No products in the cart.
பிப்ரவரி 17 – ஓடிப்போம்!
“சந்தோஷமும் மகிழ்ச்சியும் அடைவார்கள்; சஞ்சலமும் தவிப்பும் ஓடிப்போம்” (ஏசா. 35:10).
சந்தோஷமும், மகிழ்ச்சியும் கர்த்தரால் மீட்கப்பட்டவர்களை நோக்கி வேகமாய் ஓடி வரும். அதே நேரம் சஞ்சலமும், தவிப்பும் அவர்களைவிட்டு விலகிப்போகும். இதுவே மீட்கப்பட்டவர்கள் இயேசுகிறிஸ்துவிடமிருந்து பெற்றுக்கொள்ளும் பேராசீர்வாதம்.
ஆதாம் ஏவாள் என்றைக்கு பாவம் செய்தார்களோ, அன்று முதல் பூமிக்கு சாபம் என்கிற சஞ்சலம் வந்தது. ஸ்திரீ சஞ்சலத்தோடு பிள்ளைப்பேற்றை சந்திக்க வேண்டியதாயிற்று. வேதம் சொல்லுகிறது, “ஸ்திரீயினிடத்தில் பிறந்த மனுஷன் வாழ்நாள் குறுகினவனும், சஞ்சலம் நிறைந்தவனுமாயிருக்கிறான்” (யோபு 14:1).
ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொரு விதமான சஞ்சலம், தவிப்பு, கொந்தளிப்பு, வேதனை. யாக்கோபு சொல்லுகிறார், “என் ஆயுசு நாட்கள் கொஞ்சமும் சஞ்சலமுள்ளதுமாயிருக்கிறது, அவைகள் பரதேசிகளாய்ச் சஞ்சரித்த என் பிதாக்களுடைய ஆயுசு நாட்களுக்கு வந்து எட்டவில்லை” (ஆதி. 47:9).
சாலொமோனுக்கு திரளான ஞானமும், செல்வமும், ஐசுவரியமும், பேரும் புகழும் இருந்தபோதிலும்கூட, சஞ்சலம் அவரையும் விட்டு வைக்கவில்லை. அவர் சொல்லுகிறார், “சூரியனுக்கு கீழே செய்யப்படுகிற காரியங்களையெல்லாம் கவனித்துப் பார்த்தேன்; இதோ, எல்லாம் மாயையும், மனதுக்கு சஞ்சலமுமாயிருக்கிறது” (பிர. 1:14).
இயேசுகிறிஸ்து இந்த சஞ்சலத்தின் வேதனையிலிருந்து உங்களை மீட்கும்படி சித்தமானார். அதற்காகவே அவர் இந்த சஞ்சலம் நிறைந்த உலகத்திற்கு வந்தார். சஞ்சலத்திலிருந்தும், வேதனையிலிருந்தும் உங்களை மீட்கும்படி தன்னுடைய இரத்தத்தையே, மீட்கும்பொருளாக ஒப்புக்கொடுத்தார்.
வேதம் சொல்லுகிறது, “அழிவுள்ள வஸ்துக்களாகிய வெள்ளியினாலும், பொன்னினாலும் மீட்கப்படாமல், குற்றமில்லாத, மாசற்ற ஆட்டுக்குட்டியாகிய கிறிஸ்துவின் விலையேறப்பெற்ற இரத்தத்தினாலே மீட்கப்பட்டீர்கள் என்று அறிந்திருக்கிறீர்களே” (1பேது. 1:18,19).
நீங்கள் சஞ்சலத்தார் கூட்டத்தில் நிற்காமல், மீட்கப்பட்டவர்கள் கூட்டத்தில் நிற்கிறீர்கள். வேதம் சொல்லுகிறது, “கர்த்தரால் மீட்கப்பட்டவர்கள் திரும்பி, ஆனந்தக் களிப்புடன் பாடி, சீயோனுக்கு வருவார்கள்” (ஏசா. 35:10). நீங்கள் கர்த்தரால் மீட்கப்பட்டது உண்மையானால் எதற்குமே நீங்கள் கலங்கவேண்டியதோ, சஞ்சலப்படவேண்டியதோ இல்லை. ‘நான் இயேசு கிறிஸ்துவினால் மீட்கப்பட்டிருக்கிறேன், இராஜாதி இராஜாவின் பிள்ளை, கர்த்தரின் சுதந்தரம்’ என்று உற்சாகமாய் சொல்ல முடியும்.
தேவபிள்ளைகளே, பலவிதமான சஞ்சலங்களை நீங்கள் சந்திக்கும்போது, உங்களை மீட்டுக்கொண்ட இயேசுவை நோக்கிப் பாருங்கள். அவர் உங்களை அவற்றிலிருந்து விலக்கிக் காப்பார்.
நினைவிற்கு:- “அவர் (கர்த்தர்) சஞ்சலப்படுத்தினாலும் தமது மிகுந்த கிருபையின்படி இரங்குவார். அவர் மனப்பூர்வமாய் மனுபுத்திரரைச் சிறுமையாக்கிச் சஞ்சலப்படுத்துகிறதில்லை” (புலம். 3:32,33).