No products in the cart.
டிசம்பர் 23 – கர்த்தர் தந்த தீபம்!
“மனுஷனுடைய ஆவி கர்த்தர் தந்த தீபமாயிருக்கிறது” (நீதி. 20:27).
“கர்த்தர் தந்த தீபம்” என்கிற வார்த்தை எத்தனை அருமையாய் இருக்கிறது! கர்த்தர் உங்களுக்கு ஒரு தீபத்தைத் தந்திருக்கிறார். அந்த தீபம் இருளிலே பிரகாசிக்கிறது. நடக்கவேண்டிய வழியை உங்களுக்குக் காண்பிக்கிறது. அது என்ன தீபம்? மனுஷனுடைய ஆவியே கர்த்தர் தந்த அந்த தீபமாய் இருக்கிறது.
மனுஷனுக்கு ஆவியுண்டு, ஆத்துமாவுமுண்டு. ஆவியும் ஆத்துமாவும் சரீரத்தில் வாசம் செய்கின்றன. சரீரம் மரணமடைந்து அழிந்துபோனாலும், அவனுடைய ஆத்துமாவும், ஆவியும் தொடர்ந்து ஜீவிக்கின்றன. அவை முடிவற்றவை, நித்தியமானவை.
சரீரத்தின் மூலமாய் இந்த உலகத்தோடு நீங்கள் தொடர்பு கொள்ளுகிறீர்கள். அப்படி தொடர்பு கொள்ளுவதற்கு ஐம்புலன்களை சரீரத்திலே ஆண்டவர் வைத்திருக்கிறார். ஆனால், ஆவிக்குரிய உலகத்தோடு தொடர்பு கொள்ளுவதற்கு மனிதனுடைய ஆவியையே கர்த்தர் தீபமாகக் கொடுத்திருக்கிறார். உங்களுக்குள்ளே கொடுத்திருக்கிற அந்த ஆவியின் மூலமாகவே நன்மை தீமை இன்னதென்பதையும், தேவனுடைய சித்தத்தையும் அறிந்து கொள்ளுகிறீர்கள்.
பல வேளைகளிலே நீங்கள் தவறான தீர்மானங்களை எடுக்கும்போது, உங்களுக்குள்ளே இருக்கிற ஆவியிலும் ஒரு கலக்கம் ஏற்படுகிறது. தவறான செயல்களை செய்துவிடும்போது மனசாட்சி ஓலமிடுகிறது. குற்ற உணர்வு வாதிக்கிறது. சில ஆட்களைப் பார்க்கும்போது, உள் உணர்வு ஜாக்கிரதையாயிருக்கும்படி அபாயக் குரல் எழுப்புகிறது. இதற்கெல்லாம் காரணம் என்ன? மனுஷனுடைய ஆவி கர்த்தர் தந்த தீபமாய் அவனுக்குள் இருக்கிறதே இதற்கு காரணம்.
மனுஷனுடைய ஆவியோடு தேவனுடைய ஆவியும் இணைக்கப்படும்போது, கர்த்தர் தம்முடைய சித்தத்தின் பாதையிலே உங்களை அருமையாக வழிநடத்திச் செல்லுவார். மனுஷனின் ஆவியோடுதான் பரிசுத்த ஆவியானவரும் இணைந்து செயல்படுகிறார். இயேசு சொன்னார், “சத்தியஆவியாகிய அவர் வரும்போது, சகல சத்தியத்திற்குள்ளும் உங்களை நடத்துவார்” (யோவான் 16:13). ஆகவே, சத்திய ஆவியானவர் உங்களுடைய ஆவியோடு இணைந்து, சத்தியம் என்ன, தேவ சித்தம் என்ன, நீங்கள் நடக்க வேண்டிய வழி என்ன என்பதையெல்லாம் தெளிவாக போதித்தருள்வார். வேதம் சொல்லுகிறது, “பரிசுத்த ஆவியாகிய தேற்றரவாளனே எல்லாவற்றையும் உங்களுக்குப் போதித்து, நான் உங்களுக்குச் சொன்ன எல்லாவற்றையும் உங்களுக்கு நினைப்பூட்டுவார் (யோவான் 14:26).
தேவபிள்ளைகளே, நீங்கள் பாதை தெரியாமல் திகைக்கிறீர்களா? எந்த வழியில் செல்வதென்று தெரியாமல் தடுமாறுகிறீர்களா? முக்கியமான தீர்மானம் எடுக்க வேண்டிய சூழ்நிலையிலே அங்கலாய்த்துக் கொண்டிருக்கிறீர்களா? ஆவியானவரைச் சார்ந்து கொள்ளுங்கள். அப்பொழுது ஆவியானவர் உங்களை தேவ சித்தத்தின்படி நடத்துவதை நீங்கள் நன்றாக உணர முடியும். கர்த்தர் உங்களுக்குக் கொடுத்த தீபத்தை பயன்படுத்திக் கொள்ளுங்கள். அந்த தீபம் இருளிலே பிரகாசிக்கும். நீங்கள் நடக்கவேண்டிய சரியான வழியை உங்களுக்குக் காண்பிக்கும்.
நினைவிற்கு:- “நீங்கள் அவராலே பெற்ற அபிஷேகம் உங்களில் நிலைத்திருக்கிறது, அந்த அபிஷேகம் சகலத்தையுங்குறித்து உங்களுக்குப் போதிக்கிறது” (1 யோவான் 2:27).
