No products in the cart.
மார்ச் 01 – அறிவார்!
“நான் போகும் வழியை அவர் அறிவார்” (யோபு 23:10)
யோபு பக்தன் சென்ற வழி யாராலும் அறிந்துகொள்ள முடியாத வழியாய் இருந்தது. அவருடைய மனைவி அவரை தூஷித்து கைவிட்டாள். அவருடைய நண்பர்கள் ஆலோசனை என்ற பெயரில் வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சினார்கள். அத்தகைய பாடுகளின் மத்தியிலும், யோபு பக்தன் “நான் போகும் வழியை அவர் அறிவார். அவர் என்னை சோதித்தபின் நான் பொன்னாக விளங்குவேன்” என்று சொல்லுகிறார். கர்த்தர் நீங்கள் போகும் உபத்திரவத்தின் பாதையையும், வேதனையின் பாதையையும் நிச்சயமாகவே அறிவார்.
கர்த்தர் மோசேயிடம், “அவர்கள் படுகிற வேதனைகளையும் அறிந்திருக்கிறேன்” (யாத். 3:7) என்று சொன்னார். ஆம், கர்த்தர் உங்களுடைய ஒவ்வொரு காரியத்தையும் அறிந்திருக்கிறார். எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து இஸ்ரவேலரை மீட்டது போலவே, எல்லா அடிமைத்தனங்களிலிருந்தும் உங்களை மீட்பார்.
தாவீது சொல்லுகிறார், “நான் வேதனைப்பட்டு ஒடுங்கினேன்; நாள் முழுதும் துக்கப்பட்டுத் திரிகிறேன்” (சங். 38:6). ஆம் தாவீதின் சிறுமையையெல்லாம் அறிந்த கர்த்தர், அவரது சத்துருக்களின் முன்பாக ஒரு பந்தியை ஆயத்தம்பண்ணி அவரைத் தமது பரிசுத்த ஆவியின் எண்ணெயால் அபிஷேகித்தார்.
அமெரிக்க ஐக்கிய நாடுகளை ஸ்தாபித்த ஜார்ஜ் வாஷிங்டன், ஒருமுறை உள்நாட்டுப் போரிலே சிக்குண்டு, விரோதிகளால் துரத்தப்பட்டு, உயிர்தப்ப ஓடினார். எதிரிகள் அவரைப் பிடிக்க துப்பாக்கிகளோடு குதிரைகளில் அமர்ந்தவர்களாய் துரத்திக்கொண்டு வந்தனர். அவரோ, வேறு வழியின்றி, தப்பிக்கும் பொருட்டு இரவெல்லாம் ஓடிக்கொண்டேயிருந்தார். இடையிலே ஒரு நதி குறுக்கிட்டது. அது பயங்கரமான குளிர்காலமாய் இருந்தபடியினால், அந்த நதியின் மேற்பரப்பெல்லாம் உறைந்த பனிக்கட்டிகளால் நிரம்பியிருந்தது.
ஒரு நிமிடம் அந்த நதிக்கரையில் அவர் முழங்காற்படியிட்டார். “ஆண்டவரே நீர் என்னை அறிந்திருக்கிறீர். என் பின்னால் பகைவர்கள் துரத்தி வருவதையும் அறிந்திருக்கிறீர். இப்போது உம்மை நம்பி இந்த நதியில் குதிக்கப்போகிறேன். என் உயிரைப் பாதுகாத்தருளும்” என்று ஜெபித்தார்.
மேலும் தாமதிக்காமல், தண்ணீரில் குதித்து, முழு பெலத்துடனும், முழு வேகத்தோடும், அதே நேரத்தில் ஊக்கமாக ஜெபித்துக் கொண்டே நீந்தத் துவங்கினார். கர்த்தருடைய வல்லமை அவரை நிரப்பியிருந்தபடியினாலே குளிரால் அவரை சேதப்படுத்தமுடியவில்லை. மறுகரை அடைந்து தொடர்ந்து ஓடிக்கொண்டேயிருந்தார். கொஞ்ச நேரத்திற்குள் பகைவர்கள் அந்த நதிக்கரை யண்டை வந்தார்கள். ஒருவருக்காவது அந்த பனிக்கட்டி நிறைந்திருந்த நதியில் நீந்திச் செல்ல தைரியமில்லை. ஜார்ஜ் வாஷிங்டனைத் தாக்க அவர்கள் எடுத்த முயற்சி தோல்வியில் முடிந்தது.
தேவபிள்ளைகளே, ஜார்ஜ் வாஷிங்டனின் இக்கட்டான நிலைமையை அறிந்து, அவருக்கு உதவி செய்த ஆண்டவர், நிச்சயமாகவே உங்களுடைய எல்லா பிரச்சனைகளையும்கூட அறிவார். அவைகளின் மத்தியிலே, உங்களுக்கும் ஜெயம் தர வல்லமையுள்ளவராய் இருக்கிறார்.
நினைவிற்கு:- “தேவனில் அன்புகூருகிறவனெவனோ, அவன் தேவனால் அறியப்பட்டிருக்கிறான்” (1கொரி. 8:3).