No products in the cart.
மார்ச் 04 – துரத்திவிடுவார்!
“கர்த்தர் உங்களுக்கு முன்பாக அந்த ஜாதிகளையெல்லாம் துரத்திவிடுவார்; உங்களைப் பார்க்கிலும் ஜனம் பெருத்த பலத்த ஜாதிகளை நீங்கள் துரத்துவீர்கள்” (உபா. 11:23).
கர்த்தர் உங்களுக்காக வழக்காடுகிறார். உங்களுக்காக யுத்தம் செய்கிறார். அதோடல்லாமல், கர்த்தர்தாமே உங்களை எதிர்க்கும் ஜாதிகளையெல்லாம் துரத்தியும் விடுகிறார். அவர் அவர்களை துரத்திவிடுவதோடல்லாமல், நீங்களும் ஜாதிகளை துரத்தத்தக்கதாக உங்களைப் பெலப்படுத்துகிறார்.
இஸ்ரவேல் ஜனங்கள் கானானைச் சுதந்தரித்துக்கொள்ளுவதற்கு முன்பாக அங்கே அநேக அந்நிய ஜாதிகளும், ராஜாக்களும், அவர்களுடைய சேனைகளும் குடியிருந்தார்கள். இஸ்ரவேலர் பாலும் தேனும் ஓடுகிற அந்த கானானைச் சுதந்தரித்துக்கொள்ள வேண்டுமானால், அந்த ராஜாக்களை வெற்றிசிறந்து அங்கேயுள்ள அந்நிய ஜாதிகளை துரத்திவிட வேண்டும். அந்த ஜாதிகள் யார்?
வேதம் சொல்லுகிறது, “நீ சுதந்தரிக்கப்போகிற தேசத்தில் உன் தேவனாகிய கர்த்தர் உன்னைப் பிரவேசிக்கப்பண்ணி, உன்னைப் பார்க்கிலும் ஜனம் பெருத்த ஜாதிகளாகிய ஏத்தியர், கிர்காசியர், எமோரியர், கானானியர், பெரிசியர், ஏவியர், எபூசியர் என்னும் ஏழு பலத்த ஜாதிகளை உனக்கு முன்பாக துரத்தி…. பண்ணக்கடவாய்” (உபா. 7:1,2) என்று சொல்லப்பட்டிருக்கிறது.
இந்த ஏழு ஜாதிகளுக்கும் ஏழு வித்தியாசமான ஆவிக்குரிய அர்த்தங்களுண்டு. சுருங்கச் சொன்னால் இந்த ஏழு ஜாதிகளும் கர்த்தருடைய ஜனத்தை எதிர்க்கிற சத்துருக்களே. நீங்கள் அவர்களைக் குறித்து பயப்பட வேண்டியதில்லை. கர்த்தர் அவர்களைத் துரத்தி விடுவார். மட்டுமல்ல, உங்களுக்கும் அவர்களைத் துரத்துவதற்கு பெலன் தருவார்.
கர்த்தருடைய பிள்ளைகளுக்கு இருக்கும் முதல் சத்துரு மாமிசம். மாமிசத்தோடு மாமிச இச்சை, மாமிச பந்தங்கள் எல்லாம் வந்து ஒட்டிக்கொள்ளுகின்றன. உங்களுடைய ஆவிக்குரிய ஜீவியத்திற்கு விரோதமாக இந்த மாமிசம் போராடுகிறது. அநேகர் கர்த்தர் கொடுக்கிற வாக்குத்தத்தத்தை சுதந்தரிக்காமல் மாமிச இச்சைகளில் சிக்குண்டு வழி விலகிச் செல்வதினால் தோல்வியடைகிறார்கள்.
ஒருவேளை நீங்கள்கூட இன்றைக்கு ஜெயம் பெறாமல் தடுமாறிக் கொண்டிருக்கலாம். கர்த்தர் உங்களுக்கு ஜெயம் கொடுக்க விரும்புகிறார். உலகத்தையும், மாமிசத்தையும், பிசாசையும் மேற்கொள்ள தேவன் கிருபையை உங்களுக்குத் தந்தருளுவார். உங்களுக்கு ஜெயங்கொடுக்கிற கர்த்தரை உறுதியாகப் பிடித்துக்கொள்ளுங்கள். உங்களுடைய விசுவாசக் கண்கள், கர்த்தர் உங்களுக்கு முன்பாக இருக்கிற சத்துருக்களின் வல்லமைகளை துரத்திவிடுவதைக் காணட்டும்.
அந்த ஜாதிகள் யார்? அவர்கள் எப்படிப்பட்டவர்கள்? அவர்களை வேவு பார்த்த இஸ்ரவேலர்கள் அவர்களைக் குறித்து சுட்டிக்காட்டும்போது, “அங்கே இராட்சதப் பிறவியான ஏனாக்கின் குமாரராகிய இராட்சதரையும் கண்டோம்” (எண்.13:33) என்றார்கள். அவர்கள் பலசாலிகள், பெருமையுள்ளவர்கள்.
ஆனால் கர்த்தரோ அவர்களை இஸ்ரவேலருக்கு முன்பாகத் துரத்திவிட்டார். தேவபிள்ளைகளே, கர்த்தர் உங்களுக்கும் அவ்வாறே செய்வார்.
நினைவிற்கு:- “உங்கள்முன் ஒருவரும் எதிர்த்து நிற்பதில்லை. உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குச் சொன்னபடி உங்களால் உண்டாகும் பயமும் கெடியும் நீங்கள் மிதிக்கும் பூமியின் மேலெல்லாம் வரப்பண்ணுவார்” (உபா. 11:25).