AppamAppam - Tamil

டிசம்பர் 20 – கர்த்தர் காத்திருப்பார்!

“ஆனாலும் உங்களுக்கு இரங்கும்படி கர்த்தர் காத்திருப்பார், உங்கள்மேல் மனதுருகும்படி எழுந்திருப்பார்; கர்த்தர் நீதிசெய்கிற தேவன்; அவருக்குக் காத்திருக்கிற அனைவரும் பாக்கியவான்கள்” (ஏசாயா 30:18).

நம்முடைய தேவன் இரக்கத்தையும், அன்பையும், மனதுருக்கத்தையும் வெளிப்படுத்துகிற தேவன். அந்த அன்பும், மனதுருக்கமும் அவருடைய குணாதிசயங்களாகவே காணப்படுகின்றன. நீங்கள் கர்த்தரிடமிருந்து அளவில்லா இரக்கத்தைப் பெற்றுக்கொள்ளுவதற்கு இதுவே காரணம். ஒரு நாள் கர்த்தர் மோசேயைப் பார்த்து, “எவன்மேல் இரக்கமாயிருக்கச் சித்தமாயிருப்பேனோ, அவன்மேல் இரக்கமாயிருப்பேன், எவன்மேல் உருக்கமாயிருக்கச் சித்தமாயிருப்பேனோ அவன்மேல் உருக்கமாயிருப்பேன் என்றார்” (ரோமர் 9:15).

கர்த்தர் இரக்கத்தை எப்போது காண்பிப்பார் என்பது உங்களுக்குத் தெரியாமலிருக்கலாம். ஆனால் கர்த்தர் அதற்கான காலத்தையும், நேரத்தையும் திட்டமிட்டு வைத்திருக்கிறார். அந்த நேரத்திற்காக நீங்கள் காத்திருக்க வேண்டும். வேதம் சொல்லுகிறது, “அவருக்குக் காத்திருக்கிற அனைவரும் பாக்கியவான்கள்” (ஏசா. 30:18).

தேவன் பொறுமையோடு காத்திருக்கும்போது, உங்களாலே பொறுமையாய் காத்திருக்க முடிவதில்லை. ஆகவேதான் முறுமுறுக்கிறீர்கள். தேவனுக்கு விரோதமாய்ப் பேசுகிறீர்கள். சங்கீதக்காரன் சொல்லுகிறான், “நான் கூப்பிடுகிறதினால் இளைத்தேன்; என் தொண்டை வறண்டுபோயிற்று; என் தேவனுக்கு நான் காத்திருக்கையால், என் கண்கள் பூத்துப்போயிற்று” (சங். 69:3). “என் ஆத்துமா மிகவும் வியாகுலப்படுகிறது; கர்த்தாவே, எதுவரைக்கும் இரங்காதிருப்பீர்” (சங். 6:3). உம்முடைய இரக்கத்தைக் காண்பிக்க இன்னும் எவ்வளவு காலமாகும் என்று சங்கீதக்காரனைப்போல நீங்களும் சோர்ந்துபோகிறீர்கள் அல்லவா? ஆனால் கர்த்தர் உங்களுக்கு இரக்கம் செய்யும்படி காத்திருக்கிறார்.

கிறிஸ்மஸ் நாளிலே என்னுடைய மனைவி அருமையான கேக்குகளை செய்வார். அவர் அந்த கேக் செய்வதற்கான மாவைப் பிசையும்போது பிள்ளைகளும் கூட இருப்பார்கள். பிசைந்து வைத்த மாவை oven-ல் வைத்து, வேகும்படியாக அதை செட் பண்ணி வைப்பார்கள். கேக் எப்பொழுது தயாராகும் என்று பிள்ளைகள் ஆவலாய்ப் பார்த்துக் கொண்டேயிருப்பார்கள்.

அப்போது மகன், ‘அம்மா, அந்த கேக் தயாராகிவிட்டது. கொடுத்துவிடுங்கள். எவ்வளவு நேரம் காத்துக்கொண்டிருப்பது’ என்று கேட்பான். அதற்கு என் மனைவி சாந்தமாக ‘நான் அவசரப்பட்டு எடுத்துக்கொடுக்க முடியாது. ஒருவேளை உள்ளே அது வேகாமல் இருந்தால் அதை நீ முழுமையாய் சாப்பிட முடியாது. ஆகவே வேகும்வரை பொறுமையாய் காத்திரு. நானும் சரியான நேரத்திற்காகக் காத்திருக்கிறேன்’ என்று சொல்லுவார். அப்படித்தான் பரலோக தேவனும் சரியான நேரத்திலே உங்களுக்கு இரக்கத்தைச் செய்யும்படி காத்திருக்கிறார்.

தேவபிள்ளைகளே, நீங்கள் பிரச்சனையின் நேரத்திலும், போராட்டத்தின் நேரத்திலும் சோர்ந்து போய்விடக்கூடாது. கர்த்தருக்காக பொறுமையுடன் காத்திருக்கும்போது, கர்த்தர் நிச்சயமாய் உங்களைப் பெரிதாய் ஆசீர்வதிப்பார்.

நினைவிற்கு:- “கர்த்தருக்காகப் பொறுமையு டன் காத்திருந்தேன்; அவர் என்னிடமாய்ச் சாய்ந்து, என் கூப்பிடுதலைக் கேட்டார்” (சங். 40:1).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.