பட்டன. பரலோக ராஜ்யத்தின் இரகசியங்களைக் கர்த்தர் வெளிப்படுத்தினார்.

அந்த ஆவிக்குரிய ஆசீர்வாதத்தோடு கர்த்தர் நின்றுவிடவில்லை. வியாதியஸ்தர்களை குணமாக்கினார், குஷ்டரோகிகளை சொஸ்தப்படுத்தினார், பிசாசுகளைத் துரத்தி பலத்த அற்புதங்களைச் செய்தார். மேலும், வனாந்தரமான அந்த இடத்திலே ஏழு அப்பங்களையும், சில சிறு மீன்களையும் எடுத்து ஸ்தோத்திரம்பண்ணி, பிட்டு தம்முடைய சீஷர்களிடம் கொடுத்தார். சீஷர்கள் ஜனங்களுக்குப் பரிமாறினார்கள் (மத். 15:36).

எல்லாரும் சாப்பிட்டுத் திருப்தியடைந்தார்கள்; மீதியான துணிக்கைகளை ஏழு கூடை நிறைய எடுத்தார்கள். ஆம் கர்த்தர் சம்பூரணமாய்க் கொடுத்தார். அந்த ஜனங்கள் திருப்தியடைகிற வரையிலும் கொடுத்தார். மீதியான துணிக்கைகளை கூடைகளை நிரப்பும் அளவு கொடுத்தார். கர்த்தர் ஒருநாளும் அளந்து கொடுக்கிறவரல்ல. வானத்தின் பலகணிகளைத் திறந்து, இடங்கொள்ளாமற் போகுமட்டும் கொட்டிக் கொடுக்கிறவர். நீங்கள் கர்த்தரை நேசித்து அவருடைய ஊழியங்களுக்காகக் கொடுக்கும்போது, அவருடைய ஊழியர்களை கனம்பண்ணி உபசரிக்கும்போது நிச்சயமாகவே அவர் மனதிரங்குவார். இடங்கொள்ளாமற் போகுமட்டும் உங்களை ஆசீர்வதிப்பார் (மல்கி. 3:10).

வறுமையினால் வாடிய ஒரு பக்தன், “ஆண்டவரே நீர் மோட்சத்தில் இருக்கிறீர். மோட்சத்திலுள்ள தெருக்கள் எல்லாம் தங்கத்தினாலான தெருக்கள். அங்கே முத்துக்களும், வைரங்களும் நிரம்பியிருக்கின்றன. உம்முடைய மகனாகிய எனக்கு ஒரு முத்தைப் போடக்கூடாதா? ஒரு வைரக்கட்டியை தரக் கூடாதா” என்று ஜெபிப்பாராம். அது ஒரு வேடிக்கையான ஜெபம்தான். ஆனால் குழந்தையைப் போல அவர் ஜெபித்ததைக் கேட்ட கர்த்தர் அவருக்கு வானத்தின் பலகணிகளைத் திறந்து ஆசீர்வதித்தார். அவர் உலகப்பிரகாரமாகவும், ஆவிக்குரிய வகையிலும் ஆசீர்வதிக்கப்பட்டார். தேவபிள்ளைகளே, நம் தேவன் சகலவிதமான நன்மைகளையும் சம்பூரணமாய்க் கொடுக்கிற தேவன்.

நினைவிற்கு:- “கர்த்தர் நல்லவர் என்பதை ருசித்துப்பாருங்கள்; அவர்மேல் நம்பிக்கையாயிருக்கிற மனுஷன் பாக்கியவான்” (சங். 34:8).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.