No products in the cart.
ஜனவரி 15 – புதிய சாயல்!
“மேலும் மண்ணானவனுடைய சாயலை நாம் அணிந்திருக்கிறதுபோல, வானவருடைய சாயலையும் அணிந்துகொள்வோம்” (1 கொரி. 15:49).
புது சிருஷ்டியாயிருக்கிற உங்கள் ஒவ்வொருவருக்கும் கர்த்தர் புது சாயலைத் தந்திருக்கிறார். அது கிறிஸ்து இயேசுவுக்கு ஒப்பான சாயல். அது வானவருடைய சாயல். வானத்திற்குரியவர்களாய் நீங்கள் மறுரூபமாக்கப்படுகிறீர்கள்.
சில ஆண்டுகளுக்கு முன்பு பத்திரிக்கையில் வந்த ஒரு செய்தியை வாசித்தேன். “பார்ப்பதற்கு கருமை நிறமுடைய ஒரு பெண்ணுக்கு திருமணம் ஒழுங்கு செய்ய முயன்றார்கள். பெண் பார்க்க வந்தவர்கள் எல்லாரும் அவளைக் கறுப்பு கறுப்பு என்று சொல்லிப் புறக்கணித்து விட்டார்கள். முடிவிலே அவளுடைய பெற்றோர் அவளுக்கு அதிகமாக வரதட்சணை கொடுத்து ஒரு எளிய இடத்தில் திருமணம் செய்து வைத்தார்கள்.
ஆனால், புகுந்த இடத்திலும் அவளைக் கறுப்பு என்று சொல்லி ஒதுக்கினார்கள். கணவனும் வெறுத்தான். முடிவிலே அவள் தற்கொலை செய்துகொண்டாள்” என்று அந்த செய்தி தெரிவித்தது. அதை வாசித்ததும் என் இருதயம் அப்படியே உடைந்தது. “நான் கறுப்பாயிருந்தாலும், அழகாயிருக்கிறேன்” (உன். 1:5) என்னும் வசனமே என் நினைவுக்கு வந்தது.
ஆதாமுக்குள் நீங்கள் கறுப்பாயிருக்கிறீர்கள். பாவம் உங்களை கறுப்பாக்கிற்று. ஆனால் இயேசுவோ உங்களைப் புறக்கணியாமல் உங்கள்மேல் அன்பு செலுத்தி ஒரு ஆத்தும நேசராய் உங்களைத்தேடி வந்தார். அவருடைய சிவந்த இரத்தத்தின் துளிகள் உங்கள்மேல் விழுந்ததினாலே உங்களது பாவங்களும் சாபங்களும் நீங்கி நீங்கள் அழகாய் மாறினீர்கள். ஆதாமுக்குள் நீங்கள் கறுப்பாய் இருந்தாலும், கிறிஸ்துவுக்குள் நீங்கள் அழகாயிருக்கிறீர்கள். பாவம் உங்களை கறுப்பாக்கியிருந்த நிலையில், கிறிஸ்துவின் இரத்தம் உங்களைக் கழுவி அழகாக்கிற்று.
நீங்கள் இந்த பூமியிலே வாழுகிற நாட்களில் எல்லாம் ஆதாமின் சுபாவமும் உங்களில் காணப்படுகிறது, கிறிஸ்துவின் சுபாவமும் காணப்படுகிறது. ஆனால் ஒரு நாள் எக்காள சத்தம் தொனிக்கும்; அப்பொழுது மரித்தோர் அழிவில்லாதவர்களாய் எழுந்திருப்பார்கள்; நீங்களும் மறுரூபமாக்கப்படுவீர்கள். அழிவுள்ளதாகிய இது அழியாமையையும், சாவுக்கேதுவாகிய இது சாவாமையையும் தரித்துக்கொள்ளும் (1 கொரி. 15:52, 53).
எக்காள சத்தம் தொனித்த அந்த நிமிடம் முதற்கொண்டு உங்களிலே புதிய சாயல் தோன்றும். ஆம். மண்ணுக்குரிய சாயல் யாவும் நீங்கி விண்ணுக்குரிய சாயல் உங்களுக்குத் தரிப்பிக்கப்படும். அப்பொழுது நீங்கள் கறுப்பாய் இருப்பதில்லை. இயேசுவைப்போல முற்றிலும் அழகுள்ளவர்களாயிருப்பீர்கள்.
தேவபிள்ளைகளே, வேதம் சொல்லுகிறது, “அவர் வெளிப்படும்போது அவர் இருக்கிறவண்ணமாகவே நாம் அவரைத் தரிசிப்பதினால், அவருக்கு ஒப்பாயிருப்போமென்று அறிந்திருக்கிறோம்” (1 யோவான் 3:2). விண்ணுக்குரிய அந்த சாயலில் கறைதிரை இருப்பதில்லை. நீங்கள் மாசற்றவர்களாய் காணப்படுவீர்கள். மகிமையின் சாயலோடு பிரகாசிப்பீர்கள். ஆ! அந்த நாள் எத்தனை பாக்கியமான நாள்!
நினைவிற்கு:- “இதோ, நான் புதிய வானத்தையும் புதிய பூமியையும் சிருஷ்டிக்கிறேன்; முந்தினவைகள் இனி நினைக்கப்படுவதுமில்லை, மனதிலே தோன்றுவதுமில்லை” (ஏசா. 65:17).
