No products in the cart.
பிப்ரவரி 27 – இச்சையடக்கம்!
“சாந்தம், இச்சையடக்கம்; இப்படிப்பட்டவைகளுக்கு விரோதமான பிரமாணம் ஒன்றுமில்லை” (கலாத். 5:23).
ஆவியின் கனிகளிலே கடைசியாய்க் காணப்படுவது இச்சையடக்கமாகும். ஆனால் வரிசையில் கடைசியாயிருந்தாலும் அதுவே மிகவும் தலையானது. மிக முக்கியமானது. உங்களைப் பாதுகாக்கக்கூடியது. இச்சையடக்கம் உங்களை எல்லாத் தீங்குக்கும் விலக்கிக் காக்கிறது. துணிகர பாவங்களுக்கும், பாதாளத்துக்கும், நரக அக்கினிக்கும் விலக்கிக் காக்கிறது.
அப். பவுல் எழுதுகிறார், “கிறிஸ்துவினுடையவர்கள் தங்கள் மாம்சத்தையும் அதின் ஆசை இச்சைகளையும் சிலுவையில் அறைந்திருக்கிறார்கள்” (கலாத். 5:24). இதுவே இச்சையடக்கமாகும். உலகத்தின் முதல் பாவமே இச்சையடக்கம் இல்லாததினால்தான் பிறந்தது. ஏவாளுடைய கண்கள் விலக்கப்பட்ட கனியை இச்சித்ததினாலேயே அத்தனை சாபங்களும், மனுக்குலத்தின் மேல் வந்தது.
தன் சுயஇச்சையின்படியே கட்டுக்கடங்காமல் ஓடுகிற காட்டுக்கழுதை போல் அல்லாமல் எல்லா ஆசை இச்சைகளையும், விருப்பங்களையும், தேவனுடைய ஆளுகைக்குள் கொண்டுவந்து பரிசுத்தத்தைக் கடைப்பிடித்து, கற்புள்ளவர்களாய் விளங்குவதே ஆவியின் கனியாகிய இச்சையடக்கம் ஆகும்.
சபையில் நியமிக்கப்படும் மூப்பர்களுக்கும், கண்காணிகளுக்கும் இச்சையடக்கம் மிக அவசியம் என்று அப்போஸ்தலனாகிய பவுல் வலியுறுத்துகிறார் (தீத்து 1:8). இச்சையடக்கம் இல்லாதவனை கர்த்தரும் பயன்படுத்த முடியாது. உலகத்தாரும் பயன்படுத்த முடியாது. அவன் உலகத்தாருக்கு நன்மையை அல்ல, தீமையை வரப்பண்ணுவான். ஆவியின் இனிமையான கனிகளை அல்ல, கசப்பான கனிகளையே கொடுப்பான்.
பந்தயத்தில் ஓடுகிறவன் எப்படி இச்சையடக்கமாய் இருந்து, தன் சரீரத்தை கட்டுப்பாட்டுக்குள்ளே வைத்து, இலக்கை நோக்கி ஓடி, வெற்றியின் கிரீடத்தைச் சூட்டிக்கொள்வானோ, அதுபோலவே நீங்களும் இச்சையடக்கத்தோடு ஆவி, ஆத்துமா, சரீரத்தில் முழு கட்டுப்பாட்டோடு தேவன் உங்களுக்கு நியமித்திருக்கிற ஓட்டத்திலே ஓடி, ஜீவ கிரீடத்தைப் பெற்றுக் கொள்வீர்களாக.
உங்களுடைய விசுவாச ஓட்டத்தை துவக்குகிறவரும், முடிக்கிறவருமாகிய கிறிஸ்து இயேசுவை ஒரு இலக்காகக்கொண்டு நீங்கள் ஓடிக்கொண்டிருக்கிறீர்கள். அப்படி ஓடிக்கொண்டிருக்கும் உங்களுடைய கால்கள் வலது புறமோ, இடது புறமோ சாயாமல் ஓடுவதற்கு இச்சையடக்கம் மிகவும் அவசியம். உங்களது ஆசைகளையும், எண்ணங்களையும், செயல்களையும் திடமனதோடு அடக்கியாளுவதற்கு உங்களுக்குத் தெரிந்திருக்க வேண்டும். அப்போதுதான் ஓட்டத்திலே வெற்றிபெற முடியும்.
தேவபிள்ளைகளே, கர்த்தருடைய வருகை சமீபமாகி விட்டது. இனியும் தாமதியாமல், இயேசுவுக்காக பொறுமையோடும், இச்சையடக்கத்தோடும் ஓடி, உங்களுடைய ஓட்டத்தை ஜெயத்துடன் முடித்து, வெற்றியைச் சுதந்தரித்துக் கொள்ளுவீர்களாக!
நினைவிற்கு:-“பலவானைப்பார்க்கிலும் நீடிய சாந்தமுள்ளவன் உத்தமன்; பட்டணத்தைப் பிடிக்கிறவனைப்பார்க்கிலும் தன் மனதை அடக்குகிறவன் உத்தமன்” (நீதி. 16:32).