AppamAppam - Tamil

டிசம்பர் 26 – கர்த்தர் தருவார்!

“நீ நிலத்தில் விதைக்கும் உன் விதைக்கு அவர் மழையையும், நிலத்தின் பலனாகிய ஆகாரத்தையும் தருவார்; அது கொழுமையும் புஷ்டியுமாய் இருக்கும்” (ஏசா. 30:23).

கர்த்தர் உங்களை ஆசீர்வதிக்க நினைத்திருக்கிறார். நிச்சயமாகவே அவர் உங்களுக்கு நன்மையானதைத் தருவார்.

விஞ்ஞானிகள் இந்த உலகத்திற்கு “ஐன்ஸ்டீனின் உலகம்” என்று பெயர் சூட்டியிருக்கிறார்கள். காரணம், இந்த உலகத்திலுள்ள எல்லா ஜனங்களிலும் அவரையே தலை சிறந்த அறிவாளியாகவும், விஞ்ஞானியாகவும் தெரிந்தெடுத்திருக்கிறார்கள். ஐன்ஸ்டீன் என்ற விஞ்ஞானிதான் அணுகுண்டுவின் தத்துவத்தைக் கண்டுபிடித்தவர். அவருடைய அறிவும், ஞானமும் எல்லோராலும் பாராட்டப்படுகின்றன. அவர் ஆபிரகாமின் வழியிலே வந்த யூதர் ஆவார்.

ஒரு காலத்தில், கலிலியோ என்பவர் வானத்து நட்சத்திரங்களையெல்லாம் ஆராய்ந்து தன்னுடைய அறிவுத் திறமையை வெளிப்படுத்தினார். அவரும் ஒரு யூதர். தாமஸ் ஆல்வா எடிசன், நியூட்டன் என்பவர்களெல்லாம்கூட யூதர்களே. உலகத்தில் வாழ்ந்த விஞ்ஞானிகளில் 95 சதவிகிதம் யூதர்கள்தான். யூதர்கள் அவ்வளவு ஆசீர்வதிக்கப்படக் காரணம் என்ன? ஆம், கர்த்தர் ஆபிரகாமை நினைத்தருளி தலைமுறை தலைமுறையாக ஆபிரகாமின் சந்ததியை ஆசீர்வதிக்க சித்தம் கொண்டார். ‘ஆபிரகாம் எல்லாவற்றிலும் கர்த்தருக்கு தசமபாகம் கொடுத்தான்’ (ஆதி. 14:20, எபி. 7:2). அதுபோல யாக்கோபும்கூட கர்த்தரிடத்தில் உடன்படிக்கை செய்து “தேவரீர் எனக்குத் தரும் எல்லாவற்றிலும் உமக்குத் தசமபாகம் செலுத்துவேன் என்று சொல்லிப் பொருத்தனைப் பண்ணிக்கொண்டான்” (ஆதி. 28:22). இதினிமித்தம் அவருடைய சந்ததி தலைமுறை தலைமுறையாக ஆசீர்வதிக்கப்பட்டு வருகிறது.

இரண்டாம் உலக மகா யுத்தத்தின்போது அமெரிக்காவும் ரஷ்யாவும் ஜெர்மனியை தோற்கடித்தன. அப்போது அவர்கள் உள்ளே நுழைந்து தேடியதெல்லாம் அங்கேயுள்ள விஞ்ஞானிகளைத்தான். அத்தனை விஞ்ஞானிகளும் யூதர்களாய் இருந்தார்கள். யூதர்களுடைய அறிவைப் பயன்படுத்திக்கொள்ளும்படி ரஷ்யா அந்த யூதர்களைக்கொண்டு முதன் முதலில் விண்வெளியில் ஆராய்ச்சி நடத்தியது. அவர்கள் அங்கே நடந்து காண்பித்தார்கள். அமெரிக்காவோ அந்த விஞ்ஞானிகளைப் பயன்படுத்தி சந்திர மண்டலத்தில் போய் இறங்கினார்கள். இன்றைக்கும் நவநாகரீக கண்டுபிடிப்புகளான தையல் இயந்திரமானாலும் சரி, டெலிவிஷனானாலும் சரி, மின்சார விளக்கானாலும் சரி, எல்லாமே யூத விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகளாகத்தான் இருக்கின்றன.

நீங்கள் மனமுவந்து கர்த்தருக்கென்று தாராளமாய்க் கொடுங்கள். உங்களுக்காக பிதா தம்முடைய ஒரேபேறான குமாரனையே கொடுத்தாரே. அந்தக் குமாரனாகிய இயேசு தம்முடைய கடைசி சொட்டு இரத்தத்தையும் உங்களுக்காக ஊற்றிக் கொடுத்தாரே. அவருடைய மாம்சமெல்லாம் பிட்கப்பட்ட நிலையில் பாவ மன்னிப்பையும் இரட்சிப்பின் சந்தோஷத்தையும் கொடுத்தாரே. தேவபிள்ளைகளே, நீங்கள் அவருக்கு மனமுவந்து கொடுக்க வேண்டாமா?

நினைவிற்கு:- “உன் பொருளாலும், உன் எல்லா விளைவின் முதற்பலனாலும் கர்த்தரைக் கனம்பண்ணு. அப்பொழுது உன் களஞ்சியங்கள் பூரணமாய் நிரம்பும்; உன் ஆலைகளில் திராட்சரசம் புரண்டோடும்” (நீதி. 3:9, 10).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.