AppamAppam - Tamil

பிப்ரவரி 23 – கலியாணம்!

“மூன்றாம் நாளிலே கலிலேயாவிலுள்ள கானா ஊரிலே ஒரு கலியாணம் நடந்தது” (யோவான் 2:1).

இயேசுவும், அவருடைய சீஷர்களும் அவருடைய தாயாரும் அழைக்கப்பட்டிருந்த அந்த கலியாணம் மூன்றாம் நாளிலே நடந்தது என்று வேதம் சொல்லுகிறது. மூன்றாம் நாள் என்றால் அது எந்த நாள்? வேதத்தின்படி முதலாம் நாள் ஞாயிறு, இரண்டாம் நாள் திங்கள், மூன்றாம் நாள் செவ்வாய். இக்காலத்தில் செவ்வாய்க்கிழமைகளில் யாரும் கலியாணம் ஒழுங்கு செய்வதில்லை. செவ்வாய் என்றால் வெறுவாய் என்று சொல்லுவதுண்டு. அது யாரும் விரும்பாத நாள். செவ்வாய்க்கிழமைகளில் பிரயாணம் செய்யவும் அநேகர் விரும்புவதில்லை.

ஆனால் இயேசுவின் நாட்களில் வாழ்ந்த அந்த திருமண வீட்டார், நாள், நட்சத்திரம், இராகுகாலம் போன்றவற்றைப் பார்க்காதவர்களாய் இருந்திருக்க வேண்டும். ஆகவே கர்த்தர் மிகவும் மகிழ்ச்சியோடு தன்னுடைய சீஷர்களோடும், தாயாரோடும்கூட அந்த திருமண வைபவத்தில் கலந்துகொண்டார். இன்றைக்கு அநேகர் தவறான நம்பிக்கைகளுடன் இராகு காலம், எமகண்டம் எல்லாம் பார்த்து இத்தனை மணி நேரத்திலிருந்து இத்தனை மணிக்குள் திருமணம் நடக்கும் என்று நேரத்தையும்கூட அழைப்பிதழில் அச்சடித்து விடுகிறார்கள். இத்தகைய காரியங்களால் கர்த்தருடைய உள்ளம் புண்படும் அல்லவா? எப்படி அவர் மகிழ்ச்சியோடு திருமணத்தில் கலந்து கொள்ள முடியும்? சிந்தித்துப் பாருங்கள்.

மூன்றாம் நாளிலே கலியாணம் நடந்தது என்பதை மீண்டும் சிந்தித்துப் பாருங்கள். கிறிஸ்துவினுடைய நாட்களிலிருந்து நம்முடைய நாட்கள் வரையிலும் இரண்டாயிரம் வருஷங்களாகிவிட்டன. இது கர்த்தருடைய பார்வையில் இரண்டு நாட்களைப் போன்றது. மூன்றாம் நாள் இனி வரப்போகிறது. அதுவே வரப்போகிற ஆயிர வருஷ அரசாட்சி. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலான இந்த தருணத்திலே, “ஆட்டுக்குட்டியானவரின் கலியாண விருந்துக்கு அழைக்கப்பட்டவர்கள் பாக்கியவான்கள் என்றெழுது” (வெளி. 19:9) என்று வேதம் ஒரு அழைப்பைக் கொடுக்கிறது.

இந்த ஆட்டுக்குட்டியானவருடைய கலியாண நாளிலே கிறிஸ்துவே மணவாளனாயிருப்பார். அவர் தன் சுய இரத்தத்தினால் சம்பாதித்துக்கொண்ட மணவாட்டியாக தேவனுடைய சபை விளங்கும். கலியாண வீடுகளில் இசை முழங்க மணவாளன் வருவதைப்போல, மத்திய ஆகாயத்திலே தேவதூதர்கள் எக்காளத்தை முழங்க, இயேசுகிறிஸ்து வருவார். நீங்கள் நம் ஆத்தும நேசரை, ஆத்தும மணாளனை முகமுகமாய்ச் சந்திப்பீர்கள். ஆ! அந்த நாள் எத்தனை பாக்கியமான நாள்! திரளான ஜனங்கள் கிழக்கிலும், மேற்கிலும், வடக்கிலும், தெற்கிலுமிருந்து வந்து ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு என்பவர்களோடே பந்தியிருப்பார்கள்.

அங்கே மன மகிழ்ச்சியும், சந்தோஷமும், ஆரவாரமும், களிப்புமாய் இருக்கும். அங்கே திராட்சரசம் குறைவுபடுவதுமில்லை. மகிமையின் ராஜா தம்முடைய மகிமையின் ஐசுவரியத்தின்படியே எல்லாவற்றையும் நிறைவாக்குவார். தேவபிள்ளைகளே, கிறிஸ்துவினுடைய மகிமையான வருகையிலே, அவரை ஆத்தும மணவாளனாக சந்திக்க ஆயத்தமா? அந்த நாளிலே நீங்கள் அவருடைய பிரசன்னத்திலே காணப்படும்படி தேவன் கொடுத்த இந்த கிருபையின் நாட்களை பயன்படுத்திக் கொள்ளுவீர்களாக!

நினைவிற்கு:- “ஆவியும் மணவாட்டியும் வா என்கிறார்கள்; கேட்கிறவனும் வா என்பானாக” (வெளி. 22:17).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.