No products in the cart.
ஜனவரி 10 – புதிய கனிகள்!
“தூதாயீம் பழம் வாசனை வீசும்; நமது வாசல்களண்டையிலே புதியவைகளும் பழையவைகளுமான சகலவித அருமையான கனிகளுமுண்டு; என் நேசரே! அவைகளை உமக்கு வைத்திருக்கிறேன்” (உன். 7:13).
நம் தேவன் எல்லாவற்றையும் புதிதாக்குகிறவர். கனி இல்லாத வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறவர்களையும் கனியுள்ள வாழ்க்கை வாழும்படி மாற்றிப் புதிதாக்குகிறார். கசப்பான கனியைக் கொடுத்துக்கொண்டிருக்கிறவர்களையும் இனிமையான சுவையுள்ள கனிகளைக் கொடுக்கும்படியாக மாற்றுகிறார்.
நீங்கள் உங்கள் தோட்டத்திலே புதிய கனி தரும் மரங்களை நடுகிறீர்கள் என்று வைத்துக்கொள்ளுங்கள். நீங்கள் மண் வெட்டியால் அந்த நிலத்தைக் கொத்தி, செடிகளை நட்டு, அவற்றிற்கு உரமிட்டு, தண்ணீர் ஊற்றிப் பராமரிக்கிறீர்கள். சில வருடங்களில் அந்தச் செடிகள் மரங்களாக வளர்ந்து கனி கொடுக்க ஆரம்பித்து விடுகின்றன. முதல் முறையாக உங்கள் மரத்தில் பழத்தைக் காணும்போது உங்களுடைய மகிழ்ச்சிக்கு அளவே இருக்காது. மற்ற கனிகளைப் புசிப்பதைவிட உங்கள் மரத்தின் கனியைப் புசிப்பது அதிக சந்தோஷத்தைத் தரும்.
அதைப்போலவே, கர்த்தர் உங்களிடத்திலே கனியை எதிர்பார்க்கிறார். தோட்டத்தின் மத்தியிலே இருந்த அத்திமரம் கனி கொடுக்காமல் போனபோது எஜமான் அதை வெட்டிப் போடும்படி சொன்னார். நியாயத்தீர்ப்பின் கோடாரியானது மரத்தின் வேர் அருகே வைக்கப்பட்டிருக்கிறது. ஆனாலும் அந்த தோட்டக்காரன் எஜமானிடத்திலே பரிந்து பேசினதினாலே இன்னும் ஓராண்டு காலம் அந்த மரம் நீடித்திருக்கும்படி எஜமான் அனுக்கிரகம் செய்தார். தோட்டத்திலே இருந்ததினாலும், தோட்டக்காரன் அதற்காகப் பரிந்து பேசினதினாலும் அந்த மரம் தப்பினது.
ஆனால் வழியோரம் நாட்டப்பட்டிருந்த அத்தி மரத்திற்கோ பரிந்துபேச யாரும் இல்லை, தோட்டக்காரன் அங்கே இல்லை. ‘இனிமேல் ஒருக்காலும் உன்னில் கனி உண்டாகாது’ என்று கர்த்தர் சொன்னபோது, அது பட்டுப்போயிற்று. நீங்கள் நீர்க்கால்களின் ஓரமாய் நடப்பட்டு, தன் காலத்தில் தன் கனியைத் தந்து, இலையுதிராதிருக்கிற மரத்தைப்போலிருக்க வேண்டும் (சங். 1:3).
வேதம் மேலும் சொல்லுகிறது, “நதியோரமாய் அதின் இக்கரையிலும் அக்கரையிலும் புசிப்புக்கான சகலவித விருட்சங்களும் வளரும்; அவைகளின் இலைகள் உதிர்வதுமில்லை, அவைகளின் கனிகள் கெடுவதுமில்லை; அவைகளுக்குப் பாயும் தண்ணீர் பரிசுத்த ஸ்தலத்திலிருந்து பாய்கிறபடியினால் மாதந்தோறும் புதுக்கனிகளைக் கொடுத்துக்கொண்டேயிருக்கும்; அவைகளின் கனிகள் புசிப்புக்கும், அவைகளின் இலைகள் அவிழ்தத்துக்குமானவைகள்” (எசேக். 47:12).
“ஆவியின் கனியோ, அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடியபொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம், சாந்தம், இச்சையடக்கம்; இப்படிப்பட்டவைகளுக்கு விரோதமான பிரமாணம் ஒன்றுமில்லை” (கலா. 5:22, 23) என்று வேதம் சொல்லுகிறது. தேவபிள்ளைகளே, ஆவியின் கனி உங்களில் காணப்பட வேண்டும் என்பதே கர்த்தரின் எதிர்பார்ப்பாய்இருக்கிறது.
நினைவிற்கு:- “ஆகையால், அவருடைய நாமத்தைத் துதிக்கும் உதடுகளின் கனியாகிய ஸ்தோத்திரபலியை அவர்மூலமாய் எப்போதும் தேவனுக்குச் செலுத்தக்கடவோம்” (எபி. 13:15).
