AppamAppam - Tamil

பிப்ரவரி 18 – தீர்மானம்!

“தானியேல், ராஜாவின் போஜனத்தினாலும் அவர் பானம் பண்ணும் திராட்சரசத்தினாலும் தன்னைத் தீட்டுப்படுத்தலாகாதென்று, தன் இருதயத்தில் தீர்மானம் பண்ணிக் கொண்டு….” (தானி. 1:8).

புத்தாண்டில் நீங்கள் சில தீர்மானங்களைச் செய்வதுபோலவே ஒவ்வொரு மாதமும் ஒவ்வொருநாளும் நீங்கள் செய்ய வேண்டிய தீர்மானங்கள் உண்டு. ஆத்துமாவைக் காத்துக் கொள்ளுவதற்கும், ஆவிக்குரிய ஜீவியத்தில் முன்னேறுவதற்கும் உங்களுக்கு அப்படிப்பட்ட தீர்மானங்கள் மிகமிக அவசியம்.

மேலே குறிப்பிட்ட வசனத்தில் இடம்பெறும் தானியேலின் தீர்மானத்தைப் பாருங்கள். இந்தத் தீர்மானம், பரிசுத்தத்திற்காக, கறைதிரையற்ற தூய்மையான வாழ்க்கைக்காக எடுத்துக்கொள்ளப்பட்ட தீர்மானமாகும். தானியேல் ஒரு சிறந்த தீர்மானத்தை எடுத்ததினாலே, கர்த்தர் அவரைக் கனப்படுத்தினார்.

பரிசுத்தமாக வாழவேண்டும் என்பதில் உங்களுக்கு இருக்கும் வாஞ்சையைக் காட்டிலும் நீங்கள் பரிசுத்தப் பாதையில் நிலைநிறுத்தப்பட வேண்டும் என்பதில் கர்த்தர் அதிக வாஞ்சையுள்ளவராய் இருக்கிறார். உங்களை அழைத்தவர் பரிசுத்தராயிருக்கிறது போல, நீங்களும் உங்கள் நடக்கைகளெல்லாவற்றிலும் பரிசுத்தராயிருங்கள் (1 பேதுரு 1:15) என்று வேதம் சொல்லுகிறது. உங்களிலுள்ள பரிசுத்தத்தின் அளவைக்கொண்டுதான் தேவன் உங்களைப் பயன்படுத்த முடியும். ஆகவே ஒவ்வொருநாளும் பரிசுத்தத்திற்கான தீர்மானங்களை புதுப்பித்துக் கொள்ளுங்கள்.

இரண்டாவதாக, உங்கள் வாழ்க்கையின் மூலமாய் யாரும் இடறிவிடக்கூடாதென்று தீர்மானம் செய்யுங்கள். அப். பவுல், சொல்லுகிறார், “ஒருவனும் தன் சகோதரனுக்கு முன்பாகத் தடுக்கலையும் இடறலையும் போடலாகாதென்று தீர்மானித்துக் கொள்ளுங்கள்” (ரோமர் 14:13).

இன்றைய உலகத்திலே, மக்கள் பொறாமையும், எரிச்சலும் உள்ளவர்களாய் ஒருவரையொருவர் குறை கூறி, ஒருவருக்கொருவர் இடறலாய் இருக்கிறார்கள். சிலர் மாறுபாடான உபதேசங்களால் பாதிக்கப்பட்டு, சுபாவ அன்பில்லாதவர்களாய் நடந்து அநேகருக்கு இடறலாகிவிடுகிறார்கள். அப்.பவுல் எழுதுகிறார்: “நீங்கள் கிறிஸ்துவின் நாளுக்கென்று துப்புரவானவர்களும் இடறலற்றவர்களுமாயிருக்கவும் வேண்டுதல் செய்கிறேன்” (பிலி. 1:11).

மூன்றாவதாக, நீங்கள் செய்ய வேண்டிய இன்னொரு தீர்மானம் உண்டு. அது உங்களுடைய வாய் மீறாதபடி இருக்க வேண்டும் என்று செய்யும் தீர்மானமாகும். தாவீது சொல்லுகிறார், “என் வாய் மீறாதபடிக்குத் தீர்மானம் பண்ணினேன்” (சங். 17:3). அநேக பாவங்களுக்கு வாய்தான் காரணமாய் அமைகிறது. சொற்களின் மிகுதியினால் பாவமில்லாமல் போகாது என்று ஞானி கூறுகிறார். வீண் வார்த்தைகளைப் பேசாமல் கர்த்தருடைய வார்த்தைகளையே பேசுவேன் என்று ஒவ்வொருநாளும் உறுதி செய்துகொள்ளுங்கள்.

தேவபிள்ளைகளே, மேலே கூறப்பட்ட மூன்று தீர்மானங்களையும் உங்கள் வாழ்க்கையில் உறுதியாய்க் கடைப்பிடித்தால் நீங்கள் நிச்சயம் ஆசீர்வதிக்கப்படுவீர்கள்.

நினைவிற்கு:- “துதித்தலும் சபித்தலும் ஒரே வாயிலிருந்து புறப்படுகிறது. என் சகோதரரே, இப்படியிருக்கலாகாது. ஒரே ஊற்றுக்கண்ணிலிருந்து தித்திப்பும் கசப்புமான தண்ணீர் சுரக்குமா?” (யாக். 3:10,11).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.