No products in the cart.
ஜனவரி 08 – ஜனவரி 08
“அதினால் என் வாயைத் தொட்டு: இதோ, இது உன் உதடுகளைத் தொட்டதினால் உன் அக்கிரமம் நீங்கி, உன் பாவம் நிவிர்த்தியானது என்றான்” (ஏசா. 6:7).
நம் தேவன் எல்லாவற்றையும் புதிதாக்குகிறவர். உங்களுடைய வாயையும், நாவையும், உதடுகளையும்கூட அவர் புதிதாக்குகிறார். அவர் புதிதாக்கும்போது, நீங்கள் அவருடைய ஊழியங்களைச் செய்து, அவரது புகழை அறிவிக்க முடியும். அவரைப் பாடித் துதிக்க முடியும்.
கர்த்தர் ஏசாயாவின் வாழ்க்கையில் புதிதான காரியத்தைச் செய்யத் தீர்மானித்தார். அவரை வல்லமையான, மகிமையான தீர்க்கதரிசியாக உயர்த்தும்படி சித்தமானார். ஆனால் ஏசாயாவின் உதடுகளோ அசுத்தத்தினால் நிறைந்திருந்தது. கர்த்தர் அவரைப் பெரிய தீர்க்கதரிசியாய் உயர்த்துவதற்கு முன்பு, அவருடைய வாயையும் உதடுகளையும் தொட வேண்டியது அவசியமாயிருந்தது. பலிபீடத்தின் குறட்டினால் அவரைத் தொட்டு, “இது உன் உதடுகளைத் தொட்டதினால் உன் அக்கிரமம் நீங்கி உன் பாவம் நிவிர்த்தியானது” என்றார்.
கர்த்தர் ஒரு மனிதனைப் பயன்படுத்த வேண்டுமென்றால், அவனுடைய வாயும், உதடும், நாவும் புதிதாக்கப்பட்டிருக்கவேண்டும். உங்களுடைய நாவையும் புதிதாக்கி, உங்களுடைய வாயை அவருக்குப் புதுப்பாட்டைப் பாடவைக்க வேண்டுமென்பது அவருடைய சித்தமாயிருக்கிறது. வேதம் சொல்லுகிறது, “கர்த்தருக்குப் புதுப்பாட்டைப் பாடுங்கள்; பரிசுத்தவான்களின் சபையிலே அவருடைய துதி விளங்குவதாக” (சங். 149:1).
தாவீது ராஜாவின் அனுபவம் என்ன? “பயங்கரமான குழியிலும் உளையான சேற்றிலுமிருந்து என்னைத் தூக்கியெடுத்து, என் கால்களைக் கன்மலையின்மேல் நிறுத்தி, என் அடிகளை உறுதிப்படுத்தி, நமது தேவனைத் துதிக்கும் புதுப்பாட்டை அவர் என் வாயிலே கொடுத்தார்” (சங். 40:2, 3). “புதுப்பாட்டு” என்று அவர் குறிப்பிட்டுச் சொல்லுவதைக் கவனியுங்கள்.
ஒரு காலத்தில் உங்களுடைய நாவு சினிமாப் பாடல்களைப் பாடியிருந்திருக்கும். கேலியும் பரியாசமுமான பாடல்களைப் பாடியிருந்திருக்கக்கூடும். ஆனால், இனி நீங்கள் புதிய பாடல்களைப் பாடப் போகிறீர்கள். ஆவிக்குரிய பாடல்களைப் பாடி, அந்நிய பாஷையிலே துதித்து மகிழப் போகிறீர்கள். அதற்கான புதிய நாவை கர்த்தர் உங்களுக்குத் தந்தருளுகிறார். ஆம் உங்களுடைய உதடுகளில் இருந்து உதடுகளின் கனியாகிய ஸ்தோத்திர பலி வெளி வருகிறது. நீங்கள் பூமியிலும் கர்த்தரை மகிமைப்படுத்துவீர்கள். நித்தியத்திலும் கர்த்தரை மகிமைப்படுத்துவீர்கள்.
அப்.பவுல் எழுதுகிறார், “…ஆவியினால் நிறைந்து; சங்கீதங்களினாலும் கீர்த்தனைகளினாலும் ஞானப்பாட்டுகளினாலும் ஒருவருக்கொருவர் புத்தி சொல்லிக்கொண்டு, உங்கள் இருதயத்தில் கர்த்தரைப் பாடிக் கீர்த்தனம்பண்ணி, நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே எப்பொழுதும் எல்லாவற்றிற்காகவும் பிதாவாகிய தேவனை ஸ்தோத்திரியுங்கள்” (எபே. 5:18-20). தேவபிள்ளைகளே, இந்தக் கடைசி நாட்கள் புதிய நாவினால் புதிய பாடல்களைப் பாடித் துதிக்கும் நாட்களாகும். மணவாளனுக்கு எதிர்கொண்டு போகும்போது புதிய பாடலோடும், புதிய துதியோடும், புதிய மகிழ்ச்சியோடும் எதிர்கொண்டு போகவேண்டும் அல்லவா?
நினைவிற்கு:- “அவர் வாசல்களில் துதியோடும், அவர் பிராகாரங்களில் புகழ்ச்சியோடும் பிரவேசித்து, அவரைத் துதித்து, அவருடைய நாமத்தை ஸ்தோத்திரியுங்கள்” (சங். 100:4).
