No products in the cart.
பிப்ரவரி 07 – தரிசனம்!
“வானங்கள் தேவனுடைய மகிமையை வெளிப்படுத்துகிறது, ஆகாய விரிவு அவருடைய கரங்களின் கிரியையை அறிவிக்கிறது” (சங்.19:1).
கர்த்தரை நேசிக்கிற ஒவ்வொருவரும் தேவனுடைய வல்லமையையும், மகிமையையும், மகத்துவத்தையும் அவரது படைப்புகளில் காண்கிறார்கள். அவர்கள் உள்ளத்தில் இருக்கிற இரட்சிப்பின் சந்தோஷமானது, எல்லாவற்றையும் புதிய முறையிலே காணச் செய்கிறது.
நீங்கள் ஓர் அழகிய பூங்காவுக்குள் செல்வீர்களானால், புல்வெளிகள், வாசனை மிகுந்த பல நிறமுடைய மலர்கள், நிழல் தரும் இனிய மரங்கள், பொங்கி வரும் நீரூற்றுகள் ஆகியவற்றை அங்கு காண்பீர்கள். “என் அருமை ஆண்டவர் இவைகளை எல்லாம் எவ்வளவு ஞானமாய் உண்டாக்கியிருக்கிறார்! எனக்காக அல்லவா இவைகளைச் சிருஷ்டித்தார்” என்று சொல்லி உங்களுடைய உள்ளத்தில் பரவசமடைவீர்கள். கர்த்தரில் மகிழ்ந்து களிகூருவீர்கள்.
அதே நேரத்தில் ஒரு நாத்திகன் அவற்றைப் பார்க்கும்போது அது இயற்கை என்றும், அவை பரிணாமக் கொள்கையின்படி பலகோடி வருஷங்களாக மாறி மாறி வந்தவை என்றும் எண்ணுவான். அவற்றைக் காணும்போது அவனுடைய உள்ளம் மகிழ்வதும் இல்லை, திருப்தியடைவதும் இல்லை. வேதம் சொல்லுகிறது: “ஜென்மசுபாவமான மனுஷனோ தேவனுடைய ஆவிக்குரியவைகளை ஏற்றுக் கொள்ளான்; அவைகள் அவனுக்குப் பைத்தியமாகத் தோன்றும்; அவைகள் ஆவிக்கேற்ற பிரகாரமாய் ஆராய்ந்து நிதானிக்கப்படுகிறவைகளானதால் அவைகளை அறியவுமாட்டான்” (1கொரி. 2:14).
ஒரு முறை ஒரு நாத்திகனும், ஒரு பக்தனும் ஒன்றாக அரேபிய பாலைவனத்தின் வழியாக நடந்து சென்றபோது பாதையைத் தவறவிட்டுவிட்டார்கள். திசை தெரியாமல், அவர்கள் பலமணி நேரம் நடந்தபோது திடீரென்று ஓர் ஒட்டகத்தின் அடிச்சுவடுகளைக் கண்டு மகிழ்ந்தார்கள். பாதையைக் கண்டுபிடித்த மகிழ்ச்சியால் அவர்கள் உள்ளம் பரவசமானது. அந்த பக்தன் உடனே முழங்காற்படியிட்டு ஆண்டவரை ஸ்தோத்தரித்தான். மட்டுமல்ல, நாத்திகனைப் பார்த்து, “பார்த்தாயா? இந்த அடிச்சுவடுகளைப் பார்த்தவுடன் இதில் நடந்து சென்றது ஒரு மனிதன் அல்ல, ஒட்டகம் என்பதை உடனே கண்டுகொண்டேன்.
பாலைவனத்திலுள்ள இந்த அடிச்சுவடுகள் ஒட்டகம் ஒன்று உண்டு என்பதையும், அது இந்த வழியாக நடந்து சென்றிருக்கிறது என்பதையும் தெளிவாக வெளிப்படுத்துகிறது. அதுபோலவே, வானங்களையெல்லாம் பார்க்கும்போது அவற்றை சிருஷ்டித்த கர்த்தர் உண்டு என்பதை அறிந்துகொள்ளுகிறேன். அந்த தேவனுடைய அடிச்சுவடுகளை உலகம் எங்கும் நான் பார்த்துக்கொண்டேயிருக்கிறேன். ஒவ்வொரு சிருஷ்டிப்பிலும் காண்கிறேன். ஒவ்வொரு மரத்திலும் காண்கிறேன்” என்றார்.
தேவபிள்ளைகளே, கர்த்தர் உலகங்களைச் சிருஷ்டித்தார். அவருடைய சிருஷ்டிகள் எல்லாம் அவரைத் தொழுதுகொள்ளுகின்றன. நீங்களும் அவரைத் துதியுங்கள். தொழுதுகொள்ளுங்கள்.
நினைவிற்கு:- “காணப்படாதவைகளாகிய அவருடைய நித்திய வல்லமை தேவத்துவம் என்பவைகள், உண்டாக்கப்பட்டிருக்கிறவைகளினாலே உலகமுண்டானது முதற்கொண்டு தெளிவாய்க் காணப்படும்” (ரோமர் 1:20).