AppamAppam - Tamil

பிப்ரவரி 12 – நிதானம்!

“நிதானமாய் நடக்கிறவன் கர்த்தருக்குப் பயப்படுகிறான்” (நீதி. 14:2).

நிதானமாய் நடவுங்கள். எந்த சூழ்நிலையிலும் நிதானத்தை இழந்துவிடாதிருங்கள். ஒவ்வொரு நாளும் காலை எழும்பும்போது பல காரியங்களுக்காக இதுவரை நீங்கள் ஜெபித்திருக்கக்கூடும். இன்று முதல் நிதானத்திற்காக ஜெபிக்கக் கற்றுக்கொள்ளுங்கள். “ஆண்டவரே எந்த நிலையிலும், எந்த போராட்டத்தின் மத்தியிலும், நெருக்கங்களின் வழியாக செல்லுகிற சந்தர்ப்பங்களிலும்கூட நிதானத்தை இழந்துவிடாதபடி என்னை வழிநடத்தும்” என்று கேளுங்கள்.

நிதானம் இழந்தோர் எந்த முறையில் செயல்படுவார்கள் என்பதை யாராலும் கணிக்க முடியாது. சிலர் நிதானம் இழந்து கொடூரமான வார்த்தைகளைப் பேசிவிடக்கூடும். சிலர் அடித்து விடக்கூடும். சிலர் கொலைகூட செய்துவிடக்கூடும். இவைகளையெல்லாம் செய்துவிட்டு அதன் பின்னர் அவை குறித்து எவ்வளவு வருந்தினாலும், வேதனைப்பட்டாலும் ஒரு பிரயோஜனமுமிருப்பதில்லை.

மோசேயினிடத்தில் கர்த்தர் இரண்டாம்முறை பேசும்போது, “நீ கன்மலையோடு பேசு, அதிலிருந்து தண்ணீர் புறப்படும்” என்று சொன்னார். ஆனால், மோசே இஸ்ரவேலரின் முறுமுறுப்பைத் தாங்க முடியாமல், நிதானம் இழந்து, இந்த கன்மலையிலிருந்து தண்ணீர் புறப்படுமோ என்று சொல்லி கோலினால் கன்மலையை அடித்து விட்டார். பேசவேண்டிய அவர், நிதானம் இழந்துவிட்டபடியினால் அடிக்க வேண்டியதாயிற்று.

அதனால் ஏற்பட்ட விளைவு என்ன தெரியுமா? மோசேயினால் கானானுக்குள் பிரவேசிக்க முடியவில்லை. பலமுறை அவர் அதைக்குறித்து கர்த்தரிடத்தில் வேண்டுதல் செய்து பார்த்தார். பிரயோஜனம் இல்லாமல் போவிட்டது.

நிதானம் இழந்த இன்னொரு மனுஷன் உசியா. அவன் நிதானம் இழந்ததினால் ஆசாரியர்கள் செய்ய வேண்டிய வேலையை அவசரப்பட்டு தன் கைகளில் எடுத்து தூபங்காட்ட முற்பட்டான். அதன் விளைவு எத்தனை பரிதாபமானதாய் அமைந்ததைப் பாருங்கள். அவன் மரணமடையுமட்டும் குஷ்டரோகியாய் இருந்தான். ஒருவேளை நீங்கள் நிதானம் இழக்கும் நிலை வரும்போது, தேவ சமுகத்திலே முழங்கால்படியிட்டு மன்னிப்புக் கேளுங்கள். நிதானம் இழப்பதினால் கோபம், வைராக்கியம் மற்றும் கசப்பு உணர்வுகள் உங்களுக்குள் நுழைந்து உங்களைப் பாழாக்கும் என்பதால் கவனமாய் இருங்கள்.

பேதுரு நிதானம் இழந்தார். தன் பட்டயத்தை உருவி பிரதான ஆசாரியனுடைய வேலைக்காரனாகிய மல்குஸினுடைய காதற வெட்டினார். இயேசுகிறிஸ்து அதைக் கவனித்தார். அந்த காதை எடுத்து மறுபடியும் ஒட்டவைத்தார். பேதுருவிடம் அன்போடு பட்டயத்தை உறையிலே போடு என்று ஆலோசனையும் கூறினார்.

தேவபிள்ளைகளே, நிதானம் இழப்பதைப்போல சூழ்நிலைகள் வரும்போது, ஜெப அறைக்குள் ஓடிவிடுங்கள். கர்த்தருடைய சமுகத்தில் உங்கள் இருதயத்தை ஊற்றி எல்லாம் அடங்கிப்போகும்வரைக்கும் அவரை ஸ்தோத்திரம் பண்ணிக் கொண்டிருங்கள். இக்காரியமே பல தீமைகளிலிருந்து உங்களைத் தப்புவிக்கும்.

நினைவிற்கு:- “நீதியுள்ள உதடுகள் ராஜாக்களுக்குப் பிரியம்; நிதானமாய்ப் பேசுகிறவனில் ராஜாக்கள் பிரியப்படுவார்கள்” (நீதி. 16:13).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.