AppamAppam - Tamil

பிப்ரவரி 09 – தீபம்!

“உம்முடைய வசனம் என் கால்களுக்குத் தீபமும், என் பாதைக்கு வெளிச்சமுமாயிருக்கிறது” (சங். 119:105).

உங்கள் கால்கள் இடறாதபடியும், சறுக்கி விடாதபடியும் இருக்க தீபம் அவசியம். பலவேளைகளில் இருள் உங்களைச் சூழ்ந்துகொள்ளுகிறது. நீங்கள் மரண இருளின் பள்ளத்தாக்கிலே நடக்க வேண்டியிருக்கிறது. அப்போது உங்கள் கால்களுக்குத் தீபம் அவசியம் அல்லவா? வேத வசனமே உங்களுடைய கால்களுக்குத் தீபமாய் அமைகிறது.

எவரெடி என்னும் டார்ச் கம்பெனியின் விளம்பரத்தைப் பார்த்திருக்கிறீர்களா? ஒரு மனிதன் டார்ச்சை இருளில் அடிக்கும்போது, அங்கே ஒரு நாகப்பாம்பு படம் எடுத்து ஆடுகிறதைப்போன்ற காட்சி விளம்பரத்தில் கொடுக்கப்பட்டிருக்கும். கையில் அந்த டார்ச்சை எடுத்துக்கொண்டு செல்லாமல் இருந்திருந்தால் அவனுடைய நிலைமை என்னவாகி இருந்திருக்கும்? கொடிய விஷமுள்ள பாம்பினால் தீண்டப்பட்டு மரித்துப் போயிருப்பான் அல்லவா?

நாகப்பாம்பிலும் கொடிய பாம்புதான் வலுசர்ப்பமாகிய சாத்தான். வேத புத்தகம் உங்களுடைய கால்களுக்குத் தீபமாய் இருக்குமென்றால், நீங்கள் சாத்தானை இலகுவாய் அடையாளம் கண்டுகொள்ள முடியும். தீபத்தின் வெளிச்சத்தில் என்னென்ன எதிரிகள் நிற்கின்றனர், என்னென்ன அபாயங்கள் எதிர்வருகின்றன மற்றும் எந்த வழி சரியான வழி என்பதையெல்லாம் நீங்கள் தெளிவாக அறிந்து கொள்ளலாம். இதன் மூலம் சாத்தானுடைய எல்லா கண்ணிகளுக்கும் தப்பி பரலோகப் பாதையில் உற்சாகமாய்ச் செல்ல முடியும்.

கால்களுக்குத் தீபத்தை வழிகாட்டியாகக் கொடுத்த ஆண்டவர், நீங்கள் நடக்கவேண்டிய வழிகளை உங்களுக்குத் தெரிவிக்கிறார். தம்முடைய சித்தத்தை உங்களுக்குப் போதிக்கிறார். நீங்கள் கர்த்தருடைய வழியிலே நடப்பீர்களென்றால், ஒருநாளும் திசைதவறிப் போவதில்லை. வேதம் உங்களை சரியான பாதையில் அருமையாக வழிநடத்திச் செல்லும். சிலர் கண்களை மூடிக்கொண்டவர்களாய் வேதத்தைத் திறந்து வைத்துக்கொண்டு, கண்களில் முதலில் படும் வசனத்தையே வாக்குத்தத்தமாகக் கொள்ளுவார்கள். எத்தனை பரிதாபமான நிலை!

ஒரு பழங்காலத்துக் கதை உண்டு. ஒருவன் தேவ சித்தத்தை அறிய கண்களை மூடி ஒரு வசனத்தைத் தொட்டான். அங்கே யூதாஸ் நான்று கொண்டு செத்தான் என்று எழுதப்பட்டிருந்தது (மத். 27:5). மனம் கலங்கிய அவன் மீண்டும் முயற்சிப்போம் என்று எண்ணி வேதத்தைத் திறந்து ஒரு வசனத்தைத் தொட்டான். ‘நீயும் போ அந்தப்படியே செய்’ (லூக். 10:37) என்று அந்த வசனம் சொன்னது. மீண்டும் ஒரு முறை அவ்வாறே முயற்சித்தபோது, ‘நீ செய்கிறதை சீக்கிரமா செய்’ (யோவான். 13:27) என்ற வசனத்தைக் கண்டான். இப்படிப்பட்டவர்களுக்கு இதுவே முடிவு.

தேவபிள்ளைகளே, வேதத்தை விரும்பி, கவனத்தோடும், தியானத்தோடும் வாசியுங்கள். அப்பொழுது கர்த்தர் மெல்லிய குரலில் உங்களோடுகூட பேசுவார். உங்கள் வாழ்க்கைப் பாதையில் தீபத்தின் ஒளியைக் காண்பீர்கள்.

நினைவிற்கு:- “அதிக உறுதியான தீர்க்கதரிசன வசனமும் நமக்கு உண்டு, பொழுது விடிந்து விடிவெள்ளி உங்கள் இருதயங்களில் உதிக்குமளவும் இருளுள்ள ஸ்தலத்தில் பிரகாசிக்கிற விளக்கைப் போன்ற அவ்வசனத்தைக் கவனித்திருப்பது நலமாயிருக்கும்” (2 பேதுரு 1:19).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.