No products in the cart.
பிப்ரவரி 03 – வாய்க்கும் !
‘இதில் எழுதியிருக்கிறவைகளின்படியெல்லாம் நீ செய்யக் கவனமாயிருக்கும்படி, இரவும் பகலும் அதைத் தியானித்துக்கொண்டிருப்பாயாக; அப்பொழுது நீ உன் வழியை வாய்க்கப்பண்ணுவார்” (யோசுவா 1:8).
ஒரு அருமையான இரகசியத்தை யோசுவாவின் புத்தகத்தின் மூலம் கர்த்தர் உங்களுக்கு விளக்கிச் சொல்லுகிறார். உங்களுடைய வழி வாய்ப்பதற்கான தேவனுடைய நிபந்தனை என்ன? ‘வேத வசனங்கள் உங்கள் வாயை விட்டு பிரியாதிருப்பதாக. வேத புத்தகத்தில் எழுதியிருக்கிறவைகளின்படியெல்லாம் நீங்கள் செய்யக் கவனமாயிருக்கும்படி இரவும் பகலும் அதைத் தியானித்துக் கொண்டிருப்பீர்களாக. அப்பொழுது உங்கள் வழியை வாய்க்கப்பண்ணுவீர்கள்’ என்பதே அந்த நிபந்தனை.
அநேகர், “ஐயா எங்கள் மகளுக்கு எத்தனையோ வரன்கள் பார்த்துவிட்டோம். ஒன்றும் வாய்க்கவில்லை. என் மகன் எத்தனையோ வேலைக்கு விண்ணப்பித்து விட்டான். ஒன்றும் வாய்க்கவில்லை” என்றெல்லாம் சொல்லுகிறார்கள்.
ஆனால் “அவன் செய்வதெல்லாம் வாய்க்கும்” (சங். 1:3) என்று வேதம் சொல்லுகிறது. யார் செய்வதெல்லாம் வாய்க்கும்? “அவருடைய வேதத்தில் தியானமாயிருக்கிற மனுஷன் பாக்கியவான். அவன் நீர்க்கால்களின் ஓரமாய் நடப்பட்டு, தன் காலத்தில் தன் கனியைத் தந்து, இலையுதிராதிருக்கிற மரத்தைப் போலிருப்பான்; அவன் செய்வதெல்லாம் வாய்க்கும்” (சங். 1:2,3).
ஒருவேளை நீங்கள் கடமைக்காக வேதத்தை வாசிப்பவர்களாக இதுவரை இருந்திருக்கலாம். ஆனால் உங்களுடைய வழி வாய்க்கும்படி, இனி வேதத்தை ஆழ்ந்து வாசியுங்கள். நேரம் எடுத்து வசனத்தை தியானியுங்கள். அப்பொழுது கர்த்தர் கட்டாயம் உங்கள் வழிகளை வாய்க்கச்செய்வார்.
உசியா ராஜாவின் வாழ்க்கையைப் பாருங்கள். அவர் கர்த்தரைத் தேடின நாட்களில் தேவன் அவர் காரியங்களை வாய்க்கச் செய்தார். (2 நாளா. 26:5 ) அநேகர் கர்த்தரைத் தேடாமல், தங்களுடைய திறமைகளிலும், தங்களுடைய படிப்புகளிலும், தங்களுடைய செல்வாக்குகளிலும், பெரிய மனிதர்களின் தயவிலும் நம்பிக்கை வைக்கிறபடியினால் அவர்களுடைய வழிகள் வாய்ப்பதில்லை. கர்த்தரைத் தேடி அவருடைய வேதவசனங்களை வாசித்து தியானியுங்கள்.
உங்களுடைய பிரயாசங்கள் ஆசீர்வதிக்கப்பட்டு, உங்களுடைய முயற்சிகள் வாய்க்க வேண்டுமென்றால் வேத வசனங்களை தியானிப்பது மட்டுமல்ல, கர்த்தரைத் தேடுவது மட்டுமல்ல, இன்னொரு காரியமும் நீங்கள் செய்ய வேண்டும். அது கர்த்தரை முற்றிலும் சார்ந்து அவரையே பற்றிக்கொள்ளுவதாகும்.
தேவபிள்ளைகளே, நீங்கள் கர்த்தரை முற்றிலுமாய் சார்ந்திருக்கும்போது காரியங்கள் வாய்க்குமோ, வாய்க்காதோ என்று உங்கள் உள்ளம் கலங்காது, நிறைவேறுமோ நிறைவேறாதோ என்று தடுமாறாது. உங்கள் உள்ளம் பூரண சமாதானமாய் விசுவாசத்தோடு எதிர்பார்த்திருக்கும்.
நினைவிற்கு:- “நான், நானே அதைச் சொன்னேன்; நான் அவனை அழைத்தேன்; நான் அவனை வரப்பண்ணினேன்; அவன் வழி வாய்க்கும்” (ஏசா. 48:15).