No products in the cart.
பிப்ரவரி 21 – ஐக்கியம்!
“எங்களுடைய ஐக்கியம் பிதாவோடும் அவருடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவோடும் இருக்கிறது” (1 யோவான் 1:3).
கர்த்தர் தம்முடைய ஐக்கியத்தை உங்களுக்கு வாக்குப்பண்ணினது எத்தனை பெரிய பாக்கியம்! உங்கள் ஆவியும், ஆத்துமாவும் அவரோடு இணைந்திருக்கின்றன. அவர் உங்களில் வாசம் பண்ணுகிறார். நீங்கள் எப்போதும் அவரோடு இடைவிடாத தொடர்பும் ஐக்கியமும் கொண்டிருக்கிறீர்கள்.
ஒரு வயதான தாயார் தனிமையாக ஒரு வீட்டில் குடியிருந்தார்கள். பிள்ளைகளெல்லாம் தூரதேசத்தில் இருந்ததினால் தனிமை உணர்வு அவர்களுடைய உள்ளத்தைப் பிழிந்தது. வேதத்தை வாசித்து, பாட்டுப் பாடி, ஜெபித்து கர்த்தரோடு ஐக்கியம் கொள்ளுவதை விட்டுவிட்டு, டெலிவிஷனைப் போட்டு அதிலே வரும் மோசமான நிகழ்ச்சிகளைப் பார்ப்பதில் தங்கள் நேரத்தைச் செலவழித்தார்கள். தன்னுடைய தனிமை உணர்வு நீங்க அதுவே வழி என்று அவர்கள் எண்ணினார்கள்.
ஆனால் ஒரு நாள் தொலைக்காட்சிப் பெட்டியிலே ஒரு பயங்கரமான கொலைவெறிக் காட்சி வந்தது. குற்றமறியாத ஒருவனை அநேகர் கொடூரமான முறையில் சூழ்ந்து கொண்டு ஈவு இரக்கமில்லாமல் குத்திக் கொலை செய்யும் காட்சி அது. அந்த காட்சி அவர்களுடைய இருதயத்தில் பெரிய அதிர்ச்சியைக் கொண்டு வந்தது. ஏற்கனவே அவர்களுக்கிருந்த நிம்மதியின்மையை அக்காட்சி அதிகரிக்கச் செய்தது.
உங்கள் ஐக்கியத்தை எங்கே வைத்திருக்கிறீர்கள்? உங்கள் கண்களின் காட்சியும், கேட்கிற வார்த்தைகளும் எப்படிப்பட்டவை? சற்று சிந்தித்துப் பாருங்கள். நல்ல பெற்றோர் தங்களுடைய பிள்ளைகள் நல்ல பிள்ளைகளோடு நட்பு வைத்துக் கொள்ள வேண்டுமென்று விரும்புவார்கள். அதற்காக நல்ல சிநேகிதர்களை தெரிந்தெடுத்துக் கொடுப்பார்கள். துஷ்டமான நண்பர்கள் வரும்போது அவர்களை விட்டு விலகும்படி பிள்ளைகளுக்கு ஆலோசனை சொல்லுவார்கள். நல்ல நண்பர்களுடன் பழுகுவதே தங்கள் பிள்ளைகளின் எதிர்காலம் ஆசீர்வாதமானதாக இருக்க வழிவகுக்கும் என்று அவர்கள் நிச்சயமாகவே அறிவார்கள்.
நல்ல நண்பராகிய இயேசு எப்போதும் உங்களோடு ஐக்கியமாக இருக்க விரும்புகிறார். “உங்களை சிநேகிதன் என்றேன்” என்று அன்போடுகூட கூறுகிறார். வேத வசனங்களை வாசிக்கும்போதெல்லாம் நீங்கள் அவரோடு ஐக்கியம் கொள்ளுகிறீர்கள். முழங்கால்படியிட்டு அவருடைய பொன் முகத்தை நோக்கிப் பார்க்கும்போதெல்லாம் உங்களுடைய ஆவியிலே அவரோடுகூட ஐக்கியம் கொள்ளுகிறீர்கள். கர்த்தர் ஒருவருக்கும் தூரமானவர் அல்ல.
கர்த்தர் மனிதனை சிருஷ்டித்தபோது, அவனோடுகூட ஐக்கியம் வைக்க அவர் விரும்பினார். பகலின் குளிர்ச்சியான வேளையிலே அவர் மனிதனைத் தேடி வந்தார். மனிதன் பாவம் செய்து அவருடைய ஐக்கியத்தை இழந்தபோதுகூட அவர் அவனை விட்டுவிடவில்லை. இயேசு என்ற பெயரில் மாம்சமாகி, மீண்டும் அந்த ஐக்கியத்தை நிலைப்படுத்த அவர் சித்தமானார். தேவபிள்ளைகளே, எப்போதும் கர்த்தரோடு ஐக்கியமாயிருங்கள்.
நினைவிற்கு:- “நாம் அவரோடே ஐக்கியப்பட்டவர்களென்று சொல்லியும், இருளிலே நடக்கிறவர்களாயிருந்தால், சத்தியத்தின்படி நடவாமல் பொய் சொல்லுகிறவர்களாயிருப்போம்” (1 யோவான் 1:6).