No products in the cart.
டிசம்பர் 29 – கர்த்தர் முடிவுபரியந்தம் நடத்துவார்!
“உங்களில் நற்கிரியையைத் தொடங்கினவர் அதை இயேசுகிறிஸ்துவின் நாள் பரியந்தம் முடிய நடத்துவார்” (பிலி. 1:5).
கர்த்தர் உங்களை நடத்துவார், நித்தமும் நடத்துவார். சமாதானத்தின் பாதையிலே நடத்துவார். தேவ சித்தத்தின்படியே நடத்துவார். சகல சத்தியத்திற்குள்ளும் வழி நடத்துவார். இந்த வேத வசனத்தில், “உங்களில் நற்கிரியையைத் தொடங்கின நான் அதை கிறிஸ்துவின் நாள்பரியந்தம் முடிய நடத்தி வருவேன்” என்று சொல்லுகிறார். ஆம், உங்கள் கரங்களைப் பிடித்தவர் உண்மையுள்ளவர். அவர் உங்களைப் பெயர் சொல்லி அழைத்துத் தெரிந்துகொண்டார். அழைத்தவர் நித்தியம் வரையிலும் உங்களை நடத்துவார்.
நீங்கள் சிறு பிள்ளைகளாக இருக்கும்போது உங்கள் தகப்பன்மார் கரம் பிடித்து நடக்கச் சொல்லிக் கொடுத்தார்கள். சிறிய கை வண்டிகள், சிறிய சைக்கிள்கள் வாங்கிக்கொடுத்து சந்தோஷப்படுத்தினார்கள். நீங்கள் வளர்ந்தபிறகும் உலகத்தில் நீங்கள் நடந்துகொள்ள வேண்டிய வழிகளை உங்களுக்குச் சொல்லிக் கொடுக்கிறார்கள். ஆனாலும் கர்த்தர் ஒருவரே ஒருநாளும் உங்களை விட்டு விலகாமல், கைவிடாமல் உலகத்தின் முடிவுபரியந்தமும் உங்களை நடத்துகிறவர். வேதம் சொல்லுகிறது, “இந்த தேவன் என்றென்றைக்குமுள்ள சதாகாலங்களிலும் நம்முடைய தேவன்; மரணபரியந்தம் நம்மை நடத்துவார்” (சங். 48:14).
கர்த்தர் ஒரு நாள் பேதுருவைப் பார்த்து, “நீ இளவயதுள்ளவனாயிருந்தபோது உன்னை நீயே அரைக்கட்டிக்கொண்டு, உனக்கு இஷ்டமான இடங்களிலே நடந்து திரிந்தாய்; நீ முதிர்வயதுள்ளவனாகும்போது உன் கைகளை நீட்டுவாய்; வேறொருவன் உன் அரையைக் கட்டி, உனக்கு இஷ்டமில்லாத இடத்துக்கு உன்னைக் கொண்டுபோவான் என்று மெய்யாகவே மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார்” (யோவான் 21:18).
பேதுரு தன் இளவயதிலே மனம்போல நடந்து திரிந்தார். பின்பு அவர் அப்போஸ்தலன் ஆகிவிட்டார். இனி பரிசுத்த ஆவியானவர்தான் அவரை வழிநடத்திச் செல்ல வேண்டும். ஒருவேளை அந்தப் பாதை பேதுருவுக்கு பிரியமில்லாததாய் இருந்தாலும்கூட, தேவ சித்தத்தின்படி அதில் நடந்துதான் ஆக வேண்டும்.
நீங்கள் தேவ சித்தத்தின்படி நடக்க வேண்டுமா? ஆவியானவருடைய வழி நடத்துதலுக்கு ஒப்புக்கொடுங்கள். இயேசு சொன்னார், “பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவனே பரலோகராஜ்யத்தில் பிரவேசிப்பானேயல்லாமல், என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! என்று சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பதில்லை” (மத். 7:21).
ஆகவேதான் தாவீது, “நித்திய வழியிலே என்னை நடத்தும்” (சங். 139:24). “உமது நாமத்தினிமித்தம் எனக்கு வழிகாட்டி, என்னை நடத்தியருளும்” (சங். 31:3) என்று மன்றாடினார். தேவபிள்ளைகளே, ஆவியானவரின் நடத்துதலுக்கு பரிபூரணமாய் ஒப்புக்கொடுங்கள். அதுவே செம்மையான வழி. தேவனுடைய சித்தத்தின்படியான வழியே நித்திய கனமகிமைக்குள் உங்களை வழிநடத்தும்.
நினைவிற்கு:- “இஸ்ரவேலின் பரிசுத்தராயிருக்கிற உன் மீட்பரான கர்த்தர் சொல்லுகிறதாவது: பிரயோஜனமாயிருக்கிறதை உனக்குப் போதித்து, நீ நடக்க வேண்டிய வழியிலே உன்னை நடத்துகிற உன் தேவனாகிய கர்த்தர் நானே” (ஏசா. 48:17).