No products in the cart.
டிசம்பர் 24 – கர்த்தர் பெரியவராயிருப்பார்!
“அவர் (கர்த்தர்) பெரியவராயிருப்பார், உன்னதமானவருடைய குமாரன் என்னப்படுவார்” (லூக். 1:32).
கர்த்தர் பெரியவர். அவரே கனத்திற்கும் மகிமைக்கும் பாத்திரரானவர். அவருக்கு ஒப்பானவர் ஒருவருமில்லை.
ஒரு முறை ஒரு பெரிய குத்துச் சண்டை வீரன், தன்னோடு போட்டியிட்ட எல்லா எதிரிகளையும் மடக்கி வீழ்த்தினான். எல்லாரும் கைத்தட்டி, அவனைப் பாராட்டிய போது அவனுக்குத் தலைக்கனமும், பெருமையும் வந்துவிட்டது. ‘பூமியிலுள்ள எல்லா பலசாலிகளையும் நான் வென்று விட்டேன். கடவுள் என்று ஒருவர் இருப்பாரானால் அவர் என்னிடத்தில் வரட்டும், நான் அவரையும் மடக்கி ஜெயம் பெறுவேன். நான் அவரைவிட பெரியவன் என்று நிரூபிப்பேன்’ என்றான்.
அவன் அப்படி சொல்லிவிட்டு, ஆண்டவருக்கு சவால் விடுவதுபோல வானத்தை அண்ணாந்து பார்த்தான். அப்பொழுது எங்கிருந்தோ ஒரு குளவி அவனுடைய தலைக்கு மேலாகப் பறந்து வந்து சுற்றியது. மறுவினாடி அந்த குளவி மல்யுத்தக்காரனின் வழுக்கைத் தலையில் ஒரு கொட்டு கொட்டிவிட்டுப் பறந்து சென்றுவிட்டது. அந்த குளவியின் கொடுக்கிலுள்ள கொடிய விஷம் அவனுடைய தலையில் இறங்கியது. மேடையிலேயே ஐயோ அம்மா என்று அலறித் துடித்தான். சில வினாடி நேரத்திற்குள் எல்லாருக்கும் முன்பாக செத்து விழுந்தான்.
கர்த்தர் பெரியவர். அவரை எதிர்த்து நிற்க யாராலும் முடியாது. வேதம் கேட்கிறது, “மனுஷனே, தேவனோடு எதிர்த்துத் தர்க்கிக்கிற நீ யார்? உருவாக்கப்பட்ட வஸ்து உருவாக்கினவனை நோக்கி: நீ என்னை ஏன் இப்படி உண்டாக்கினாயென்று சொல்லலாமா?” (ரோமர் 9:20). எந்த மனுஷனைப் பார்க்கிலும், எந்த வஸ்துக்களைப் பார்க்கிலும், எந்த ஆளுகையையும், துரைத்தனங்களையும் பார்க்கிலும் கர்த்தர் பெரியவர்.
எபிரெயருக்கு எழுதிய நிருபம் முழுவதையும் வாசித்துப் பார்த்தால் ஒவ்வொரு அதிகாரமும் கர்த்தர் எப்படி எல்லாரிலும் பெரியவர் என்பதை விவரித்துக்கொண்டே வருவதைக் காணலாம். முதலாவது அதிகாரத்திலே, அவர் தேவதூதரிலும் பெரியவர் என்பதை அறியலாம். “தமது முதற்பேறானவரை உலகத்தில் பிரவேசிக்கச்செய்த போது: தேவதூதர் யாவரும் அவரைத் தொழுதுகொள்ளக்கடவர்கள் என்றார்” (எபி.1:6). தேவதூதர்கள் பலவான்கள்தான். ஆனாலும், தேவதூதர்களால் ஆராதிக்கப்படுகிற நம்முடைய தேவன் எல்லாரிலும் பெரியவர்.
எபிரெயருக்கு எழுதிய நிருபம் மூன்றாம் அதிகாரத்தில் அவர் மோசேயிலும் பெரியவர் என்பதைக் காணலாம். மோசே கொண்டுவந்த நியாயப்பிரமாணம் இஸ்ரவேலரை அடிமைத்தனத்திற்குள்ளாக்கிற்று. ஆனால் கர்த்தர் கொண்டு வந்த கிருபையின் பிரமாணம் அடிமைத்தனத்திலிருந்து விடுதலையாக்கிற்று (எபி. 3:2,3).
தேவபிள்ளைகளே, கர்த்தர் ஒருவரே மகாபெரியவர். அவரை உயர்த்தி மகிமைப்படுத்துங்கள்.
நினைவிற்கு:- “நாம் நம்பியிருக்கிற ஆனந்த பாக்கியத்துக்கும், மகா தேவனும் நமது இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவினுடைய மகிமையின் பிரசன்னமாகுதலுக்கும் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும்படி நமக்குப் போதிக்கிறது” (தீத்து 2:13).