No products in the cart.
பிப்ரவரி 15 – போதகர் மூலம்!
“ஆண்டவர் உங்களுக்குத் துன்பத்தின் அப்பத்தையும், உபத்திரவத்தின் தண்ணீரையும் கொடுத்தாலும், உன் போதகர்கள் இனி ஒருபோதும் மறைந்திருக்க மாட்டார்கள்; உன் கண்கள் உன் போதகர்களைக் காணும்” (ஏசா. 30:20).
பழைய ஏற்பாட்டிலே, ஆசாரியர்கள், தீர்க்கதரிசிகள், ராஜாக்கள் ஆகியோர் மூலம் கர்த்தர் பேசினார். புதிய ஏற்பாட்டிலே, உங்களோடுகூட பேசுவதற்கு அப்போஸ்தலர்கள், மேய்ப்பர்கள், போதகர்கள், தீர்க்கதரிசிகள் மற்றும் சுவிசேஷகர்கள் இருக்கிறார்கள். கர்த்தர் அவர்கள் மூலமாக உங்களுக்கு ஆலோசனை சொல்லுகிறார், எச்சரிக்கிறார், போதிக்கிறார். நீங்கள் நடக்க வேண்டிய வழிகளையெல்லாம் அவர்கள் மூலம் தெரிவிக்கிறார்.
சில ஆண்டுகளுக்கு முன்பாக, என்னுடைய தகப்பனார் கொரியா தேசத்திலுள்ள போதகர் பால்யாங்கி சோ அவர்களுடைய ஆலயத்திற்குச் சென்றிருந்தார். அங்கே அந்தப் போதகர் பேசின ஒவ்வொரு வார்த்தையும் என் தகப்பனாருக்கு மிகவும் பிரயோஜனமாக இருந்தது. அப்போதுதான் கர்த்தர் என் தகப்பனாரின் உள்ளத்தில் கொரியாவில் ஏற்படுத்தப்பட்ட எழுப்புதலை இந்தியாவுக்குக் கொண்டுபோகும்படி பேசினார். இந்தியாவில் கர்த்தருக்கென்று ஒரு பெரிய ஜெப வீரர் சேனை எழும்ப வேண்டுமென்று அவர் பேசினார். கர்த்தரைத் துதித்துப் பாடுகிற ஆயிரமாயிரமான மக்கள் எழும்ப வேண்டுமென்று கர்த்தர் தம்முடைய சித்தத்தைத் தெரிவித்தார்.
ஆகவே அவர் இந்தியா திரும்பியதும், திருப்பத்தூர் அபிஷேக, பரிசுத்த உபவாச முகாம்களை ஒழுங்குசெய்யும்படி கர்த்தர் கிருபை செய்தார். சகோ. மோகன் சி.லாசரஸ் அவர்களும், சகோ. துதி சங்கர் அவர்களும், என்னுடைய தகப்பனாருமாக இணைந்து ஒருமனமாய் இந்த ஊழியத்தில் இறங்கும்படி கர்த்தர் ஒத்தாசை செய்தார். என்னுடைய தகப்பனாரைப் பார்க்கிறவர்களெல்லாம் நூற்றுக்கணக்கான புத்தகங்களை உங்களால் எப்படி எழுத முடிகிறது என்று கேட்பார்கள். அவர், “கர்த்தர் என்னோடுகூட பேசுகிற காரியங்களைப் பிரசங்கிக்க முடிகிறது. பிரசங்கிக்கிற காரியங்களைப் புத்தகமாக வெளிக்கொண்டுவரமுடிகிறது. அந்த புத்தகங்கள் மூலமாய் கர்த்தர் ஆயிரக்கணக்கானவர்களோடு பேசுகிறார்” என்று சொல்லுவார்.
கர்த்தர், சிறிய ஊழியக்காரர்களானாலும், பெரிய ஊழியக்காரர்களானாலும் அவர்கள் மூலமாக உங்களோடுகூட பேசுவார். ஏழ்மையிலிருக்கும் சிறிய கிராம, ஊழியக்காரர்களாய் இருந்தாலும், அவர்கள் மூலமாகவும் கர்த்தர் உங்களோடு பேச வல்லமையுள்ளவர். நீங்கள் ஆலயத்திற்குச் செல்லும்போதெல்லாம் வெறுமனே செல்லாமல் கர்த்தர் உங்களோடுகூட பேச வேண்டும் என்று தாகத்தோடு செல்லுங்கள். உங்களுடைய போதகரைக் கர்த்தர் வல்லமையாகப் பயன்படுத்த வேண்டும் என்கிற ஜெபத்தோடும், எதிர்பார்ப்போடும் செல்லுங்கள்.
தேவபிள்ளைகளே, போதகர் மூலமாக கர்த்தர் உங்களோடு பேசும்போது, அதற்கு முற்றிலுமாய் செவிகொடுங்கள். உங்களுக்காகவே அவர் பேசியதாக ஏற்றுக்கொள்ளுங்கள். அப்பொழுது அந்த வார்த்தைகள் உங்களுக்கு மிகுந்த ஆறுதலையும், தேறுதலையும், ஆசீர்வாதத்தையும் கொடுக்கும்.
நினைவிற்கு:- “சபை கூடிவருதலைச் சிலர் விட்டுவிடுகிறதுபோல நாமும் விட்டுவிடாமல், ஒருவருக்கொருவர் புத்தி சொல்லக்கடவோம்; நாளானது சமீபித்து வருகிறதை எவ்வளவாய்ப் பார்க்கிறீர்களோ அவ்வளவாய்ப் புத்தி சொல்ல வேண்டும்” (எபி. 10:25).