No products in the cart.
டிசம்பர் 22 – கர்த்தர் காப்பார்!
“கர்த்தர் உன்னை எல்லாத் தீங்குக்கும் விலக்கிக் காப்பார்; அவர் உன் ஆத்துமாவைக் காப்பார்” (சங். 121:7).
வேதத்தில், “கர்த்தர் உன்னைக் காக்கிறவர்” என்கிற வாக்குத்தத்தம் அதிக இடங்களில் இடம் பெறுகிறது. இன்றைக்கு நீங்கள் எந்தச் சூழ்நிலையில் இருந்தாலும் கர்த்தர் உங்களைக் காக்கிறவராய் இருக்கிறார்.
சில வேளைகளில் உங்களுடைய வாழ்க்கையில் முக்கியமான தீர்மானங்களை எடுக்க வேண்டியதிருக்கிறது. அந்த தீர்மானங்களின் அடிப்படையில்தான் உங்களுடைய முழு வாழ்க்கையின் எதிர்காலமே அமையும் என்பதை அறிகிறீர்கள். ஆனாலும் தீர்மானத்தை உறுதி செய்ய முடியாமல் உங்கள் உள்ளம் கலங்குகிறது. வலதுபுறம் செல்வதா அல்லது இடதுபுறம் செல்வதா, இந்த குறிப்பிட்ட ஆளை நம்பி பொறுப்பை ஒப்புக்கொடுப்பதா அல்லது வேண்டாம் என்று சொல்லிவிடுவதா என்று தெரியாமல் அங்கலாய்க்கிறீர்கள். சில மனுஷரைப் பிரியப்படுத்த நினைப்பதால் உள்ளம் சமாதானத்தை இழந்து விடுகிறது.
தீர்மானம் செய்ய முடியாமல் உங்கள் உள்ளம் கலங்கும்போது, அமைதியாய் ஆண்டவரை நோக்கிப் பார்த்து, “ஆண்டவரே நானாகவே ஒரு தீர்மானம் செய்வேன் என்றால் என் வாழ்க்கை வீணாகிவிடக்கூடும். இந்த சூழ்நிலையில் என் எதிர்காலத்தின் முழு பொறுப்பையும் உம்முடைய கரத்திலே ஒப்புவிக்கிறேன். எனக்காக நீரே தீர்மானம் செய்ய வேண்டும். உம்முடைய சித்தத்தை எனக்கு வெளிப்படுத்த வேண்டும்” என்று ஜெபியுங்கள். அப்போது கர்த்தர் தமக்குப் பிரியமில்லாதவற்றை விலகும்படி செய்வார். புதிய பாதையைக் கட்டாயம் திறப்பார். கர்த்தர் உங்களை எல்லாத் தீங்குக்கும் விலக்கிக் காப்பார்.
வேதத்திலே, 121-ம் சங்கீதம் முழுவதும், வாக்குத்தத்தங்களினால் நிரம்பியிருக்கிறது. அநேகர் இந்த 121-ம் சங்கீதத்தை மனப்பாடமாய் சொல்லக்கூடும். நீங்கள் அர்த்தத்தை உணர்ந்தவர்களாய், கர்த்தரைத் துதிக்கிற துதியோடும், விசுவாசத்தோடும் இச்சங்கீதத்தை வாசியுங்கள். “உன் காலைத் தள்ளாடவொட்டார்; உன்னைக் காக்கிறவர் உறங்கார். கர்த்தர் உன்னைக் காக்கிறவர்; கர்த்தர் உன் வலதுபக்கத்திலே உனக்கு நிழலாயிருக்கிறார். கர்த்தர் உன்னை எல்லாத் தீங்குக்கும் விலக்கிக் காப்பார்; அவர் உன் ஆத்துமாவைக் காப்பார்” (சங். 121:3, 5, 7).
நீங்கள் கர்த்தரிடத்தில் உங்களை ஒப்புக்கொடுக்கும்போது, அவர் காக்கிறவர் என்பதை திட்டமும் தெளிவுமாய் அறிந்துகொள்ளுவீர்கள். அப்பொழுது நீங்களும் அப். பவுலோடுகூட சேர்ந்து ‘நான் விசுவாசித்திருக்கிறவர் இன்னார் என்று அறிவேன். அவரிடத்தில் ஒப்புக்கொடுத்ததை அந்நாள் வரைக்கும் காத்துக்கொள்ள வல்லவராயிருக்கிறார்’ என்று மகிழ்ச்சியுடன் சொல்ல முடியும். ஆம், நீங்கள் காக்கப்படுவீர்கள்!
தேவபிள்ளைகளே, நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை (யோசுவா 1:5) என்று யோசுவாவுக்கு வாக்களித்த தேவனாகிய கர்த்தர், நான் உனக்குச் சொன்னதைச் செய்யுமளவும் உன்னைக் கைவிடுவதில்லை என்று யாக்கோபுக்கு வாக்களித்த கர்த்தர் (ஆதி. 28:15), உன்னைக் காப்பேன் என்று உங்களுக்கு வாக்களிக்கிறார். வாக்களித்தவர் உண்மையுள்ளவர். ஆகவே சந்தோஷத்துடன் கர்த்தரைத் துதியுங்கள்.
நினைவிற்கு:- “தேவன் நமக்கு அடைக்கலமும் பெலனும், ஆபத்துக்காலத்தில் அநுகூலமான துணையுமானவர்” (சங். 46:1).