No products in the cart.
ஜனவரி 13 – புதிய காரியம்!
“முந்தினவைகள் இனி நினைக்கப்படுவதுமில்லை, மனதிலே தோன்றுவதுமில்லை” (ஏசா. 65:17).
ஒரு முறை, இயேசு கதரேனருடைய நாட்டில் வந்து இறங்கியபோது அசுத்த ஆவியுள்ள ஒரு மனுஷன் பிரேதக்கல்லறையிலிருந்து அவருக்கு எதிரே வந்தான். அவனுடைய குடியிருப்பு கல்லறையில் இருந்தது. அவனைச் சங்கிலிகளினாலே கட்ட ஒருவனாலும் கூடாதிருந்தது. அவன் இரவும், பகலும் மலைகளிலும், கல்லறைகளிலும் இருந்து கூக்குரலிட்டு, கல்லுகளினாலே தன்னைக் காயப்படுத்திக் கொண்டிருந்தான் (மாற்கு 5:1-5).
கர்த்தர் அவன் பெயரைக்குறித்து கேட்டபோது, நாங்கள் அநேகராயிருக்கிறபடியால் என் பேர் “லேகியோன்” என்று சொன்னான். ரோமருடைய சேனையில் “லேகியோன்” என்னும் பட்டாளத்தில் ஆறாயிரம் காலாட்களும், குதிரைப் படைகளும் சேர்ந்திருந்தார்கள். யூதர்களும் இந்த சொல்லைப் பெரிய எண்ணிக்கையைக் குறிப்பிட உபயோகப்படுத்தினார்கள் (மத். 26:53; லூக். 8:30).
அப்படியானால் அவனுக்குள் ஆயிரமாயிரமான பிசாசுகள் குடியிருந்தன என்பது வெளிப்படுகிறது அல்லவா? அந்த பிசாசுகளைக் கர்த்தர் துரத்தியவுடன் அவைகள் மலை அருகே கூட்டம் கூட்டமாய் மேய்ந்து கொண்டிருந்த ஏறக்குறைய இரண்டாயிரம் பன்றிகளுக்குள் புகுந்தன. உடனே அந்த பன்றிகள் உயர்ந்த மேட்டிலிருந்து ஓடி, கடலிலே பாய்ந்து, அழிந்து மாண்டன.
அந்த நிமிடமே அவனுடைய வாழ்க்கையில் பெரிய மாற்றம் ஏற்பட்டது. இதுவரை நிர்வாணியாயிருந்தவன் பின்பு வஸ்திரம் தரித்தவனாய் அமர்ந்திருந்தான். முன்பு புத்தி தெளிவு இல்லாதவனாயிருந்தவன், இப்பொழுது புத்தி தெளிந்தவனாய்க் காணப்பட்டான் (மாற். 5:15). மட்டுமல்ல, அவன் இயேசுவின் பாதத்தருகே உட்கார்ந்திருந்தான் (லூக். 8:35). அதோடு நின்றுவிடவில்லை. கர்த்தர் அவனை சுவிசேஷகனாகவும் மாற்றி விட்டார். வேதம் சொல்லுகிறது, “இயேசு தனக்குச் செய்தவைகளையெல்லாம் தெக்கப்போலி என்னும் நாட்டில் பிரசித்தம் பண்ணத்தொடங்கினான்; எல்லாரும் ஆச்சரியப்பட்டார்கள்” (மாற். 5:20).
கர்த்தர் ஒரு மனுஷனை விடுதலையாக்கும்போது முற்றிலுமாக விடுதலையாக்குகிறார். முற்றிலும் புதிய சிருஷ்டியாய் மாற்றிவிடுகிறார். ஒருவேளை, இயேசு அவனுடைய வாழ்க்கையில் குறுக்கிடாதிருந்தால் அவனுடைய நிலைமை எவ்வளவு மோசமாயிருந்திருக்கும்? சிந்தித்துப் பாருங்கள்.
இரண்டாயிரம் பன்றிகளை கடலுக்குள்ளே தள்ளிச்சென்ற அந்த பிசாசுகள் அவனையும் பாதாளத்திற்குள் தள்ளிக்கொண்டு போயிருக்கும் அல்லவா? நித்திய அக்கினிக் கடலில் அல்லவா அவன் பங்கடைந்திருப்பான்? கர்த்தர் ஒரு மனிதனை சந்திக்கும்போது அவனை மகிமையான பாத்திரமாய் மாற்றுகிறார்.
தேவபிள்ளைகளே, நீங்கள் புது சிருஷ்டியான பின்பு முந்தினவைகளை நினைக்கக்கூடாது. இப்பொழுது நீங்கள் தேவனுடைய புதிய சிருஷ்டியாய் இருக்கிறீர்கள் என்பதை உணர்ந்து, புது சிருஷ்டி என்ற உற்சாகத்தையும், சந்தோஷத்தையும் சுதந்தரித்துக் கொள்ளுங்கள்.
நினைவிற்கு:- “முந்தினவைகளை நினைக்கவேண்டாம்; பூர்வமானவைகளைச் சிந்திக்க வேண்டாம். இதோ, நான் புதிய காரியத்தைச் செய்கிறேன்; இப்பொழுதே அது தோன்றும்” (ஏசா. 43:18, 19).
