AppamAppam - Tamil

Mar 13 – மகிமைக்கு மகிமை!

“சூரியனுடைய மகிமையும் வேறே, சந்திரனுடைய மகிமையும் வேறே, நட்சத்திரங்களுடைய மகிமையும் வேறே” (1 கொரி. 15:41).

 கர்த்தர் நான்காம் நாளிலே சூரியனையும், சந்திரனையும், நட்சத்திரங்களையும், சிருஷ்டித்திருந்தாலும்கூட, ஒவ்வொன்றும் மகிமையிலே வித்தியாசப்பட்டிருக்கிறது.

ஒரு குடும்பத்தில் சூரியனைப்போல தகப்பனும், சந்திரனைப்போல தாயும், நட்சத்திரங்களைப்போல பிள்ளைகளும் இருக்கிறார்கள். யோசேப்பு கண்ட சொப்பனத்தில் அவனை சூரியனும், சந்திரனும், பதினொரு நட்சத்திரங்களும் வணங்குவதாகக் கண்டான் (ஆதி. 37:9). அதற்கு வியாக்கியானம் கொடுத்த யாக்கோபு ‘நானும் உன் தாயாரும் உன் சகோதரரும் தரை மட்டும் குனிந்து உன்னை வணங்க வருவோமோ?’ என்று கேட்டார்.

ஆம், தகப்பன் சூரியனைப் போன்று கர்த்தருக்காக பிரகாசித்தால், மனைவி சந்திரனைப்போலவும், பிள்ளைகள் நட்சத்திரங்களைப்போலவும் ஒளி கொடுப்பார்கள். ஏசாயா சொல்லுகிறார்: “இதோ, நானும், கர்த்தர் எனக்குக் கொடுத்த பிள்ளைகளும் சீயோன் பர்வதத்தில் வாசமாயிருக்கிற சேனைகளின் கர்த்தராலே இஸ்ரவேலில் அடையாளங்களாகவும் அற்புதங்களாகவும் இருக்கிறோம்” (ஏசா. 8:18).

பரலோக குடும்பமாகிய கர்த்தருடைய குடும்பத்தில் கிறிஸ்து சூரியனாகவும் (மல். 4:2; மத். 17:2), மணவாட்டியாகிய சபை சந்திரனாகவும் (உன். 6:10), ஊழியர் நட்சத்திரமாகவும் (தானி. 12:3) விளங்குகிறார்கள். கர்த்தருடைய பிள்ளைகள் தங்களுக்கு கிடைத்த வெளிப்பாட்டால் மகிமைக்கு மகிமை வித்தியாசப்பட்டிருந்தாலும், வரத்திற்கு வரம், தாலந்துக்கு தாலந்து வேறுபட்டிருந்தாலும், கர்த்தருக்காக பிரகாசிக்க வேண்டுமென்பதே அவர்களுக்கு பிரதானமென்பதை மறந்து போகக்கூடாது.

தாவீது ராஜா சூரியனையும், சந்திரனையும், நட்சத்திரங்களையும் பார்த்தார். அவருடைய உள்ளம் தேவ அன்பினால் பொங்கினது. அவர் கர்த்தரை நோக்கிப் பார்த்து, ஆண்டவரே, “நீர் ஸ்தாபித்த சந்திரனையும் நட்சத்திரங்களையும் நான் பார்க்கும்போது, மனுஷனை நீர் நினைக்கிறதற்கும், மனுஷகுமாரனை நீர் விசாரிக்கிறதற்கும் அவன் எம்மாத்திரம் என்கிறேன்” (சங். 8:3,4) என்றார். சூரியன், சந்திரன், நட்சத்திரங்களெல்லாம் கர்த்தருடைய மகத்துவத்தை மாத்திரமல்ல, அவர் உங்கள்மேல் வைத்திருக்கும் அன்பையும், கரிசனையையும் வெளிப்படுத்துகின்றன. பகலில் உஷ்ணத்தில் உழைத்து வரும் மனுஷன் இளைப்பாற இரவு அவசியம். அதே நேரத்தில் பால் போன்ற தன் மென்மையான கதிர்களால் இரவை குளிர்ச்சியாக்க சந்திரன் அவசியம். சந்திரன் மேகங்களுக்குள் மறையும் சந்தர்ப்பங்களில் மின்னிட்டு வெளிச்சம் தர நட்சத்திரங்கள் அவசியம். கர்த்தர் இரவை எவ்வளவு அருமையாய் அலங்கரித்திருக்கிறார்!

தேவபிள்ளைகளே, நீதியின் சூரியன் உங்கள் வாழ்க்கையில் பிரகாசிக்க இடங்கொடுங்கள். அப்பொழுது அந்தகாரத்தின் லோகாதிபதி உங்களைவிட்டு ஓடிப்போவான். நீங்கள் பாவ பழக்க வழக்கங்களாகிய காரிருளின் பள்ளத்தாக்கிலே நடந்தாலும் பயப்படமாட்டீர்கள். நினைவிற்கு:- “இதோ, இருள் பூமியையும், காரிருள் ஜனங்களையும் மூடும்; ஆனாலும் உன்மேல் கர்த்தர் உதிப்பார்; அவருடைய மகிமை உன்மேல் காணப்படும்” (ஏசா. 60:2).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.