No products in the cart.
ஜனவரி 09 – புதிய சந்தோஷம்!
“தேவனுடைய ராஜ்யம் புசிப்பும் குடிப்புமல்ல, அது நீதியும் சமாதானமும் பரிசுத்த ஆவியினாலுண்டாகும் சந்தோஷமுமாயிருக்கிறது” (ரோமர் 14:17).
பரிசுத்த ஆவியினால் உண்டாகும் புதிய சந்தோஷத்தைக் குறித்து அப். பவுல் எழுதுகிறார். கிறிஸ்துவை கிட்டிச் சேருவதற்கு முன்பு, சந்தோஷம் என்றால் அது புசிப்பும் குடிப்புமாய் இருந்தது. சந்தோஷம் என்பது களியாட்டுகளிலும், வெறிகளிலும்தான் இருந்தது. சினிமாக்களிலும், நாடகங்களிலும் இருந்தது. நண்பர்களிலும், உறவினர்களிலும் இருந்தது. அவைகளெல்லாம் போலியான, ஒன்றுக்கும் உதவாத நிலையற்ற சந்தோஷங்கள்.
ஆனால், நீங்கள் கிறிஸ்துவுக்குள் புதுசிருஷ்டியாய் மாறும்போது, பரிசுத்த ஆவியினால் உண்டாகும் சந்தோஷமே மகா மேன்மையானதாய்இருக்கிறது. அப். பவுல் சொல்லுகிறார், “உங்கள் உள்ளத்திலே புதிதான ஆவியுள்ளவர்களாகி, மெய்யான நீதியிலும் பரிசுத்தத்திலும் தேவனுடைய சாயலாகச் சிருஷ்டிக்கப்பட்ட புதிய மனுஷனைத் தரித்துக்கொள்ளுங்கள்” (எபே. 4:23, 24).
புதிய அபிஷேகம், புதிய ஆவி, புதிய சந்தோஷம் ஆகியவை உங்களுக்கே உரித்தான சுதந்தரங்களாகும். கர்த்தர் அவற்றை உங்களுக்கு வாக்குப்பண்ணியிருக்கிறார். இயேசுசொன்னார், “என் பிதா வாக்குத்தத்தம்பண்ணினதை, இதோ, நான் உங்களுக்கு அனுப்புகிறேன்” (லூக். 24:49). “நீங்கள் சில நாளுக்குள்ளே பரிசுத்தஆவியினாலே ஞானஸ்நானம் பெறுவீர்கள்” (அப். 1:4).
இயேசுகிறிஸ்து இந்த பூமியைவிட்டு கடந்து போவதற்கு முன்பு புதிய தேற்றரவாளனை வாக்குப்பண்ணினார். இயேசுசொன்னார், “நான் பிதாவை வேண்டிக்கொள்ளுவேன், அப்பொழுது என்றென்றைக்கும் உங்களுடனேகூட இருக்கும்படிக்குச் சத்திய ஆவியாகிய வேறொரு தேற்றரவாளனை அவர் உங்களுக்குத் தந்தருளுவார். அவர் உங்களுடனே வாசம் பண்ணி உங்களுக்குள்ளே இருப்பதால், நீங்கள் அவரை அறிவீர்கள்” (யோவான் 14:16, 17).
இயேசுகிறிஸ்து ஒரு தேற்றரவாளன். பரிசுத்த ஆவியானவர் ஒரு புதிய தேற்றரவாளன். அவர் உங்களோடிருந்து உங்களுக்கு உதவி செய்கிறார். உங்களை ஆற்றுகிறார், தாய் தேற்றுவதுபோலத் தேற்றி, உங்களை அரவணைத்துக் கொள்ளுகிறார். அவர் உங்களோடிருப்பது எத்தனை பெரிய சிலாக்கியம்!
உங்களுடைய மனுஷீக ஆவி பெலவீனமானது. மனுஷீக ஆவியிலே நீங்கள் அடிக்கடி சோர்ந்து போகிறீர்கள். உற்சாகத்தை இழந்து போகிறீர்கள். பாடுகளும் துக்கங்களும் உங்களுடைய ஆவியைத் தொய்ந்து போகப் பண்ணுகின்றன. ஆகவேதான் தாவீது ராஜா, “உற்சாகமான ஆவி என்னைத் தாங்கும்படி செய்யும்” (சங். 51:12) என்று ஜெபித்தார்.
உற்சாகத்தின் ஆவி உங்களைத் தாங்கும்போது, இரட்சிப்பின் சந்தோஷம் உங்களுக்குள் வருகிறது. மனமகிழ்ச்சி வருகிறது. அளவற்ற களிகூருதல் வருகிறது. உற்சாகமான ஆவியை நீங்கள் பெறும்போது குடும்பத்திற்குச் செய்யவேண்டிய கடமைகளையும், கர்த்தருக்குச் செய்ய வேண்டிய கடமைகளையும், மனமகிழ்ச்சியுடன் செய்வீர்கள். தேவபிள்ளைகளே, ஒவ்வொரு நாளும் இந்தப் புதிய ஆவியினாலும், புதிய சந்தோஷத்தினாலும் நிரப்பப்படுங்கள்.
நினைவிற்கு:- “மேலும் எவர்கள் தேவனுடைய ஆவியினாலே நடத்தப்படுகிறார்களோ, அவர்கள் தேவனுடைய புத்திரராயிருக்கிறார்கள்” (ரோமர் 8:14).
