No products in the cart.
பிப்ரவரி 20 – திராட்சரசம்!
“புது திராட்சரசத்தைப் பழந்துருத்திகளில் வார்த்துவைக்கிறதும் இல்லை; வார்த்துவைத்தால், துருத்திகள் கிழிந்துபோம், இரசமும் சிந்திப்போம், துருத்திகளும் கெட்டுப்போம்; புது ரசத்தைப் புது துருத்திகளில் வார்த்து வைப்பார்கள். அப்பொழுது இரண்டும் பத்திரப்பட்டிருக்கும்” (மத். 9:17).
ஒரு மனிதனுடைய வாழ்க்கையில் கிறிஸ்து வரும்போது, அவன் புதிய சிருஷ்டியாய் மாறுகிறான். பழையவைகள் ஒழிந்தன, எல்லாம் புதிதாயின. புதிய ஜீவன், புதிய வல்லமை, புதிய கிருபை, புதிய ஆவிக்குரிய நண்பர்கள், புதிய ஐக்கியம் என எல்லாம் அவனுக்குள் புதிதானதாய் உருவாகின்றன. ஆம், அவன் முற்றிலும் புதியவனாக நடந்துகொள்ள வேண்டியதாகிறது.
அநேகர் புதிய வஸ்திரத்தைக் கொண்டுவந்து பழைய வஸ்திரங்களோடு இணைக்கிறார்கள். இதனால் இரண்டும் கிழிந்துதான் போகும். அதைப்போல புதிய திராட்சரசத்தைக் கொண்டுவந்து பழைய துருத்திகளில் வார்த்தால் துருத்தியும் கிழிந்து போகும், இரசமும் சிந்திப்போகும்.
கிறிஸ்துவுக்குள் ஒருவன் வரும்போது அவன் தன்னுடைய பழைய பாவங்கள், பழைய சுபாவங்கள், பழைய ஆசை இச்சைகள் எல்லாவற்றையும் விட்டு விலகி, கர்த்தரோடும், அவருடைய பிள்ளைகளோடும் ஐக்கியப்பட்டுவிட வேண்டும். ஆற்றில் ஒரு காலும், சேற்றில் ஒரு காலும் அவன் வைக்கக்கூடாது. இரண்டு தோணியில் நின்று பிரயாணம் செய்ய ஒருவராலும் இயலாது. இருளுக்கும் ஒளிக்கும் சம்பந்தம் இல்லையே. அதைப்போல கிறிஸ்துவுக்கும் பேலியாளுக்கும் இடையே ஐக்கியம் கிடையாதல்லவா?
புது திராட்சரசம் என்று சொல்லுவது, கிறிஸ்துவின் இரத்தத்தைக் குறிக்கிறது. அவர் ஊழியத்தின் ஆரம்பத்தில், தண்ணீரை திராட்சரசமாய் மாற்றினார். ஊழியத்தின் இறுதியில் திராட்சரசத்தை எடுத்து ‘இது உங்களுக்காக சிந்தப்படுகிற என் புது உடன்படிக்கைக்குரிய இரத்தமாய் இருக்கிறது’ என்றார். திராட்சரசம் கிறிஸ்துவின் இரத்தத்தினால் கழுவப்பட்ட புதிய இருதயத்தைக் குறிக்கிறது. அந்த திராட்சரசம் வைத்திருக்கிற துருத்தியும் புதியதாய் இருக்க வேண்டும்.
இயேசு ஒவ்வொருவருடைய வாழ்க்கையையும் புதிய ரசமாய் மாற்றுகிறார். அவர் தண்ணீரை திராட்சரசமாய் மாற்றுகிறவர் அல்லவா? இயேசு செய்த முதல் அற்புதம் தண்ணீரை திராட்சரசமாய் மாற்றினதுதான். சாதாரணமான மனுஷனை தெய்வீக சுபாவமுள்ளவனாய் அவர் மாற்ற வல்லவர். நீங்கள் இயேசு கிறிஸ்துவோடுகூட வாழ்வீர்களென்றால், அவரோடுகூட உறவுகொள்ளுவீர்களென்றால், உங்களுடைய வாழ்க்கையின் ஒவ்வொருநாளும் இனிமையுள்ளதாய் இருக்கும்.
தேவபிள்ளைகளே, நீங்கள் கிறிஸ்துவின் இனிமையை ருசித்துவிட்டபிறகு, உலக சிற்றின்பங்களை நோக்கிப் பின்செல்லக்கூடாது. உலக நேசங்களை நாடித் திரியக்கூடாது. கர்த்தர் உங்களை திராட்சரசமாக்கியிருக்க, நீங்கள் தண்ணீரைப் போல தழும்பிக் கொண்டிருக்கக்கூடாது.
நினைவிற்கு:- “இந்தப் பாத்திரம் என் இரத்தத்தினாலாகிய புதிய உடன்படிக்கையாயிருக்கிறது; நீங்கள் இதைப் பானம்பண்ணும்போதெல்லாம் என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள்” (1 கொரி. 11:25).