No products in the cart.
பிப்ரவரி 14 – லீலிபுஷ்பம்
“முள்ளுகளுக்குள்ளே லீலிபுஷ்பம் எப்படியிருக்கிறதோ, அப்படியே குமாரத்திகளுக்குள்ளே எனக்குப் பிரியமானவளும் இருக்கிறாள்” (உன். 2:2).
ஆயிரமாயிரமான மலர்களுக்குள்ளே லீலிபுஷ்பம் மகா விசேஷமானது. சாதாரண மலர்களின் வாசனை பத்து அல்லது இருபது அடி தூரமே எட்டக்கூடும். ஆனால், முட்களால் குத்தப்பட்டு, அவைகளின் மத்தியிலே வாசனையை பரிமளிக்கிற லீலிபுஷ்பத்தின் நறுமணம் காற்றிலே கலந்து செல்லும்போது, அது மைல்கள் கணக்கில் எட்டக்கூடியது.
ஒரு சகோதரன் வெளிநாட்டிலே நல்ல வேலை செய்துகொண்டு, இரகசியமாக ஒரு ஜெபக்குழுவையும் நடத்திவந்தார். திடீரென்று அரசாங்கம் அதைக் கண்டுபிடித்து, அவரைக் கைது செய்து சிறையில் போட்டார்கள். பயங்கரமான சித்திரவதைகளையும், பாடுகளையும் அவர் அனுபவித்தார். அந்த துன்ப நேரங்களில் அவர் அதுவரை இல்லாத அளவு இன்னும் அதிகமாய் கிறிஸ்துவை உறுதியாப் பற்றிக்கொண்டு தன் வாழ்க்கையிலே என்றும் ஜெபித்திராத அளவு மகா ஊக்கமாக ஜெபிக்கவும் செய்தார். அவருடைய ஜெபவாசனை அங்குள்ள கொடிய போலீஸ் அதிகாரிகளையும் எட்டியது.
கர்த்தருடைய பிரசன்னம் அவர் இருந்த சிறைச்சாலையை நிரம்பி வழியச் செய்தது. எப்பொழுதும் ஆவியில் நிரம்பி, அந்நிய பாஷை பேசி, தேவனுடைய பிரசன்னத்துக்குள்ளே இருந்த அவருடைய முகம் பிரகாசித்தது. அவருக்காகப் பரிந்து பேச அரசாங்கம் முன்வந்தது. அவர் விடுதலையாக்கப்பட்டபோது, முன்பு இருந்ததைப் பார்க்கிலும் ஆயிரம் மடங்கு தரமான கிறிஸ்தவனாக, ஜொலிக்கிற வைரமாக, பிரகாசிக்கிற பொன்னாக வெளியே வந்தார்.
மலர்களை, பகற்காலத்திலே மலருகிற ரோஜாவாகவும், இராக்காலத்திலே மலருகிற லீலிபுஷ்பமாகவும் இரண்டு வகையாகக் கர்த்தர் பிரித்தார். அதுபோலவே, சீஷர்களையும் கர்த்தர் இரண்டு வகையாகப் பிரித்தார். ஒன்று பகற்காலத்திலே அவரைப் பின்பற்றுகிற வெளியரங்கமான சீஷர்கள். மற்றொன்று இராக்காலத்திலும் அவரைப் பின்பற்றுகிற அந்தரங்க சீஷர்கள்.
இயேசுவால் தெரிந்துகொள்ளப்பட்ட பன்னிரெண்டு சீஷர்களும் பகற்காலத்திலே அவரைப் பின்பற்றி வாசனை வீசுகிற ரோஜா புஷ்பங்களாக விளங்கினார்கள். அதே நேரத்தில் இராக்காலத்திலே அவரைப் பின்பற்றுகிற அந்தரங்க சீஷர்களாக நிக்கொதேமு மற்றும் அரிமத்தியா ஊரானாகிய யோசேப்பு போன்றவர்கள் லீலிபுஷ்பங்களைப்போல மணம் வீசினார்கள்.
இன்றைக்கும் சபையானது இரண்டு விதமாக இயங்கிக்கொண்டிருக்கிறது. ஒன்று எல்லோரும் காணக்கூடிய வெளியரங்கமான சபை. அதே நேரத்தில், சபையின் இன்னொரு வகை உண்டு. அது கம்யூனிஸ்டு தேசங்களிலே தடைச்சட்டங்களின் மத்தியிலே மறைந்தும், ஒளிந்தும், ஜெபித்து ஊழியம் செய்கிற சபைகள். இவற்றில் நீங்கள் எந்தவித சபையைச் சார்ந்தவராக இருந்தாலும், நீங்கள் லீலிபுஷ்பத்தைப் போல மணம் வீசுபவர்களாக இருக்கிறீர்களா என்பதே முக்கியம்.
தேவபிள்ளைகளே, நீங்கள் உங்களுடைய வெளியரங்கமான ஜீவியத்திலும், அந்தரங்க ஜீவியத்திலும் கர்த்தருக்கென்று மணம் வீசுகிறவர்களாய் விளங்க வேண்டும்.
நினைவிற்கு:- “அத்திமரம் காய்காய்த்தது; திராட்சச் கொடிகள் பூப்பூத்து வாசனையும் பரிமளிக்கிறது; என் பிரியமே! என் ரூபவதியே! நீ எழுந்து வா” (உன். 2:13).